Friday, December 3, 2021

குப்பைத்தொட்டி

பெரிய மாளிகையாக இருக்கட்டும், அல்லது ஒரு சிறிய குடிசை. குப்பைத்தொட்டி இல்லாத வீடு இருக்க முடியுமா? தினம் வீட்டைப் பெருக்கி முடித்தபின் குப்பை அள்ளிப் போடுவதற்காக ஒரு பழைய பக்கெட்டாவது ஒரு மூலையில் வைத்திருக்கப்படும்.  அவ்வப்பொழுது வரும் காகிதக் குப்பைகள், சுழலும் முடி, ஒட்டடை போன்ற இதர குப்பைகள் வேறு! போடுவதற்கு இடம் வேண்டுமே.

பார்க்கப்போனால், இப்பொழுதெல்லாம் நம் சுற்றுச் சூழலைக் காப்பதற்காக மக்கும் குப்பை, மக்காத குப்பை என்றும் பிரிக்கப் படுகிறது.

சில வீடுகளைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் பளிச்சென்று வைத்திருக்கும் விதத்தில் தூய்மைக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்திவத்தைப் புரிந்து கொள்ளலாம். சிலருடைய வீடே குப்பைத்தொட்டியாகத் தென்படும். எல்லா இடத்திலும் பொருள்கள் இரைந்து கிடக்கும். தூசி, தும்பு என்று கண்ணில் தென்படும் எல்லா மேற்பரப்புகளிலும் காணலாம். ‘சில பேர் வீட்டை எப்பொழுதும் துடைத்துக்கொண்டே இருப்பார்கள். நாம என்ன ஹோட்டலிலா இருக்கிறோம்? வீடு, வீடாக இருக்க வேண்டும், கொஞ்சம் குப்பை இருந்தால்தான் வாழ்ந்த வீடாகத் தெரியும்,’ என்ற ஒரு கருத்தையும் தனக்கு சாதகமாகக் கூறுவார்கள். ஆமாம் என்று தலையாட்டுவதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலை?

இன்னும் சிலர் மேற்பார்வைக்கு சுத்தமாக வைப்பார்கள் ஆனால் உள் அறைகள் அதற்கு நேர்மாறாகக் குப்பையாக இருக்கும். அலமாரிகளைத் திறக்கத் தலை கவசம் அணிவது ஒரு நல்ல உக்தி என்று கூட சொல்லலாம். அதைத் திறக்கும் போது மண்டைமீது என்ன வந்து விழும் என்று யாராலும் சொல்ல முடியாது.

ஆனால் அப்படிப்பட்ட வீடுகளில் கூடக் குப்பைத் தொட்டி இருக்கும்.

உங்களுக்குத் தெரியுமா? ராஜஸ்தானில் வீட்டில் கல்யாணம் நடக்கும் நேரத்தில் பல வகையான பூஜைகளில் குப்பைத்தொட்டிக்கு நன்றி சொல்லி வணங்குவதும் ஒன்று. அது இல்லாமல் நம் வீட்டை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்?

நம்மூர்களில் கூட, கார்த்திகை பண்டிகை அன்று குப்பைகொட்டும் இடத்திலும் அகல் விளக்கு வைக்கும் வழக்கம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அட, சரிப்பா, இப்பொழுது குப்பைத் தொட்டியை வைத்து எதற்கு இவ்வளவு சர்ச்சை, ஆராய்ச்சி? அதை யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லையே?

அதுதானே சரி? யாராவது குப்பைத்தொட்டியைக் கிளறி எடுப்பதை விரும்புவார்களா? பழைய துணிகள், காகிதங்கள், உணவு, எதுவாக இருந்தாலும், ஒரு முறை குப்பையில் போட்டதை எடுப்பது அரிதான விஷயம். மிகவும் மதிப்பான பொருளையோ அவசியமான காகிதத்தையோ கவனிக்காமல் போட்டுவிட்டோமோ என்று சில நேரங்களில் நம் அருவருப்பை மறந்து அதை நோண்டுவோமே தவிர மற்ற நேரங்களில் நாம் குப்பையைக் கிளறுவதில்லை.

மனதின் குப்பைக்கு என்ன வழி?

அப்படி இருக்க, நம் மனதில் எழும் குப்பையைக் கிளறிக்கொண்டே இருக்கிறோமே? பலமுறை, ஒரே சிந்தனை தரையில் கிடக்கும் தலைமுடியைப் போல் சுழன்று சுழன்று வரும். அப்படி சுழலும் போது, சுற்றி உள்ள குப்பைகளையும் சேர்த்து இன்னும் பெரிதாகிக்கொண்டே போகும். எங்கேயாவது சிக்கிக்கொண்டு, நம்மை சஞ்சலப்படுத்திக்கொண்டே இருக்கும்.

சிந்தனைகளும் அப்படித்தான். ஒரு நினைப்பு மனதில் எழுந்து சுற்றிச் சுற்றி வரும். அதுவே பழைய நிகழ்ச்சிகள், அதனால் வரும்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் என்று நம் சிந்தனைகளைப் பெருக்கி, அதை பூதாகாரமாக்கி நம்மை வதைத்து விடும்.

மற்றவர்களுடன் பேசுவது ஒரு வித வடிகால் என்று சிலர் நம்புகிறார்கள். அது வடிகாலாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் அதில் இன்னும் அதிகம் குப்பையைச் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, நம்மிடம்  யாரோ ஒருவர் சொன்ன வார்த்தை நம்மை புண் படுத்தியதாக நம் நண்பரிடம் கூறுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். “அவனே அப்படித்தான். நீதான் அவன் நல்லவன் என்று நம்புகிறாய். போன வாரம் என்ன செய்தான் தெரியுமா?” என்று ஆரம்பித்து, சாதாரணமாக நடந்த விஷயத்திற்குக் காது, மூக்கு சேர்த்து ஒரு உலக யுத்தம் ஏற்படுத்தும் அளவுக்கு எடுத்துச்செல்லக் கூடும். அவ்வளவுதான். நம் மனதில் அதுவும் சேர்ந்து நம்முடைய மனக் கசப்பை அதிகரிக்கச் செய்யும்.

நம் மனதில் எந்த சஞ்சலமுமே இல்லாமல் இருந்திருக்கலாம். நம் நண்பர் ஒருவர், மற்றொருவரிடம் ஏதோ ஒரு ஆதங்கத்தில் நம்மைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். ‘இதை அவளிடம் சொல்லாதே,’ என்றும் கூறியிருப்பார்கள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த நபர், நமக்கு நன்மை செய்வதாக நினைத்து, முதல் காரியமாக அதை நம்மிடம் சொல்லித்தான் மறு வேலை என்று கருதி நம்மிடமே வந்து சொல்வார்கள் பாருங்கள… மனதில் அதுவும் இடத்தைப் பிடித்துக்கொண்டு நம்மை வாட்டி எடுக்க ஆரம்பிக்கும்.

சமூக ஊடகங்களின் ஆதிக்கம்

நாமே குப்பை போடுகிறோம், தவிற நம் மனதில் வெளியிலிருந்தும் குப்பை வந்து விழுகிறது. இது போதாதென்று, சமூக ஊடகங்களில் நடக்கும் பல்வேறு விஷயங்களின் சர்ச்சைகளும் நம்மில் மன உளைச்சலைக் கிளப்பி விடுகின்றன.

அரசியல், சினிமா, மருத்துவம், பொருளாதாரம், உறவுகள், எந்தத் துறையை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதைப்பற்றி நடக்கும் சர்ச்சைகளைப் பார்த்தால் எல்லோருக்கும் எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கின்றன! அப்பப்பா!

நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன? நமக்கும் பகிர்ந்துகொள்ள எத்தனை அபிப்பிராயங்கள் இருக்கின்றன! நமது கைபேசி அவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதை மிகவும் சுலபமானதாக ஆக்கிவிட்டது! தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு கூட நாம் மற்றவர்களுடன் விவாதிக்கலாம்! எதிர் தரப்பினர் ப்ரஸ்தாபிக்கும் விவாதத்தை எப்படி உடைப்பது என்பதே ஒரு பெரிய பொழுதுபோக்கு ஆகிவிடுகிறது. பொழுது போக்காக இருந்தால் பரவாயில்லையே! அதனால் நம் மனப்போக்கும் தானே பாதிக்கப் படுகிறது!

சொற்களும் குப்பையே

யோசித்துப்பார்த்தால், நம் மனதில் இருக்கும் குப்பையின் காரணங்கள் வார்த்தைகளே. வார்த்தைகள் என்றால் அதனுடன் அச்சொல்லின் பொருளும் உள்ளடங்கி இருக்கிறது. சொல்லும் அதன் பொருளும் சிவனும் சக்தியும் போல என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். பொருளின்றிச் சொல் இல்லை, சொல் இருக்குமிடத்தில் பொருளும் இருக்கிறது.

அம்மா என்றவுடன் நமக்கு அதன் பொருள் விளங்கிவிடுகிறது. ‘கோமிடா’ என்று நான் சொன்னால் அதன் பொருள் உங்களுக்குத் தெரியாவிட்டால் அது வார்த்தையா அல்லது உளறலா என்று உங்கள் மனதில் சந்தேகம் ஏற்படும்

பொருளுடன் இணைந்திருப்பது உணர்ச்சி. ‘அம்மா’ என்றவுடன் நம் மனதில் இனிமையான உணர்வுகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்து வருத்தம் அல்லது கோபம் கூடக் கலந்திருக்கலாம்.

நம் மன உளைச்சலுக்கும் மனதில் வளர்ந்து வரும் குப்பைகளுக்கும் இந்த வார்த்தைகளே பொருப்பு. மௌனமாகவோ உரக்கவோ வார்த்தைகள் நம்மைச் சுற்றி எப்பொழுதும் உலாவிக்கொண்டிருக்கின்றன. ஒன்று பத்தாகி, பத்து நூறாகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

நம் மனதில் எப்பொழுதும் ஏதோ ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நடந்தது, நடக்காதது, நடக்கக்கூடியது, என்று சிறு துளி பெரும் வெள்ளமாக மாறி நம்மை மூழ்கடித்துவிடும். குழப்பம், வருத்தம், சந்தேகம், கோபம், தாபம், பயம், தற்பெருமை, சிறிய மனப்பான்மை, குறுகிய மனப்பான்மை என்று இந்த வார்த்தைகள் நம்மை வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாக்கி விடுகின்றன, அடிமைப் படுத்துகின்றன.

இந்தச் சுமை வாழ்க்கையின் அழகை மறைத்து தூசிபோல எதிலும் படர்ந்துவிடும். நன்மையிலும் திருப்தி காண விடாது. தீமையிலிருந்து வெளியே வரும் பாதையை மறைத்து விடும். ஏன், இது நம் கண்ணையே மறைத்து விடுகிறது என்றுகூடச் சொல்லலாம்.

தேவை ஒரு வடிகட்டி

ஓர் எழுத்தாளராகிய எனக்கு வார்த்தைகள் இன்னும் பல மடங்கு அதிகம் பரிச்சயம் ஆனவை என்று சொல்லலாம். அதாவது, நாம் எழுதும்போது எதை வெளிப்படுத்தவேண்டும், எப்படி வெளிப்படுத்த வேண்டும், எதைச் சொல்லாமல் விட வேண்டும் என்று மதிப்பாய்வு செய்து தான் எழுத வேண்டும் என்பதால் முதலில் எழுதியதை பல முறை மாற்றி, அதை அழகுபடுத்தி, வேண்டாததை விலக்கி அளவாக, தெளிவாக வழங்க வேண்டும்.

யாருமே எழுதும்போது கவனித்துப் பாருங்கள். கையால் எழுதும்போது, வார்த்தைகள் சரியாக வரவில்லையென்றால் காகிதத்தைக் கிழித்துக் குப்பையில் போடுவதை நாம் எல்லோரும் அறிவோம். கணினியில் எழுதும்போதுகூட, அழித்து அழித்து எழுதுவது ஒரு சராசரியான விஷயம். வேண்டாத கோப்புகளை நீக்கும்போது அவை குப்பைத்தொட்டிச் சின்னத்தைக் கொண்ட ‘ரீசைக்கிள் பின்’ என்ற ஒரு இடத்தில் போய் உட்காருகிறது.

ஆனால், எழுதும்போது நாம் காட்டும் கவனத்தை பேசும்போது காட்டுவதில்லை. நம் மனதிற்கும் வாய்க்கும் இடையில் எந்த விதமான வடிகட்டியும் இல்லாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம். சொன்னபின் அழிக்கவோ விலக்கவோ முடியாது.

அப்படிக் கொட்டியதனால் நம் மனதை விட்டு அது அகன்று விட்டது என்று ஆகி விடாது. பகிர்ந்தால் அன்பு மட்டுமில்லை, எதிர்மறையான உணர்வுகளும் வளரும். பேசுபவர் மற்றும் கேட்பவரின் மனதில் போய் இந்த வார்த்தைகள் அமர்ந்து, பிரிவையோ, மனஸ்தாபத்தையோ உருவாக்கிவிடும்.

மன்னித்துவிடு என்பதும் ஒரு வார்த்தைதான். ஆனால் சில நேரங்களில் அது வெளியே வராது. அல்லது முழு மனதுடன் வராது. அப்படியே வந்தாலும், முழு மனதுடன் ஏற்கப்படாது. உன் மனத்தாங்கலுக்குக் தானும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற ஒப்புதலை கேட்பவரின் வாயிலிருந்து கொண்டுவராது.

அதனால் நாம் காதுகளால் எதை உள் வாங்குகிறோம், நம் வாயால் எதை வெளிப்படுத்துகிறோம் என்பதை கவனிப்பது மிகவும் அவசியமாகி விடுகிறது. ஏனென்றால், வேண்டாத குப்பையை அகற்ற நம் மனதில் தேவையான குப்பைத்தொட்டி எங்கே? நம் மனதிலும் அப்படி ஒரு குப்பைத்தொட்டி இருந்தால், வேண்டாத சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் எவ்வளவு  சுலபமாக தூக்கி எறிந்துவிடலாம்!

சில நேரங்களில் என் மனம் அலைபாயும்போது குப்பைத்தொட்டியில் அந்த சிந்தனைகளைப் போடுவது போல் கற்பனை செய்துள்ளேன். ஆனால், அந்தக் குப்பைத்தொட்டியை எப்படி சுத்தம் செய்வதென்று தெரிய வேண்டுமே. அது நிறம்பி வழிந்தால் மீண்டும் அதைச் சுற்றி அசிங்கமாகத்தானே இருக்கும்!

பொது இடங்களில் குப்பை

பாருங்கள், நாம் நம் வீட்டிலிருந்து குப்பையை வெளியே இருக்கும் குப்பைத் தொட்டிகளில் போட்டுவிடுகிறோம். ஆனால் அது நிறம்பி வழியும் போது, அங்கு இருக்கும் சூழல் மாசுபடுகிறது. அங்கிருந்து மாநகராட்சி அந்தக் குப்பையை எடுத்துச் சென்றாலும், மக்காத குப்பை நம் சுற்றுசூழலில் ஏற்படுத்தும் மாசை நன்கு அறிவீர்கள்.

அதே போல், குப்பை மனதில் சேரச் சேர, நம் மனதின் சூழலும் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம், மன நோய், ஏன், உடலில் கூடப் பல நோய்களுக்கு மனதே காரணமாகி விடுகிறது.

குப்பை இல்லாத இடம், அது வீடாக இருக்கட்டும், பொது இடமாக இருக்கட்டும், சுகாதாரத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் அடித்தளம். நல்ல காற்றோட்டம், வெளிச்சம், சுத்தமான நீர், இவை நம் உடல் நலத்திற்கு மிகவும் அவசியம்.

அதே போல், நம் மனதிலும் நல்ல சுகாதாரம் தேவை. சிந்தனைகளில் மூழ்கி இருந்தால் எப்பொழுதும் குழப்பங்களும், உளைச்சல்களுமே நம் மனதில் தங்கிவிடும்.

நம் அகத்தை சுத்தப்படுத்துவது எப்படி? அங்கு இருக்கும் குப்பையை நிரந்தரமாக வெளியேற்றுவது எப்படி?

சுழியக் கழிவு—ஒரு வாழ்க்கை முறை

நாம் எவ்வளவுதான் வீட்டைச் சுத்தப் படுத்தினாலும், மக்கும் மற்றும் மக்காத குப்பையைப் பிரித்தாலும் வளரும் ஜனத்தொகையினால் குப்பையை சமாளிப்பது கடினமாகி வருகிறது. இதனால் மண், நீர், காற்று என்று எல்லாமே மாசுபடுகிறது.

இதை குறைப்பதற்கு, ஒரு சிலர் சுழியக் கழிவு (Zero Waste) வாழ்க்கை முறையைக் கைப்பற்றி வருகிறார்கள். இதில் தங்கள் வீட்டில் எந்த மக்காதப் பொருளுக்கும் இடம் கொடுப்பதில்லை.

கடைக்குச் செல்லும்போது  நம்மில் பலர் துணிப்பயையோ கூடையையோ எடுத்துச் செல்கிறோம். ஆனால் மளிகைக் கடையில் விற்கும் எல்லாப் பொருளுமே நெகிழியில் கட்டி வைக்கப்பட்டிருப்பதால் நம் வீட்டில் கிட்டத்தட்ட முன் போலவே மக்காத குப்பை சேர்ந்து விடுகிறது.

சுழியக் கழிவு முறையில் நம் வீட்டுக்குள்ளே மக்காத எந்தப் பொருளையும் கொண்டு வருவதில்லை என்பது முதல் குறிக்கோள். இரண்டாவதாக மீள் சுழற்சி அல்லது மேல்சுழற்சி என்கிற முறையில் ஒரு பொருளைப் பல விதமாகப் பயன்படுத்திக் குப்பை சேர்வதை தவிர்ப்பது. உதாரணத்திற்கு ஒரு பழைய ஆடையைத் தூக்கி எறிவதற்கு பதில் அதிலிருந்து பைகளைத் தயார் செய்து உபயோகிப்பதனால் ஆடை மீள் சுழற்சிக்கு உள்ளாகிறது. பழைய பாட்டில்களில் அல்லது கொட்டாங்கச்சியில் செடி வளர்ப்பது மேல்சுழற்சி என்று சொல்லலாம்.

ஆறு மாதத்திற்கு மேல் உபயோகப் படாத ஆடை அல்லது பொருளை உபயோகப் படுபவர்களுக்கு கொடுத்துத் தங்கள் வீட்டில் பொருள்களைக் குறைப்பது என்று மற்றொரு முறையும் பிரபலமாகி வருகிறது. இதனால் முன்னே சொன்னதுபோல் வீட்டில் அடைசல் நீங்கி, காற்றோட்டத்திற்கும் வெளிச்சத்திற்கும் நேர்மறையான ஆற்றலுக்கும் வழிவகுக்கப்படுகிறது.

ஆக, குப்பையை வெளியேற்றுவது மட்டுமல்ல, அதை சேகரிப்பதையும் குறைப்பதும்கூட நம் சுற்றுசூழலுக்குப் பயனுள்ளதாக அமைகிறது.

நம் மனதில் இப்படிக் குப்பை சேராமல் இருக்க வழி ஏதாவது இருக்கிறதா?

ஸ்வாசமும் புத்துணர்ச்சியும்

மனதின் குப்பைக்கு ஒரு குப்பைத்தொட்டி இல்லை ஆனால் நாம் நம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு அலமாரிக்குள் பொருள்களை அடைத்து வைப்பது போல் அடைத்து மறைக்க முயற்ச்சிக்கிறோம். மிகவும் வேதனை தரும் விஷயங்களை மறக்கடிப்பதற்காக வேலையிலோ போதையிலோ மூழ்கிவிடுகிறோம். அடைசலான இடத்தில் எப்படி சுகாதாரம் இருப்பதில்லையோ, அதே போல உணர்ச்சிகளால் நிறைந்த மனதிலும் சுகாதாரம் இருப்பதில்லை.

சுத்தமான இடத்தில் காற்றும் வெளிச்சமும் தடையின்றிப் பரவுகிறது. அதே போல நம் மனதும் உடலும் ஆரோக்யமாக இருக்கும்போது நாம் எந்தத் தடையுமின்றி மூச்சு விடுகிறோம். கோபமாகவோ கவலையாகவோ இருக்கும்போது கவனியுங்கள். உங்கள் ஸ்வாசத்தின் லயம் வித்தியாசமாக இருக்கும். பெருமூச்சு விடுவது என்பது முழுமையாக மூச்சை விடும்போது நம் உடல் அல்லது மனதின் சலிப்பைச் சற்று குறைக்கும்.

நம் மூச்சுக்கும் மனதுக்கும் இருக்கும் பிணைப்பை நம் முன்னோர்கள் கவனித்து மூச்சுப் பயிற்சி அல்லது ப்ராணாயமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். எப்படி நம்முடைய மனநிலை நம் ஸ்வாசத்தை பாதிக்கிறதோ, அதே போல நம் ஸ்வாசம் நம் மன நிலையை பாதிக்கும். அதைக் கட்டுப்படுத்தினால் மனதைக் கட்டுப்படுத்தலாம். குப்பைகளைக் குறைக்கலாம், நாளா வட்டத்தில் குப்பை சேர்ப்பதை குறைக்கலாம்.

ஆனால், ஏதோ எவெரெஸ்ட் மலையை ஏறுவது போலவோ அல்லது கடலில் நீச்சல் அடிப்பது போலவோ நமக்கு இந்த ஸ்வாசப் பயிற்சி செய்ய முடியாத ஒரு சவாலாக அமைகிறது. அதிகமாகக் கேட்கப்படும் காரணங்களில், ‘எனக்கு சும்மா உட்கார முடியாது,’ என்று பலரும் இதை முயற்சி செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். சிலர் கற்றுக்கொண்டாலும், அதைச் செய்வதற்கு வேண்டிய பொறுமை இல்லாமல் அதை விட்டுவிடுகிறார்கள்.

ஆனால் நாம் விடாமல், நம்மையும் அறியாமல் செய்வது ஒன்றுதான், ஸ்வாசிப்பது. நம்மால் தினம் மூச்சுப் பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஸ்வாசிப்பதை கவனத்துடன் செய்தாலே போதும். மூச்சை உள் வாங்குவதையும் வெளியேற்றுவதையும் நிதானமாக, கவனித்தாலே நம் மனதில் எழும் வார்த்தைப் புயலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம்.

நமக்கு ஒரு பொருள் மீது ஆசை இருந்தால் அதை அடைவதற்கு நாம் முயற்சி செய்வதில்லையா? அதிக நேரம் வேலை செய்தால் ஓவர்டைம் கிடைக்கும், என்று உண்ணாமல் உறங்காமல் வேலை செய்து அதை சம்பாதிக்க முனைகிறோம். இப்படிப் பல இலக்குகளை அடைய நம்முடைய உடல், மனது இரண்டையும் கட்டுப்படுத்தி அந்தக் குறிக்கோளை நோக்கிப் பயணிக்கிறோம். ப்ராணாயாமம் செய்தால் பொருள் கிடைக்காதுதான். ஆனால் மனதில் நிம்மதியும் அமைதியும் கிடைக்கும். அதற்கு ஈடு ஏதும் உண்டோ?

இன்பத்தின் ஊற்றைத் தேடி

நமக்குள் ஒரு இன்பத்தின் ஊற்று இருக்கிறது. ஆனால் மனதில் எழும் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களினால் அந்த ஊற்று மறைக்கப் படுகிறது. கவனத்துடன் ஸ்வாசிக்கும்போது அந்த ஸ்வாஸக்காற்றுடன் நாம் நம் மனதின் ஆழத்தைத் தொட்டு அந்த இன்பத்தின் ஊற்றை அடைய முடியும், அது நமக்குள் அருவிபோல் பாய்வதை உணரலாம்.

நம்மால் இந்த உலகத்தில் நடக்கும் எல்லா அநியாயங்களையோ குவிந்து வரும் குப்பையையோ தடுக்கவோ குறைக்கவோ முடியாது. ஆனால் நம்மில் ஒவ்வொருவரும் ஆனந்தத்தை அனுபவிக்கும்போது, நாம் அந்தக் குப்பையில் விழாமல் இருக்கலாம், அதில் மேலும் குப்பையைச் சேர்க்காமல் இருக்கலாம்.

தூய்மையிருக்குமிடத்தில் தெய்வீகம் இருக்கும் என்பார்கள். உண்மை என்னவென்றால், தூய்மையே தெய்வீகம்தான். நாமும் மார்வாடிகளைப்போல குப்பைத் தொட்டிக்கு வணங்கி நம சுற்றுச்சூழல் 

No comments:

Post a Comment