செல்வாவின் மறைவு அவனுடைய குடும்பத்தை பாதித்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அந்த கம்பெனியையே குலுக்கிவிட்டது. அவனுடன் அந்த சூதில் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்று கண்டுபிடித்து, மேலதிகாரிகள் உட்பட பலர் சிறைக்குச் சென்றனர். தன் வினை தன்னைச் சுடும் என் பதுபோலிருந்து அந்த மேலதிகாரிக்கு - அவர்தான் செல்வன் தப்பித்து வேறு வேலையில் செர்ந்து தங்களை மாட்டிவிடுவானோ என்ற பயத்தில் போலீசுக்கு அநாமதேயனாக புகார் கொடுத்திருந்தான். இப்பொழுது அவனால் தான்தான் புகார் செய்தோம் என்பதை நிரூபிக்க முடியாததனால் அவனுக்கு தண்டனையில் சலுகையும் கிடைக்கவில்லை.
மற்ற தொழிலாளிகளும் நிர்வாகிகளும் கையைப் பிசைந்து நின்றனர். "ஒரு சிலர் செய்யும் தவறினால் நாம் மாட்டிக் கொண்டோம்," என்று அலுத்துக் கொண்டனர். இப்பேர்ப்பட்ட நிறுவனத்திலிருந்து வருபவர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை - எத்தனை பேர்கள் தவறு செய்து தப்பித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழவே, மற்ற தொழிலதிபர்கள் அவர்களை தங்களுடைய நிறுவனத்தில் ஏற்றுக்கொள்ள தயங்கினர்.
சிவாவும் இந்த நிலைமையில் நான்கைந்து மாதங்கள் வேலையில்லாமல் திண்டாடினான். அவன் இந்த சதிகளில் கலந்துகொள்ளாததற்கு வீட்டில் அவனுக்கு தினம் இளக்காரமும் அவமானங்களும் தான் பரிசாக கிடைத்தது. "கலையோட அப்பா இதெல்லாம் செய்து தன்னுடைய குடும்பத்தோட தரத்தையாவது உயர்த்தினார்!" என்று மகன் குறைபட்டுக்கொண்டான். "புது போன் என்ன, வண்டி என்ன! பிரெண்ட்ஸோட ஊர் சுத்தரா. ஜாலியா இருக்கா. நான் தான் என் பிரெண்ட்ஸோட எங்கையும் போக முடியாம தவிக்கறேன்."
அவன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதும், மனைவி அவனுக்கு பரிந்து இவனை வைவதுமாக சிவாவின் வாழ்க்கையே நரகமாக மாறியது. இதில் கடன் கொடுத்தவர்கள் வந்து கதவைத் தட்டும்போது அவன் மனமில்லாமல் ஆனால் வேறு வழியும் இல்லாமல் ஓடி மறைய வேண்டிய கட்டாயம் அவனுக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. இதைக் கூட புரிந்துகொள்ளாத மனைவியையும் மகனையும் நினைக்கும்போது அவன் மேலும் குறுகிப்போனான். மிகவும் வருந்தினான்.
அவனுடைய தந்தை தினம் குடித்து வந்து வீட்டில் ரகளை செய்வார். அவனுடைய தாய்தான் ஓர் எக்ஸ்போர்ட் கம்பனியில் வேலை செய்து அவனது குடும்பத்தைகே காப்பாற்றினாள். எப்படியோ சிவா மற்றும் அவனுடைய தங்கையை படிக்க வைத்தாள். தன்னைப் போல் தன்னுடைய மகளின் வாழ்க்கை கண்ணீரில் கரைந்துவிடக் கூடாது, அவள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று மகளுக்கும் மகனளவுக்கு சுதந்திரத்தை அளித்தாள். சிவாவின் தங்கை பவானி ஒரு நல்ல வேளையில் சேர்ந்து, தனக்கு பிடித்த ஒருவனை திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ்ந்து வந்தாள்.
கட்டுப்பாடுடன் வாழ்வது சிவாவின் இரத்தத்தில் ஊறி இருந்தது. தந்தையின் அன்புக்கு ஏங்கிய அவன் தன் மகனை ராஜாபோல் வளர்க்கவேண்டும் என்று உழைத்தான். மகனுக்கு ராஜா என்றே பெயரும் வைத்தான். அவன் கேட்பதற்கு முன் அவனுக்கு பொருள்களை வாங்கி வழங்கினான்.
இன்று அதுவே வினையாக மாறியது. தான் கேட்டதெல்லாம் நினைத்த நேரத்தில் கிடைக்கவேண்டும் என்று தன் மகன் எதிர்பார்க்கிறான் என்பது இத்தனை நாட்கள் வரை சிவாவுக்கு புரியவில்லை. இப்பொழுது, பண நெருக்கடி இருக்கும்போதும் அவன் தன்னை மாற்றிக்கொள்ளாதது சிவாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சிவா சிறு வயதிலிருந்து வீட்டு நிலைமையை புரிந்து தனது தேவைகளை கட்டுக்குள் வைத்து வளர்ந்தவன். மனைவியும் மகனுக்கு பரிந்து பேசுவது அவனுக்கு தான் தனித்து நிற்பது போல் இருந்தது. அவனுடைய மனைவி, மகன், இருவருக்கும் அவன் பணம் சம்பாதிக்கும் இயந்திரமா?
இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று அடிக்கடி அருகில் இருந்த கிணற்றடியை நோக்கிச் செல்வான். வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்று கீழே எட்டிப் பார்ப்பான். தற்பாதுகாப்பே அவனுடைய இயல்பான குணமாகியதனால், இப்பொழுதும் அவன் தன் கஷ்டங்களிலிருந்து ஓடி ஒழிய பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கு புரிந்தது. ஆனால் என்ன செய்வது?
'எப்படி செல்வா? எப்படி துணிஞ்ச? எப்படி ஏமாத்தி பொழைக்கணும்னு தோணித்து? இப்பகூட என்னால முடியலையே!'
'ஒழைக்கனம், புதுமையா சிந்திக்கனம்,' என்று சிவா அன்று சொன்னது அவனுக்கு நினைவிற்கு வந்தது.
அவனுடைய சிந்தனையின் போக்கை மாற்றியது. அவன் என்றும் உழைக்க தயங்கியது இல்ல. ஆனால் புதுமையாக சிந்திப்பது என்றால்? செல்வாவின் புதுமையான சிந்தனையினால்தானே அவனுடைய வாழ்க்கையை இழந்தான்?
"இல்லை!" என்று தனக்குத்தானே சிவா பேசினான். "தவறான வழியை கைப்பற்றியதனால் தான் அந்த முடிவை சந்தித்தான். ஆனால் அவன் ஆரம்பித்த திட்டம் நல்ல திட்டம் தான். ஒழுங்காக தரத்தை உயர்த்துவதில் கவனத்தை செலுத்தியிருந்தால் அவர்களுடைய பொருள்களின் தரம் உயர்ந்து அவர்கள் பல நன்மைகளை அடைந்திருக்கலாம், அல்லவா?"
ஒரு வித உற்சாகத்துடன் சிவா எழுந்தான். உடலில் ஒரு பரபரப்பு தெரிந்தது, ஆனால் வீட்டை அடைவதற்கு முன் அந்த பரபரப்பு அடங்கியது. எந்த வித புதுமையான, தொழிலுக்கேற்ப யோசனையும் அவனுடைய மனதில் எழ வில்லை. இருந்தாலும், புதிதாக ஒன்றை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு அவன் மனதில் ஒரு நம்பிக்கையை உருவாக்கியது. தனக்குத் தெரிந்தவற்றையும், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.
அவன் வாழ்ந்த குடியிருப்பிலேயே அவனுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவனுடைய இன்ஜினியரிங் படிப்பு இதுக்குதானா என்று ஒரு நிமிடம் கூட சிந்தித்திருந்தால் அவனை அதை வீழ்த்தியிருக்கும். இதுக்காகவாவது பயன் படுகிறதே என்று வீட்டு பொருள்களை பழுது பார்க்க ஆரம்பித்தான். மின் விசிறி, மிக்சி, டிவி என்று சதா ஏதோ ஒரு தேவை இருந்து கொண்டே இருந்தது. முதலில் குடியிருப்பு மக்களிடம் மட்டும்தான் அவனுடைய உதவியை ஆரம்பித்தான். போகேப் போக அவர்களின் சிபாரிசில் வெளியிலிருந்தும் அவனை தேடி வந்தார்கள். ஒரு சின்ன கடை வைத்ததன் பிறகு இன்னும் பலர் வந்தனர்.
மனைவிக்கு தையல் நன்றாக வரும் என்பதால் அவளுக்கும் தனது கடையில் ஓர் இடம் ஒதுக்கி தையல் தொழில் செய்ய வற்புறுத்தினான். வேண்டா வெறுப்பாகத் தான் ஒப்புக்கொண்டாள், ஆனால் கையில் காசு வரவே அவளுடைய உற்சாகமும் அதிகரித்தது.
இதில் இன்னொரு ஆச்சரியமும் நடந்தது! அவள் சம்பாதிக்க ஆரம்பித்த உடன், கணக்காக இருக்க ஆரம்பித்தாள். மகனை கண்டிக்க ஆரம்பித்தாள். அவனுடைய ஊதாரித்தனத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தாள். சில நேரங்களில் அவனிடமும் வேலை வாங்கினாள். "நாலு காசு சம்பத்திச்சாத்தான் அதோட அருமை தெரியும்," என்று அவனுக்கு புத்திமதி வேறு!.
நேர்மையாகவும் தலை நிமிர்ந்து வாழ முடியும். செல்வா அளவுக்கு துணிச்சல் இல்லாததனால் வியக்கும் அளவுக்கு புதுமை செய்ய முடியவில்லைத்தான். அவனளுக்கு செல்வாக்கு அதிகரிக்கவில்லைத்தான். ஆனால், மெதுவாக, ஸ்திரமாக அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.
நன்றி கடனாக ஆனந்திக்கும் கலைக்கும் அவனால் முடிந்த உதவிய செய்து, அவர்கள் வாழ்க்கையிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினான்.
தினம் காலை, கடவுளை வணங்கும்போது, செல்வாவுக்கும் நன்றி சொல்ல தவற மாட்டான்.