Friday, April 27, 2012

கலைக்கு மரியாதை

 நேற்று ஒரு நாட்ய நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சென்றேன். ஆறு மணிக்கு ஆரம்பித்து விடும், பன்னிரண்டு சிறிய சிறிய, வெவ்வேறு விதமான ஆட்டங்கள் இருந்தன. எல்லாமே விறுவிறுப்பாக இருந்தன. ஆடுபவர்களின் உழைப்பு அவர்கள் சிந்திய வேர்வையில் தெரிந்தது. இதில் ஆடுவது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு முறையும் உடை மாற்றம் வேறு. அந்த உடை மாற்றும் நேரத்தில் தான் நான் தொகுப்பாளராக அடுத்து வரும் ஆட்டத்தைப் பற்றி பேசுவேன்.

நிகழ்ச்சி ஆரம்பிக்க ஆறரை மணி ஆகி விட்டது. கடைசியாக ஒரு நடனம் இருக்கும் பொழுது நடத்துனர் வந்து "நேரமாகி விட்டது, சீக்கிரம் முடித்துக்கொள்ளுங்கள்" என்ற பொழுது கோபம் பொங்கி எழுந்தது. இதே அனுபவும் எனக்கும் ஒரு நிகழிச்சியில் நடந்தது. ஆறு மணி என்று சொல்லி ஆறரை ஆகியும் ஆரம்பிக்க வில்லை. பிறகு கடைசியில் தில்லானா ஆடுவதற்குள் முடித்துக்கொள்ள சொன்னார்கள்.

ஆடும் பொழுதும், பேசிக்கொண்டே இருப்பது, போனில் பேசுவது போன்ற விஷயங்கள் எல்லாம் நமக்கு பெருமையான விஷயங்கள் போல. ஒரு நிகழிச்சியில் பத்து நிமிடம் ஆடுவதற்கு கூட கிட்ட தட்ட அரை மணி நேரம் தினம் ஆடினால் தான் மேடையில் நன்றாக ஆட முடியும். அந்த முயற்சிக்கு ஒரு மதிப்பே இல்லாதது போல ஆகி விடுகிறது இந்த மாதிரி சில பேர்களுடைய நடத்தையை பார்த்து. இது அந்த கலைக்கு செய்யும் அவமானமில்லையா?

நேரத்திற்கு ஆரம்பிப்பது, நிகழ்ச்சி நடக்கும் பொழுது அமைதி காப்பது, முடிந்தவடுன் கலைஞ்யரை ஊக்குவிப்பது - இது அல்லவா நம் பண்பாடு? இது எங்கே மறைந்ததின்று? 

Saturday, April 21, 2012

வெயில் காலம்

கொளுத்தும் வெயில்
மலரும் செடிகள்
கடல் காற்று
இடியுடன் மழை

லீவு, விளையாட்டு
தோழமை, பகைமை
வேர்வை, தாகம்
சிரிப்பு, கசப்பு

சந்தோசம், ஏமாற்றம்
என்று பல சுவைகள்
அற்புதமாக கலந்தது
வெயில் காலம்

Saturday, April 14, 2012

நல்ல வேளை

"கடவுள் தான் காப்பாற்றினார். ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்." ஒரு விபத்து நடக்கும் பொழுது அதில் பிழைத்தவர்களைப்பற்றி சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை.

அப்படி என்றால், இறந்தவர்கள் பாவம் செய்தவர்களா? கடவுள் கை விட்டு விட்டாரா? பிழைத்தவர்களுக்கு மரணமே இல்லையா? ஏதோ ஒரு வழியில் அந்த முடிவு எல்லாருக்கும் தான். இந்த விபத்தில் இல்லையென்றால், வேறொரு விதத்தில் சாவு நிச்சயம். பின்னே எதற்கு கடவுளை பிழைத்தால் மட்டும் இழுக்கிறோம்?

சில நேரங்களில் பிழைக்காமல் இருப்பதுகூட நல்லதுக்காக இருக்கலாம் அல்லவா? அந்த விபத்தில் இருந்து தப்பித்து வேறு பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளலாம். அப்பொழுது அதை எந்த கண்ணோட்டத்தில் பார்போம்?

எதற்கு இப்படி மண்டையை கொழப்பிக்கொள்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு பெரிய சிறிய விபத்தில் பிழைத்தவர்களை பற்றி இப்படி பேசும் பொழுது தோணக்கூடிய சிந்தனை இது. இறந்தவர்கள் மட்டும் என்ன தப்பு செய்தார்கள்? ஏன் கொடூரமாக, மனதை திகிலடிக்கவைக்கும் இறப்பு அவர்களுக்கு என்று...

Thursday, April 5, 2012

ஆசை, பேராசை

"என்ன போட்டுக்கபோற?" நீலா மதுவை கேட்டாள்.

"தெரியல," என்று மது தோளை குலுக்கினாள். அலமாரி கதவை தறந்து, அதில் உள்ள நூற்றுக்கணக்கான துணி மணிகளை ஆராய்ந்தாள். "ஏற்கனவே போட்டுக்கொண்டவை தான் இருக்கு. புதுசா ஒண்ணுமே இல்ல," என்று முகம் சுளித்தாள்.

"துணி கடைக்கு போகலாமா? என் கிட்டயும் ஒண்ணும் இல்ல," என்று நீலாவும் சொன்னாள். இருவர் கண்களிலும் குதூஹலம் தெரிந்தது... "வா!" என்று சேர்ந்து சொல்லி உடனே புறப்பட்டார்கள். தேவை ஒரு ஆடைகூட இல்லை, ஆனால் பொருக்கி வந்தது ஒவ்வொருவருக்கும் நாலாவது இருக்கும். போட்டுக்கொள்ள காரணமா கிடைக்காது!

**

"என்னடா, புது காரா?" சரவணன் கேட்டான்.

"அமாண்டா." யது சொன்னான்.

"பழசுக்கு என்ன ஆச்சு? சரியா இல்லையா?"

"இல்லடா, அஞ்சு வருஷம் ஆச்சு, அதான். பிளஸ், பெரிய கார் தேவ பட்டிச்சி..." யது பல்லிளித்தான். 

*
"நடக்கறதுக்கு நாட்டுல எடமே இல்ல. இதுல மரம் வளர்ப்பாங்களா இல்ல ரோடு போடுவாங்களா?" என்று கேட்டுக்கொண்டே போனாள் மது.

"ஏய், புது மால் வரதாம் எங்க பேட்டைல," நீலா சொன்னாள்.

"ஒ வாவ்! இந்த மால் எல்லாம் போர் அடிக்கறது. புதுசா ஏதாவது பிராண்ட்   வரதான்னு பாக்கலாம்."

*
"இவங்க எப்போத்தான் இந்த ட்ராபிக் பிரச்சனைய தீக்கப்போராங்களோ தெரியல! வண்டி ஓட்டரதவிட சிக்னல்ல நின்னு போற டைம் தான் அதிகமா இருக்கு," யது முணுமுணுத்தான்.

"உன் பைக் இருக்கறச்சே ஈசியா இருந்துது இல்ல?"

"ஆமாம், ஆனா இந்த வெய்யில்ல தாக்கு பிடிக்க முடியல."

"அது சரிதான். ஆனா கார் அதிகமாக அதிகமாக, ரோட்டு போடறதுக்காக மரத்த இல்ல வெட்டிடறாங்க."

யது அலுத்துக்கொண்டான். எ/சியை அதிகரித்தான்.