Saturday, April 6, 2013

முடிவின் முடிவு - சிறுகதை

"தேவையா? இப்படி படிச்சு நாளைக்கு என்ன மாதிரி, எவனோ பணக்காரன் ஆறதுக்கு இவன் மாடா கழுதையா ஒழைக்கணம்," கணவன் வருத்தததுடன் கேட்டான்.

மனைவியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. "அவன் காதுபட இத சொல்லிடாதீங்க! அப்பா இஞ்சினியர். நீயும் நல்லா படிச்சா அவர் பேர காப்பாத்தலாம்னு சொல்லி வெச்சிருக்கேன். நீங்க எப்படி சின்ன வயசுல படிச்சு உங்க ஊர்லையே பெரிய மனுஷனா கருதப்பட்டீங்கன்னு சொல்லியிருக்கேன். உங்கள மாதிரி வரணம்னு அவன் மனசுல பதிஞ்சிருக்கு."

பெருமூச்சு விட்ட கணவன், "அவனுக்கு என்ன பிடிக்கறதுன்னு கேட்டுண்டயா? எகோநோமிக்ஸ் பிடிச்சிருக்குன்னா அதுலயும் இப்போலாம் நல்ல ச்கோப்."

முகம் சுளித்தாள் மனைவி. "ஒங்களுக்கு ஒங்க மகன் மேலையே நம்பிக்க இல்லன்னு தெரியறது. பாருங்கோ எப்படி படிக்கறான்னு! நீங்களே ஆடிப்போக போறீங்க."

மனதில் ஒரு கலக்கம் எழுந்தாலும், மனைவி தெரிந்தே எல்லாம் செய்கிறாள் என்று தோணி அவன் மறு பேச்சு பேசவில்லை. நேரம் கிடைத்தால் அவனே மகனுக்கு உதவி செய்திருப்பான். ஆனால் வேலை பிழிந்து எடுத்தது அவனை.

இன்ஜினீயரிங் ரிசல்ட் வரும்  அன்று அவனுக்கு அவன் மனைவி தொலைபோசியில் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அழுவது மட்டும்தான் தெரிந்தது. உள் மனம் ஏதோ விபரீதம் நடந்ததை புரிந்துகொண்டது. தன் மேலாளரிடம் சொல்லிக்கொண்டு அவசரமாக வீட்டுக்கு திரும்பும் வழியில் தன் மகனுக்கு ஏதோ நேர்ந்ததிருக்கிறது என்று மெதுவாக அவன் மனைவியின் குழம்பிய வார்த்தைகளிலிருந்து அர்த்தம் கொண்டான். மனம் படபடத்தது.

வீட்டு வாசலில் சேர்ந்திருந்த கும்பல் அவன் பயந்ததை உறுதிப்படுத்தியது. அவனைக்கண்டு எல்லோரும் வழி விட்டார்கள். மனைவி எங்கிருந்தோ பறந்து வந்து அவனைக்கட்டிக்கொண்டு ஓலமிட்டாள். அதிர்ந்து நின்ற அவன், மெல்ல தன் மகனின் உடல் இருந்த இடத்திற்குச்சென்றான். 

மெதுவாக, தன் கையில் யாரோ திணித்த கடிதம் ஒன்று இருப்பது அவன் நினைவிற்கு எட்டியது. ஆனால் அதை படித்தால் அர்த்தம் புரியவில்லை.

'அப்பா, உங்கள் பேரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. நீங்கள் எதிர்பார்த்த மாதிரி என்னால் இஞ்சினியரிங்கில் மதிப்பு பெற முடியவில்லை. உங்களுக்கு அவமானத்தை சம்பாதித்து கொடுத்து உங்களை ஏறெடுத்து பார்க்க எனக்கு தைரியமில்லை. என்னை மன்னித்து விடுங்கள்.'

அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்தான்.

No comments:

Post a Comment