"ஆபீஸ் போயே ஆகணுமா?" சிணுங்கினாள் பிரபா.
அவள் கன்னத்தை ஆசையாகக் கிள்ளிய படியே, "ஆமாண்டா... ஆனா சீக்கிரம் வரப் பாக்கறேன்,"
நாள் முழுக்க வீட்டு வேலைகளை சீக்கிரமாக முடித்துக்கொண்ட அவள் அவன் வரவை எதிர்பார்த்து தன்னை சிருங்காரம் செய்து கொண்டு காத்திருந்தாள். வந்ததும், "எங்க போகலாம்" என்று வெளியே கூட்டிட்டுப் போக தயாரானான்.
என்ன இன்பமயமான காலம் அது. சண்டை போட்டாலும் அதிலும் தனி இன்பம். ஒருவரை ஒருவர் நெருங்க அதுவும் ஒரு காரணம். ஆறு மாதம் கழித்து மனைவி முழுகாமல் இருக்கிறாள் என்பதில் தான் கதிருக்கு என்ன பெருமை.
அவள் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்குப் போயிருக்கும் பொழுது அவனுக்கு இருப்பு கொள்ள வில்லை. அடிக்கடி அங்கு சென்று வந்தான். குழந்தை பிறந்ததும் எப்பொழுது திரும்பி வருவாள் என்று நச்சரித்தான்.
குழந்தையும் கையுமாக வீடு திரும்பிய பிரபாவிற்கு கொஞ்சம் பயம் தான். "நான் இருக்கேனில்ல," என்று கதிர் ஆசுவாசப்படுத்தினான்.
ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக அவனுக்கு ஆபீசில் வேலை அதிகம் ஆகி விட்டது. குழந்தைக்கு அது தெரியுமா? அப்பா வந்தால் விளையாட்டு என்று முழித்திருக்கும். அப்பா வந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும். அம்மா திட்டினால் அப்பாவிடம் போய் அழும். "கொஞ்சம் நிம்மதியா இருக்க விடேன்," என்று அவன் அவளைக் கடிந்து கொள்வான். "கொழந்த தானே. கொஞ்சம் பொறுத்துக்கக் கூடாதா?" என்று கெஞ்சுவான்.
அவனுக்கு என்ன தெரியும், நாள் முழுவதும் அவள் படும் திண்டாட்டம்? சாப்பிடப் படுத்தும், அடம் பிடிக்கும்,தூங்க வேண்டிய வேளையில் விளையாடும், விளையாடலாம் என்று நினைக்கும் பொழுது தூங்கும். தனியாக விடவும் முடியாது. குழந்தையயைப் பற்றின கவலை கோவமாக மாறும். யாராவது சிறிது நேரமாவது தனக்கு ஒத்தாசையா இருக்க மாட்டார்களா என்று ஏங்கும் அவள் கணவன் வரும் வேளையில் அப்பாடா என்று ஓய்வு எடுக்க நினைப்பது தவறா?
சிறிய சிறிய சிக்கல்கள்தான். மற்றத் தம்பதிகள் பார்க்காததா? ஆனால் இப்பொழுதெல்லாம் அவன் வீட்டிற்கு தாமதமாக வரத் தொடங்கினான். அவளுக்கும் குழந்தை வளர வளர மற்றப் பொறுப்புகள் வந்துவிட்டன. பிக் அப், ட்ராப் என்ற சக்ரவ்யூஹத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாள்.
ஆனால் கூடவே அற்புதமான தோழிகள் கிடைத்தார்கள். அவளைப்போலவே அவர்களும் தாய்மார்கள். இவளுடைய சந்தோசங்களையும் வருத்தங்களையும் அனுபவித்தவர்கள். இவள் சொல்லாமலே சொல்வதைப் புரிந்துகொண்டவர்கள். இவளுக்குத் தேவை என்ற பொழுது காது கொடுத்துக் கேட்டு தோள் கொடுத்து நிமிர்த்துபவர்கள்.
கார் பூலிங் செய்து அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த கர்நாடக சங்கீதப் பயிற்சி பெற்றாள்.
அவன் இப்பொழுதெல்லாம், "இன்னிக்கு சீக்கிரம் வந்துடுவேண்டா, " என்றால்,
"அப்படியா... ம்ம்ம்ம்.... என்ன விசேஷம்? வேலை இல்லையா?" என்று தயங்கிக் கேட்பாள்.
No comments:
Post a Comment