Monday, January 16, 2017

தடை கட்டுகள்

ஆடி ஓய்ந்த சிவா என்னும் சிவகாமி வீட்டிற்குள் நுழையும் பொழுது அவள் தாய் சரளா அவளை என்றும் இல்லாத மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். அதாவது, இன்று புன்னகைத்தவிதம் மற்ற நாட்களைவிட ஏதோ காரணத்தினால் இன்னும் மலர்ந்திருந்தது போல் தோன்றிற்று சிவாவிற்கு.

அதற்கு காரணமும் இதோ, கூடவே சொன்னாள்.


"என் கண்மணி... உனக்கு நல்ல காலம் பிறக்க போறதுடா! நேத்து உங்க கிளாஸுக்கு நடனமாமணி நளினி வந்திருந்தாங்களா?"

சிவாவின் கண்கள் பளிச்சிட்டன. "ஆமாம். நான் அப்போ ப்ராக்டிஸ் பண்ணிண்டிருந்தேன். ஏன்? ஏதாவது நாட்டிய நாடகத்துல என்னை சேர்த்துக்கணுமா?" என்று ஆவலுடன் கேட்டாள்.

செல்லமாக தட்டிக்கொடுத்து, "தன் குடும்பத்தில் ஒருத்தியாக சேர்த்துக்கொள்ளணுமாம்," என்றாள் சரளா.

"என்ன? தத்தெடுத்துக்க  போகிறாளா?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் குழந்தைத்தனம் மாறாத சிவா.

"சீ பைத்தியம். மருமகளா நீதான் வரணமாம்."

சிவா சிணுங்கினாள். இப்பொழுதுதான் இருபது வயது. காலேஜ் படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருந்தது. "நீ அவங்க வீட்ல இருந்துண்டு படிக்கலாம், நிம்மதியா டான்ஸ் ஆடலாம்... இத விட என்ன வேணும் உனக்கு?"

"நீதான் வேணும்," என்று தன் தாயைக் கட்டிக்கொண்டாள் சிவா. தந்தை என்றைக்கோ எங்கு சென்றார் என்று தெரியாமல் மறைந்து விட்டார். கொஞ்சம் அவர் விட்டுச்சென்ற சொத்தை வைத்து சரளா சிவாவை படிக்க வைத்தாள் . நடனத்திற்கே பிறந்தவள் என்று, குடும்பத்தினர் எதிர்த்தும் தன் மகளை பயிற்சிக்கு அனுப்பினாள். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. நன்றாக பயின்ற சிவா மேடைகளில் கச்சேரிகள் செய்யத்தொடங்கினாள். அதற்கு வேண்டிய பணம்தான் கொஞ்சம் கையைக் கடித்தது.

இந்த நேரத்தில், நாட்டிய உலகில் நிகர் இல்லாத ராணியாக ஆட்சி செய்துவரும் நளினியே தன் மகன் வித்யா எனும் வித்யாசாகருக்கு சிவாவை கேட்டது சரளாவிற்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் மாதிரி. தன் மகளை அவள் சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விடுவாள் நளினி... இதுதான் சிவாவிற்கு வேண்டிய திருப்புமுனை என்று எண்ணினாள்.

"அம்மா..." என்று மகள் அவள் சிந்தனைகளை நிகழ்காலத்திற்கு இழுத்தாள். "எனக்கு இப்போ திருமணம் வேண்டாம்," என்றாள் தயக்கத்துடன்.

"நானும் அப்படித்தான் எண்ணினேன். ஆனால் இப்படி ஒரு நல்ல இடம் வரச்சே விடலாமா?"

தாய் இந்த இடத்தில் தனக்கு மணம் செய்ய முடிவு எடுத்து விட்டாள்  என்று அறிந்த சிவா முகம் வாடியது. தாயின் மனதைப் புண் படுத்தப்போகிறோம் என்று அறிந்தே, "நான் ஒருவரை காதலிக்கிறேன்... மிருதங்கம் வாசிக்கும் நாராவை."

சரளா முகத்தில் வேதனை நடனமாடியது. "ஐயோ..." என்றாள். நல்ல பையன் என்று தெரியும். ஆனால் அவனும் இதே பஞ்சப்பாட்டுதான். நினைத்தால் கூட சிவாவிற்கு  அவனால் எந்த நன்மையையும் செய்ய முடியாது. "அவனை மறந்து விடு," என்று குரலில் நடுக்கமிருந்தாலும், அதில் ஒரு உறுதியும் தொனித்தது.

*

"நட்டுவாங்கம் தெரியுமா?" நளினி தன் மருமகளைக் கேட்டாள். சிவா மௌனமாக தலையாட்டினாள்.  "எனக்கு நீ தாளம் தட்டு," என்று உத்தரவிட்டாள் மாமியார். சிவா மனதில் ஒரு ஆனந்த அலை எழுந்தது. பெருமையாக பாடுபவற்கும் மிருதங்கம் வாசிப்பவருக்கும்  நடுவில் அமர்ந்தாள். பத்து நிமிடங்கள் கூட வாசித்துருக்க மாட்டாள், கண்ணில் பொல பொல வென்று நீர் வழிந்தது. "தெரியாதுனா தெரியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே! எதுக்கு என் கழுத்தறுக்குறே!" என்று நளினி எல்லோர் முன்னேயும் சீறினாள். மிருதங்கம் வாசிக்கும் பெரியவர் அவளுக்கு மௌனமாக உதவியது இன்னும் அவமானமாக இருந்தது. "அவங்க அப்படித்தான். ஆடும்போது ரொம்ப கோபம் வரும்."

நிகழ்ச்சி நடந்த பின்பும் மற்றவர்கள் சிவாவை போற்றினார்கள், ஆனால் நளினி முகத்தில் திருப்தி தெரியவில்லை. இருந்தாலும் அடுத்த நிகழ்ச்சிக்கும் இவள்தான் நட்டுவாங்கம். "அப்படின்னா அம்மாக்கு பிடிச்சிருக்கு," என்று கணவன் வித்யா ஆசுவாசப்படுத்தினான்.

"எனக்கு ஆடணும்," என்று அவள் அவனிடம் கோரிக்கை இட்டாள்.

"தாராளமா... எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை," என்று சொல்லி அவள் முகத்தில் பரவிய புன்னகையை ரசித்தான்.

மறுநாள், தன் குருக்கு போன் செய்து குதூகலமாக கிளம்பினாள். அந்த பத்து நாட்கள் - அப்பப்பா, என்ன ஒரு சுகம்! "நீ ரொம்ப நன்னா தாளம் போடற," என்று நாரா புகழும் போது  முகம் சிவந்தாள்.

*
"தினம் காலெஜ்லேர்ந்து எங்க போகற?" நளினி கேட்கும் போது சிவா பெருமையுடன், "டான்ஸ் கிளாஸுக்கு," என்றாள்.

"என்ன கத்துக்கற? ஆடி காமி," என்றாள்.

தயக்கத்துடனும் பெருமையுடனும் ஜதீஸ்வரத்தை ஓரளவுக்கு பாடிக்கொண்டே ஆடினாள் .

"ம்ம்... என்கிட்டயே கத்துக்கோ. கொஞ்சம் நளினம் வேண்டும்," என்று கூறிவிட்டு நகர்ந்தாள் நளினி.

நளினி போல ஒரு குரு கிடைத்தாள்  என்று சந்தோஷப்படுவதா இல்லை தாய்போல அன்பான குருவை இழப்பதில் வருத்தப்படுவதா என்று குழம்பினாள்.

*
"உனக்கு யார் ம்ரிதங்கம் வாசிப்பான்?"

"நாரா... நாராயணன்."

"அவனை  நாளைக்கு வரச்சொல்லு."

"ஏதாவது நிகழ்ச்சியா?" என்று ஆவலுடன் கேட்டாள் சிவா.

"எனக்கு," என்று சுருக்கமாக சொல்லிவிட்டாள் நளினி.

**

விதியை வெல்வது யார்? திறமை இருந்தும், ஆதரவான கணவனிருந்தும், இரு பிள்ளைகள்  பெற்றபின் வீட்டுக்கடமைகளில் சிக்கி தன் மாமியாருக்கு நட்டுவாங்கம் செய்து தன்  நடன ஆசையை திருப்திப்படுத்திக்கொண்டாள் சிவா. தன் சந்தோஷத்திற்கு, மாமியாருக்கு நேரம் இல்லாததால் மறுபடியும் பழைய குருவிடம் சென்று கற்றுக்கொண்டாள். ஒரு சில நிகழ்ச்சிகளிலும் மேடையில் ஏறி ஆடினாள்.

"ஆடினா நன்னா ஆடணும், இல்லன்னா விட்டுடணும்," என்று மாமியார் மறைமுகமாகத் தன்னைத்தான் சொல்கிறாள் என்று அறிந்தாள்.

ஆனால் வாசலைத்தேடி சில சபா நாயகர்கள் வந்து, "ஐயோ உங்களுக்கு இல்லாத கச்சேரியா?" என்று கேட்கும் பொழுது மனதில் குடிகொண்ட ஏமாற்றம் சந்தோஷத்தில் மாறியது.

"என் மேல இருக்கற அபிமானத்தினால்தான் உன்ன கூப்படறாங்க. மானத்த வாங்கிடாத," என்று எச்சரித்தாள் நளினி.

உயிரைக்கொடுத்தாள்.

"பிள்ளைகளை யார் பார்த்துப்பார்கள்?" என்று நளினி கேட்கும் போது வித்யாவிடம் சொல்லி ஒரு ஆயாவை நியமித்தாள். தன் மகன்களை மெதுவாக தனக்கு வீட்டில் உதவக் கற்றுக்கொடுத்தாள்.

"இந்த வயதில் ஆரம்பித்தால் முடியுமா?" என்று தடைசொல்லும் மாமியார் சரிதான் என்று யோகா பயிற்சி செய்தாள்.

"தண்டச்செலவுதான்," என்று எரிந்து விழும் மாமியார் ஒன்றும் பொய் சொல்லவில்லையே! மற்ற மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து கொஞ்சம் வருமானமும் நிறைய சன்மானமும் பெற்றாள்.

பெயர் வளர வளர, பெரிய சபாக்களிலும் ஆடுவதற்கான சந்தர்ப்பம். "உங்கள பார்க்க வரலை. மன்னிக்கவும், இந்த முறை சிவகாமி அம்மாக்கு ஒரு சான்ஸ்," என்று வழியும் சபாகாரர்களிடம் பணிவுடன் பேசி, மாமியாருக்கு உபசாரத்தால் சமாதானப்படுத்த முயன்றாள்.

*

"நாரா? எப்படி இங்க இன்னிக்கு?" சிவா நாராவை வரவேற்றாள். அவன் தோற்றத்தில் முதிர்ச்சி தெரிந்தது. நடனத்தினாலும் யோகாவினாலும் காலம் அவளை தொடாமலேயே இருந்தது.

"என் மகள் நன்றாக நடனம் ஆடுவாள்... "

"என்னிடம் பயிற்சிக்கு அனுப்பணுமா?" என்று வினவினாள்.

தலையசைத்தான். "உன் மருமகளாக்கிக்கொள்கிறாயா?"

சிவா அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். அவள் கையை பற்றினான். "இல்லை என்று சொல்லி விடாதே. சின்ன வயதிலிருந்தே அவளிடம் உன்னைப்பற்றி பேசி பேசி உன்னைப்போல ஆகவேண்டும் என்று ஊக்கம் அளித்திருக்கிறேன். உன்னுடைய துடிப்பு, விடா  முயற்சி...அதை ஊட்டித்தான் வளர்த்தேன்."

அவள் மௌனத்தை தவறாகப் புரிந்து கொண்டான். "உனக்கு ஒரு நல்ல இடம் அமைந்து, எப்படி உன் மாமியாரின் ஆதரவினால் உன்னால் இந்த கலையுலகில் வளர முடிந்ததோ, அதே போல என் மகள் வளர நீ காரணமாக இருப்பாய் என்று நான் நம்புகிறேன். இல்லை என்று சொல்லி விடாதே," என்று மறுபடியும் தன் கோரிக்கையை அவள் முன் வைத்தான்.

தன்னையும் மிஞ்சி சிவா கண்களில் நீர் ததும்பியது. "இல்லை, நாரா. என்னால் என் மாமியார் போல இருக்க முடியாது." அவன் முகம் வாடியது. அவன் கை மீது தன்  கையை வைத்து, "உன் மகளுக்கு மாமியாராக இல்லை, நான் ஒரு தாயாக இருப்பேன்," என்று நடுங்கும் குரலில் வாக்களித்தாள்.

எங்கேயும் பார்க்க முடியாத மாமியார் மருமகள் ஜோடி மேடை ஏறும் பொழுது பெரிய கைத்தட்டல். "என் குரு, மற்றும் என் மாமியாருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்," என்று சபையில் அறிவித்தாள். நளினி, வந்தவர்களிடமெல்லாம் பெருமையாக வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டாள்.

ஆம், நமக்கு நல்வழி காட்டுபவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். நமக்கு தடங்கல் செய்பவர்கள்கூட ஒருவிதத்தில் நம் வளர்ச்சிக்கு காரணம் தான். எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்ற காட்டுபவர்கள். அவர்களும் வழிகாட்டிகள்தானே... 

No comments:

Post a Comment