Friday, February 3, 2017

கைக்கட்டு

கட்டில் தொங்கிய தன் கையைப் பரிதாபத்துடன் பார்த்தான் செல்வம். கும்பல் நிறைந்த பஸ்ஸில் ஏற பயமாக இருந்தது. உடைந்த கை, யாராவது தெரியாமல் தள்ளி விட்டாலும் மேலும் காயம் படும்... அந்த வலியை நினைத்தாலே! அப்பப்பா!!!




ஆட்டோ எடுக்கலாம் என்றால் அதற்குக் காசில்லை. தொழில் செய்ய முடியாமல் செய்துவிட்டாள் அந்தப் படுபாவி. நன்றாக இருப்பாளா என்று, முகம் கூடச் சரியாய் தெரியாத அந்தப் பெண்ணை சபித்தான்.

கொஞ்சம் காலியாக வந்தது அடுத்த பஸ். மெதுவாக ஏறினான். இரண்டு இடங்கள் காலியாக இருந்தன. கடைசிச் சீட்டில் இரண்டே பெண்கள் தான். ஏதோ கல்யாணத்திலிருந்து திரும்புவது போல் தோன்றிற்று. அவன் அவர்களுக்கு அடுத்துச் சென்று உட்கார்ந்தான்.

"இந்த பஸ் ஸ்டாப் தான்," என்று சொன்னாள் ஒருவள் தன் தோழியிடம். "என் சங்கிலியை இழுக்கப்பார்த்தான் ஒருவன். விடுவேனா! அம்மா போட்ட சங்கிலி அது. கெட்டியா பிடிச்சுண்டுட்டேன்," என்றாள் பெருமையாக.

அவன் அவளை தற்செயலாக நோக்குவது போல் அந்த பக்கம் பார்த்தான்.

"அவனேதானான்னு தெரியல, ஆனா இந்த ஸ்டாப் அதுக்கு பெயர் பெற்றது... கண்டக்டர் கிட்ட கூட சொன்னேன், ஆனால் அவரும் அதற்கு உடந்தை என்று நினைக்கிறேன்," என்றாள் கூட இருப்பவள். "இந்த ஸ்டாப்ல தான் ஒருத்தன் எங்க பாட்டி கழுத்துலேர்ந்தும் உருவப்பார்த்தான். நான் சட்டுன்னு கவனிச்சிட்டேன். சங்கிலிய பிடிச்சுண்டுட்டேன்... பாவம் பாட்டி, அவள் கைல இருந்த கொடத்தால அவனுக்கு ஒரு அடி வைத்தாள். 'ஓ'ன்னு அலறிண்டு  ஓடிட்டான்... கைல மிளகாய் தூள் வெச்சிருக்கேன். மறுபடியும் வர மாட்டானான்னு..."

இரு பெண்மணிகளும் சிரித்தார்கள். செல்வம் தன் உடைந்த கையை தடவிக்கொண்டே எழுந்து முன்னாடி காலியாக இருக்கும் சீட்டில் போய் அமர்ந்தான். 

1 comment: