Friday, February 10, 2017

பூ கிளப்பிய புயல்

..
"பெண்கள்  பூ போல, புஷ்பா, மென்மையானவர்கள் " அவள் தந்தை சோமசேகரன் சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. தினம் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் பொழுது  அது நினைவிற்கு வரும். கண்களில் இரு நீர் துளிகள் தேம்பி நிற்கும். "அவர்கள் செல்லும் இடமெல்லாம் நறுமணத்தை பரப்ப வேண்டும்... அது தான் பெண்களுக்கு அழகு..."




தான் இந்த வார்த்தைகளை அடிக்கடி தலை குனிந்து கேட்டுக்கொண்டது நினைவிற்கு வந்தது. "எனக்கு மேலே படிக்கணும்பா," என்று பத்தாவது முடித்த பிறகு அவள் படிப்பை நிறுத்தி விடலாம் என்று எண்ணிய தந்தையிடம் பரிவுடன் விண்ணப்பித்தாள்.

அவருக்கே உரிய நிதானத்துடன், "ஒரு பெண் தன் குடும்பத்தை நல்ல விதமாக கொண்டுவரத்திலே தாம்மா இருக்கு. அதுக்கு படிப்பு எதற்கு? பகுத்தறிவு தான் வேண்டும்..."

"பாட்டி," என்று புஷ்பாவின் பதினைந்து வயது பேத்தி  சசி கூப்பிட்டாள், "எனக்கு லேட் ஆறது, சாப்பாடு ரெடியா?"

"மேடை மேலே இருக்கும், பாரு..." புஷ்பா  பதில் சொல்லி, ஸ்வாமியை வணங்கிவிட்டு எழுந்தாள்.

"இருக்கும்மா... நான் பாத்துக்கறேன்," என்று முப்பத்தெட்டு வயது மகள் நிம்மி கூறினாள். "நானும் ஆபீஸ்க்கு கிளம்பறேன். கோபால்," என்று கணவனுக்கு குரல் கொடுத்தாள்.

"வந்துட்டேன்," என்றபடி மாப்பிள்ளை இறங்கி வந்தான்.

"ஒரு பெண்ணுக்கு வேண்டியது அழகான குடும்பம், அன்பான குழந்தைகள்... சரியான நேரத்திற்கு உணவு, உடலுக்கும், மனதிற்கும் பாதுகாப்பு..." அவள் தந்தை நல்ல குடும்பத்தின் இலக்கணத்தை அடிக்கடி எடுத்துரைப்பார்.

புன்னகையுடன், தத்தம் வேலையாக கிளம்பும் மகள் மற்றும் அவளுடைய குடும்பத்தினரை விடை அனுப்பிவிட்டு உள்ளே வந்து, தனக்கு சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு மேஜைக்கு வந்தாள்.

"மேடம்," ஒரு இளைஞன் கூப்பிட்டான், "இன்னைக்கு டாக்ஸ் கட்டணம்..."

அவள் எழுந்தாள்.

"படிச்சு, வேலைக்கு போவயா? வேற்று மனிதர்களுடன் சேர்ந்து வேலை செய்யறது,... உலகம் பொல்லாதுடா கண்ணு," இது அவள் தந்தை... தான் படித்து வேலைக்கு போக வேண்டும் என்று சொன்னபொழுது அவளுக்கு கூறிய புத்திமதி...

அவளுடைய நச்சு தாங்காமல் சீக்கிரமாக ஒரு வரனைப் பார்த்து பதினெட்டு வயதில் திருமணமும் முடித்து விட்டார். 'திக்கு தெரியாத காட்டில்' என்பது போல் வடக்கே அனுப்பப்பட்டாள். வீட்டில் கற்றுக்கொடுத்தப் பாடங்கள் இனி  உதவும் என்று ஆவலுடன் புஷ்பா ஒரு நல்ல மனைவி, மருமகள், தாய்... எத்தனை கனவுகள்...

ஆனால் தினம் அந்த கனவு மட்டுமில்லை, அவள் மனம்,சில நேரங்களில் எலும்புகள் கூட, உடைந்தன.  இடி, அங்கு, தந்தையிடம் சொன்னால்... "கல்லானாலும் கணவன்...பொருத்துக்கோ... நிச்சயமா மாப்பிள்ளை திருந்திடுவார். உன் பேர்ல அர்ச்சனை பண்ணறேன்," என்று குரலில் தெரிந்த சலனத்தை அடக்கிக்கொண்டு  ஆசுவாசப்படுத்தினார். கணவனிடம் தினம் அர்ச்சனைத்தான்.

இதற்கு நடுவில் வயிற்றில் பிள்ளை வேறு! பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு வந்தாள். பிள்ளை பெற்றபின் திரும்ப வேண்டுமே என்ற கவலைத்தான் பெரிதாக இருந்தது. "வேண்டாம்ப்பா..."

"வாழாவெட்டியா இருப்பயா?" அதற்கு மரணமே மேல் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

குழந்தை பிறந்தும் வரவில்லை. புண்ணியோஜனத்திற்கும் வரவில்லை. மூன்று மாதம் முடிந்து அழைத்து வரவா என்பதற்கும் பதில் இல்லை.

தந்தை முகம் வாடியது. புஷ்பா சந்தோசத்தில் மலர்ந்தாள். "என்ன வேலையோ... நாம கிளம்பலாம்," என்று சோமு அவளிடம் சொன்னார்.

சற்று மௌனம் சாதித்த பின் தன் தந்தையை நிமிர்ந்து நோக்கினாள். "ஒருவருக்கு வாக்கப்பட்டபின் நான் அவருக்கு சொந்தம், இல்லையா?"

"ஆமாம்."

"அவர் இருக்கும் வரை நீங்கள் என் மீது, என்னை காப்பாற்றும் உரிமையை இழந்து விட்டீர் இல்லையா?"

"என்னமா இப்படி பேசற!" கொஞ்சம் வருத்தத்துடன் கேட்டார் சோமு.

"சரி... எனக்கும் அது பிடிக்கவில்லை... அப்பா, அவர் ஒரு குடும்பம் என்று நீங்க விளக்கிய எதையுமே எனக்கு தரவில்லை... என்னை அவருடன் மறுபடியும் இணைந்து வாழ்க்கை நடத்த வற்புறுத்தினால், நீங்கள் சொன்னது அத்தனையும் பொய்யாகி விடும்... "

அவள் தந்தை மௌனமாக தலை குனிந்தார்.

"இதுதான் என் குடும்பம்... என்னையும் என் குழந்தையையும் அந்த நரகத்தில் தள்ளாதீர்கள்..."

"நான் இருக்கும் வரை சரி... பிறகு..."

அந்த பிறகைப்பற்றிய கவலையில்தான் பிறந்தது இவளுடைய சிறு தொழில் நிறுவனம். அதிலும் பல சவால்கள். படிப்பின்மை, அனுபவம்  இல்லாதது... எத்தனையோ சிக்கல்கள், தடங்கல்கள்.

தடையாக இருந்த தந்தையே வழி வகுத்தார். திறமையும் உறுதியும் அவள் மேற்கொண்ட பாதையில் முன்னேற்றம் அளித்தன.

செக்கில் 'புஷ்பா சோமசேகர்', எம் டீ, என்று கையெழுத்துப் போட்டு, காத்திருந்த இளைஞனிடம் அதை கொடுத்தாள். "இன்னிக்கு பாக்டரிக்கு வருவேன். வண்டி அனுப்பி வை," என்று அதிகாரத்துடன் உத்தரவிட்டாள்.


No comments:

Post a Comment