Saturday, April 22, 2017

அழைப்பு மணி

ட்ரிங் ட்ரிங் - அதன் மண்டையில் தட்டினால் அது போடும் சத்தத்திற்குத் தான் எத்தனை வலிமை! உடனே சேவகன் உள்ளே வருவான், டீ, காபி, உள்ளே இருக்கும் விருந்தாளியை வெளியே அனுப்புவது, வெளியே இருப்பவரை காக்க வைப்பதா அல்லது உள்ளே அழைத்து வரவா என்று நிர்ணயிப்பது... எத்தனை ஆற்றல் அதற்கு. அந்தப்  பெரிய இருக்கையில் அமரும்பொழுது, தன் பதவி, அதற்கு கிடைக்கும் மரியாதை... 

வீட்டிலும் தன்னைச் சுற்றி உறவுக்காரர்கள். "அண்ணே..." "மாமா..." "சித்தப்பா..." என்று எத்தனைக் கோரிக்கைகள்.

தன்னால் எத்தனைப் பேர்களுக்கு புது வாய்ப்புகள்... புது வாழ்க்கை.

சும்மா தெருவில் நடந்தாலே நாலு பேர் விசாரிப்பார்கள். கோவிலுக்கு போனாலும் சரி, கல்யாணத்திற்குச் சென்றாலும் சரி, முதல் மரியாதை அவனுக்கே.

ஆஹா, அது அன்று.

இன்றும் பெரிய இருக்கை. மணி அடித்தால் ஓடி வருவதற்கு ஆட்கள். "என்னங்க?" என்று, குரலில் தன் அலுப்பை காட்டிக்கொள்ளாமல் கேட்கும் மனைவி . அவன் மௌனமாக சைகை செய்தால், புரிந்துகொண்டு, அவன் நினைப்பது நிறைவேற்றிவிடுவார்கள். 

ஆனால், அவனால் வெறும் மணியைத்தான் அடிக்க முடிந்தது. நகருவதற்கு கூட சக்கரவண்டித்தான். "எப்படி மாமா இருக்க? ஏதாவது வேணும்னா சொல்லு," என்று ஸம்ப்ரதாயத்திற்காக கூறும் உறவினர்... நிமிர்ந்து நின்ற உடல் கூனிக்குறுகி, நெஞ்சிலிருந்து உரம் குறைந்து...

மணி அடித்து அடித்துக் கூப்பிடுவது மனிதர்களையா என்ன? 

ஆனால் மணி அடித்தால் வருவதற்கு யமன் அவன் சேவகனில்லையே!

  

1 comment:

  1. அழைத்தவர். குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
    அழைத்தும் வராதவன் அந்த எருமை வாகனன்.

    ReplyDelete