Thursday, April 13, 2017

பச்சைக் கொடி, முத்துச் சரம்

 செடி கொடியை பார்த்து மகிழும் எனக்கு அதை வளர்க்கும் அளவிற்கு ஆர்வம் கிடையாது. எதுவுமே தானாக வந்தால் சரி, நான் முயற்சி எடுக்க வேண்டுமென்றால் சற்று தயங்குவது வழக்கம்.

ஒரு துளசி - எங்கிருந்தோ தேடி வரவே ஒரு தொட்டி வாங்கி வைத்தேன். நன்றாக வளர்ந்ததை பார்த்து எனக்கே ஆச்சர்யம். ஆனால் நான் பிரசவத்திற்கு என் தாய்வீட்டிற்கு சென்றபொழுது அது உயிரை விட்டது. பராமரிப்பு இல்லாமலா இல்லை அதன் காலம் முடிந்ததனாலா என்றுகூட தெரியாது.

பிறகு குழந்தைகள், பொறுப்புகள்... அவர்கள் சற்று வளர வளர, ஒன்று, இரண்டு என்று தொட்டிகள் அதிகரித்தன.

இன்று இருபதுக்கு மேல் இருக்கின்றன. செடியைப் பார்க்கும் பொழுதுதான் வாழ்க்கையில் ஆர்வம் என்பது என்ன என்று புரிந்துகொண்டேன். எனக்கு ஆர்வத்திற்கு என்றும் குறைச்சல் கிடையாது. அதைப் பற்றி சொல்லவில்லை. உயிர் என்பது எவ்வளவு ஆர்வத்துடன், பிடித்துக்கொள்ள ஒரு இடத்தை தேடி விடுகிறது. நாம் நடாத  செடி, நம் தோட்டத்தில் நட்டத்தை விட செழிப்பாக வளர்கிறது. வைத்தச் செடிகளில் பூச்சிப்  பொட்டு வரலாம், ஆனால் நடாததில்  வருவதும் இல்லை, அது வேகமாக குட்டிகளையும் போட்டு விடுகிறது.

சில நேரங்களில், நட்ட செடி போய்விட்டது என்று நினைக்கும்போது, துளிர் விட்டு மனதை குதூகலப் படுத்துகிறது.

எத்தனை விதங்கள் வாழ! குளுமை, எளிமை, அடக்கம் - இருக்கும் இடம் தெரியாமல், மௌனமாக, தன் வேலையைச் செய்துக் கொண்டு... நீர், வெயில், நிலம்... போதும்... அன்பு கிடைத்தால் இன்னும் தாங்காத சந்தோசம். வாங்குவதைவிட அதிகம் கொடுக்கும் பண்பு... பேர் கிடைக்கிறதோ இல்லையோ பூத்து குலுங்குவது பழக்கம்.

எழுந்தவுடன் என் சிறிய தோட்டத்தில் ஐந்து நிமிடம் இருந்தாலே போதும், மனதில் புத்துணர்ச்சி பெருகும்.

எதையுமே செய்ய முடியமா என்று நினைப்பது வீண். செய்து பார்த்தால் தானே தெரிந்துவிடும்.

1 comment: