Sunday, July 16, 2017

மெல்லத் திறந்த கதவு

"ஒரு வாரம் லீவு... சுற்றுலா போக திடீர் திட்டம்... அடுத்து ஞாயிறு சந்திக்கிறேன்..." மஞ்சுவின் மெசேஜ் வந்தது.

"நயவஞ்சகி," என்று சாரதா அவளை மனதிலேயே திட்டிக்கொண்டாள். "நேற்று வரை லீவுக்கு எங்கேயும் போகப்போறதில்லை என்று கூறி விட்டு இன்றைக்கு திடீரென்று எப்படிக் கிளம்பினாள்?" என்று முணுமுணுத்தாள்.


"ஒரு உதவி தேவை... என் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவேண்டும். குழிலியை வரச் சொல்லியிருக்கிறேன். அவள் கொஞ்சம் அஜாக்கிரதை என்றுதான் உனக்குத் தெரியுமே... சரியாகச் செய்கிறாளா என்று மற்றும் பார்த்துக்கொள், ப்ளீஸ்..." என்றது அடுத்த மணியுடன் வந்து சேர்ந்தது அடுத்த  மெசேஜ்.

"இவளுடைய வேலைக்காரிக்கு நான் வேலைக்காரியா!!!" என்று இன்னும் கடுப்பு ஏறியது சாரதாவிற்கு. மறுநாள் காலை குழிலி தாமதமாக வேறு வந்து நின்றாள். ஏற்கனவே ஆபீஸுக்கு லேட் ஆகவே, சாரதா அவளை எச்சரித்தாள், "நான் மாலை வந்து பார்ப்பேன். ஏதாவது செடி வாடியிருந்தால் நீ நாளை இரண்டு முறை வந்து தண்ணீர் விட வேண்டியிருக்கும், சரியா?"

"அ-ஆம், மா,  அது கிட்ட சொன்னேன், தானே தண்ணீர் வருமே, அந்த மாதிரி ஏதாவது ஏற்பாடு செஞ்சிக்கன்னு. இது தான் கேட்டுக்கலை," என்று சொல்லிக்கொண்டே மஞ்சு வீட்டை அடைந்தாள். "இது என்னம்மா? நீ கதவு திறந்தாயா?"

"நானா? இல்லையே?" என்று சாரதா பீதியுடன் கதவருகில் வந்தாள். மெல்லத் தள்ளினாலே கதவு திறந்துகொண்டது. ஒருவரை ஒருவர் சற்று பயத்துடன் பார்த்துக்கொண்டனர்.

"உள்ளே போய் பார்க்கலாம் வா," என்று மனதில் தைரியத்தை வரவழைத்துக்  கொண்டு உள்ளே சென்றாள்  சாரதா. தயக்கத்துடன் குழிலி பின்னே தொடர்ந்தாள். வீடு அமைதியாக இருந்தது, ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன, எந்த பொருளும் சிதறியோ இடம் தவறியோ இருந்தாற்போல் தெரியவில்லை.

"மஞ்சு கவனிக்கவில்லையா என்னவோ! சரி, நான் கிளம்புகிறேன். சரியாக பூட்டிவிட்டு போ," என்று கூறி சாரதா சென்றுவிட்டாள். மாலையில் திரும்பியவளுக்கு மஞ்சு வீட்டு கதவு எங்கே நினைவில் இருக்கும்? அவள் தனக்கு வீட்டில் காத்திருக்கும் வேலைகளைப் பற்றி எண்ணிய படியே உள்ளே நுழைந்தாள். முடிக்கும் பொழுது, மறுநாளைக்காக வேண்டியதைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கியபடியே படுக்கச் சென்றாள்.

மறுநாள் குழிலி  வருவாளா இல்லையா என்ற குழப்பம். கிளம்பும் பொழுது கதவருகில் சென்று லேசாக தொடும் பொழுதே அது திறந்து கொண்டது. இதயம் பயத்தில் படபடத்தது. கணவன், குழந்தைகள் கிளம்பி விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் சற்று முழித்தாள். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். ஒன்றும் இடத்தை விட்டு நகரவில்லை, ஆனால் தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது. வெளியே ஓடி வந்தாள். மஞ்சுக்கு சொல்லி அவளைக் கவலைப்பட வைத்து எந்த லாபமும் இல்லை என்று தோன்றியது. குழிலி சரியாகக் கதவைப் பூட்டவில்லையோ என்ற நினைப்பும் அவளைச் சற்று நிதானப்படுத்தியது...

இப்பொழுது என்ன செய்வது? சாவி குழிலியிடம் இருந்தது.

தன் வீட்டுக் கதவை திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள். பதினொன்று ஆகியும் அவள் வராததால் மஞ்சுவிற்கு போன் செய்தாள். குழிலி நம்பர் மட்டும் வாங்கிக்கொண்டு வைத்து விட்டாள். மஞ்சு பாவம் என்று தோன்றியது. அவளை ஏதாவது கூறி மனக்கலக்கம் உண்டாக்க வேண்டாம் என்றும், தானே பூட்டுவதற்கு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்  நினைத்தாள்.

"என்ன குழிலி, மறுபடியும் சரியாக பூட்டாமல் போய் விட்டாய். வீடு திறந்து கிடக்கிறது. சீக்கிரம் சாவியை எடுத்துக் கொண்டு வா."

"என்னம்மா சொல்றீங்க? நான் சரியாகத் தான்  பூட்டினேன்! இப்போது வேலைக்கு வந்திருக்கேன், உடனே எங்கிருந்து சாவி கொண்டு வரது? வீட்டுக்கு போய் எடுத்துக் கொண்டு வரணும்."

வேறு வழியில்லாமல், ஆபிஸில் அரை நாள் லீவு போட்டு குழிலி வரும் வரை காத்துக்கொண்டிருந்தாள். வந்த உடன் அவளைத் திட்டிக்கொண்டே கதவைப் பூட்டி, சாவியைத் தன்னிடமே வைத்துக்கொண்டு  ஆபிஸுக்கு கிளம்பினாள்.

மாலை திரும்பும் பொழுது மஞ்சு வீட்டு பக்கம் திரும்பிப் பார்த்தாள். அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள். கதவு காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. விழித்துப்பார்த்தாள். என்ன செய்வது என்று தடுமாறினாள். அவளும் குழிலியும் சரியாக பூட்டியிருக்கா என்று பரிசோதனை செய்த பின் தானே சென்றனர். அவளிடம் தான் இப்பொழுது சாவி இருந்தது. பையிலிருந்து எடுத்து அதையும் நிச்சயப்படுத்திக் கொண்டாள்.

கதவருகில் சென்றாள். உள்ளே இருட்டாக இருந்தது. முழுதாகக் கதவைத் திறந்தாள். ஓர் அடி உள்ளே எடுத்து வைத்தாள். எங்கும் நிசப்தம், அவள் தனிமையை வலியுறுத்தியது.  பின் வாங்கினாள். "சே! கற்பனைதான் எல்லாம்," என்று மறுபடியும் உள்ளே சென்று வாச உள்ளின் விளக்கைப் போட்டாள். அந்த உள் பளிச்சென்றது. ஆனால் மற்ற அறைகள் இருட்டில் மூழ்கின.

 தன் கணவனைக் கூப்பிட்டாள். "என்ன! வீடு திறந்திருக்கிறதா? நீ தான் சரியாக பூட்டியிருக்க மாட்டாய்," என்று அவள் மீது குற்றம் சாற்றினான். "வீட்டை சரியாகப் பார்த்தாயா? எல்லாம் இருக்கிறதா?" மட மடவென்று எல்லா அறைகளிலும் விளக்குகளையும் போட்டான். அவன் தைரியம் அவளை வெட்கப்படுத்தினாலும், எந்த உள்ளிற்கும் தனியாகப் போகாமால் அவனையே தொடர்ந்தாள். தன் பின் பக்கம் பாதுகாப்பு அற்றதாக இருப்பது போல் தோன்றவே, பின்னாடி திரும்பிப் பார்த்துக் கொண்டாள். அவன் படுக்கைக்கு அடியில் பார்த்தான். அவளையும் பக்கத்து அறையில் அதையே செய்யச் சொன்னான்.

அவள் அந்த அறையின் வாசலில் நின்றாள். ஒரு நிழல் நெருங்கவே, தூக்கி வாரிப்போட்டது. கணவன் தான். உள்ளே நுழைந்ததும் மண்டியிட்டு கீழே பார்த்தான். "உள்ளில் எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று கேட்டான்.

ஒரு முறை நோட்டம் விட்டாள். மௌனமாக அங்கு இருந்த பொருட்கள் அவள் பக்கம் திரும்பி பார்ப்பது போல் இருக்கவே, ஆம் என்று வேகமாக தலை ஆட்டி வெளியேறினாள்.

சாவியை வாங்கிக்கொண்டு அவன் பூட்டினான். கதவைத் தள்ளிப் பார்த்தான். "நீ சரியாக கவனித்து இருக்க மாட்டாய்," என்று மறுபடியும் அவளிடம் குறைப்பு பட்டுக் கொள்ள இருவரும் வீடு திரும்பினர்.

மறுநாள் காலை... கதவு திறந்திருந்தது.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சாரதாவிற்கு கணவன் தன்னை திட்டியதற்கு கோபம் வந்தது, அதே நேரம், இந்த மர்மத்தினால் பயமும் ஏற்பட்டது.

"மஞ்சுவுக்கு போன் செய்..."

"ஐயோ..."

"இன்னும் என்ன யோசிக்கிறாய்? அவளுக்கு தெரிந்தே ஆக வேண்டும் இல்லையா?"

வேறு வழியில்லாமல் சாரதா போன் செய்தாள்.

"என்னது!" என்று மஞ்சு கதறினாள். அன்றே கிளம்பி  மாலை வந்துச் சேர்ந்தாள். நடந்த கதையைக் கேட்டு அவளும் திடுக்கிட்டாள். "இன்று இரவு எங்கள் வீட்டில் தங்கி விடுங்கள்," என்று சாரதாவும் அவள் கணவனும் வற்புறுத்தினர்.

இரவு முழுவதும் தூக்கமே இல்லை. எத்தனை முறை பூட்டினாலும் சிறிது நேரத்தில் திறந்து கொள்ளும் மர்மம் அவர்கள் தூக்கத்தை பறக்கடித்தது. மந்திரவாதியை அழைத்து வரலாம் என்றால் யாரையும் தெரிய வேற தெரியாது... அந்த வீட்டில் நிலவிய மௌனமும் இருட்டும் கற்பனையை இன்னும் வளர்த்தன.

சூரியன் கிழக்கே உதித்தான். பேயாக இருந்தாலும் அது பகல் நேரத்தில் தொல்லை கொடுக்காதல்லவா? இப்பொழுதாவது பூட்டிய கதவு பூட்டிய படியே இருக்க வேண்டுமே என்று வேண்டிக்கொண்டனர். ஆனால் அந்த விஷமக்கார பேய் ஓய்வே எடுக்காது போல!

 மஞ்சுவின் கணவனுக்கு இப்படியே இருந்தால் பயித்தியம் பிடித்து விடும் போல இருந்தது. "பூட்டு நிருவத்தினரிடம் கேட்டு பார்க்கிறேன்," என்று கூறினான்.

நிறுவனத்தில் இருந்து ஒருவன் மத்தியம் வந்து சேர்ந்தான். பூட்டிப் பார்த்தான். "நன்றாக தானே பூட்டுகிறது என்றான்."

"சற்றுப் பொறுங்கள்," என்றனர் நால்வரும்.

அரை மணி ஆகியும் நிலைமை மாறவில்லை. ஆனால் அவனை நகர விடாமல் அங்கேயே அமர்த்தி வைத்தனர். ஒரு மணி நெருங்க, திடீரென்று பூட்டில் ஒரு க்ளிக் என்ற சத்தம். கதவு மெல்லத் திறந்ததது.

வந்தவனும் மிரண்டான்.

பழுது பார்த்தான். "அது ஒண்ணும் இல்லை, சார்... இங்கே இந்த பேரிங் தேய்ந்து போயிருக்கு. பூட்டை மாற்றி விடுங்கள்," என்று சொல்ல, எல்லோரும் தன் பயத்தை நினைத்துத் தலையில் அடித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment