Friday, April 13, 2018

ராம்

ருக்மிணியால் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மேடை மீது அவளுடைய தோழி மது அவையோர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வணங்கினாள். தன்னுடன் ஆடிய, அவள் பயிற்சி கொடுத்த மாணவ மாணவிகளும் அற்புதமாக ஆடியிருந்தார்கள். அவையில் எழுந்த கரகோஷம் அதற்கு அத்தாட்சி. இது வெறும் மகிழ்ச்சிக்காக ஆடப்படும் நடனம் அல்ல, சிந்திக்கவைக்கும் கருத்தும் கூட.


கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியை, எச்சரிக்கை கூட செய்யாமல் காட்டில் விடுவது - எந்த விதத்தில்  அப்படிச் செய்த ஒருவனை  கடவுளாகக்  கருத முடியும்?

சிந்தனையை விட அதை படைத்த விதம் அவ்வளவு தீவிரமாகவும் நம் கவனத்தை ஈர்ப்பதுமாக இருந்தது. ஆனால்  மனதில் ஒரு சஞ்சலமும் ஏற்பட்டது. இந்தக் கேள்வி புதியது அல்ல. ஆனால் எல்லா திசையிலிருந்து வருவதைத் தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கு பதில் ஏதும் இல்லாதது அவள் மனதை உலுக்கியது. இதை பார்ப்பது கூட பாவம்  என்று தோன்றியது. ஆனால், சொல்ல நினைப்பதை கச்சிதமாகக் கூறியதால் நிராகரிக்கவும் முடியவில்லை.

வீட்டுக்கு வரும் வழியில் இன்னொரு அதிர்ச்சி. ராமரின் பெயரைச்சொல்லி படுகொலை, கற்பழிப்பு என்ற செய்தி பரபரப்பாக ரேடியோவில் சர்ச்சிக்கப் பட்டது ...

கண்களில் நீர் ததும்ப, உடலில் ஆத்திரம் பொங்கி எழ, தன் வீட்டில் இருந்த கடவுளின் சந்நிதியின் முன் போய் நின்றாள் ருக்மிணி. "நீ செய்த தவறு மட்டும் இல்லாமல், உன் பெயரில் செய்யப் படும் குற்றங்களுக்கு பதில் சொல்லாமல் இங்கு அமர்ந்திருக்கிறாயே! உனக்கே வெட்கமாக இல்லை?"

அறைக்கதவை வேகமாக மூடி விட்டு தன் படுக்கை அறைக்குச் சென்றாள்,  படுக்கை மீது விழுந்து அழுதாள். தான் நம்பியிருந்த தெய்வம் கையை விட்ட குறை அவள் நெஞ்சை அடைத்தது.

வாசற் கதவு திறக்கும் சத்தம் கேட்டு, கணவன் மாதேஷ் தான் வருகிறான் என்று அவசரமாகக் குளியறைக்குச் சென்று தான் அழுத்தத்திற்கான அறிகுறியை மறைக்க இரண்டு சொம்பு தண்ணீர் விட்டுக்கொண்டாள். குளிர்ந்த நீர் உடலில் பட, சற்று முன் இருந்த ஆவேசம் அடங்கியது.

துடைத்துக்கொண்டு, உடை மாற்றிக் கொண்டு வெளியே வரும் பொழுது, இன்னும் கொஞ்சம் நிதானம் அடைந்தாள்.

"வரும் வழியில் உபன்யாசம் கேட்டுக்கொண்டு வந்தேன்," என்றான் மாதேஷ். "என்ன அழகாக ஒருவர் வர்ணித்திருக்கிறார் - சீதை என்பவள் நம் மனது,  ராமர்  நம் ஆன்மா , எல்லோருள்ளிலும் இருக்கும் ஒளி, ஹனுமான் நம் சுவாசம், லக்ஷ்மணன் நம் விழிப்புணர்வு, ராவணன் தான் அஹங்காரம்...அஹங்காரம் நம் மனதை அபகரிக்கும் பொழுது, நம் மனது, ஆன்மாவிடமிருந்து பிரிகிறது... அதற்கு ஹனுமானாகிய சுவாசம் தான் இவை இரண்டையும் மறுபடியும் இணைக்கிறது..."

ருக்மிணி மாதேஷைக் கண் கொட்டாமல் பார்த்தாள். மெதுவாக கடவுள் அறைக்குச் சென்று, கதவைத் திறந்து, விளக்கேற்றி எதிரில் அமர்ந்தாள். கண்களை மூடி, மூச்சில் கவனத்தை நிலைப்படுத்தி ராம ஜபம் செய்தாள். ஒரு வித அமைதி படர்ந்தது.

சில நொடிகளுக்குப் பிறகு வீட்டு வேலைகளை முடிக்கும் பொழுது அவளுக்கு கிடைத்த அந்த நிம்மதியில் மிதந்து கொண்டே, இந்த தாரக மந்திரம் ஏன் எல்லோருக்கும் கை கொடுப்பதில்லை என்று  வியந்து போனாள். வாயால் மட்டுமே அவர் பெயரைச் சொல்லியோ, அவர் கதையை மட்டும் படித்து அதை விமர்சிப்பதிலோ எதை அடைய முடியும்? அந்த ராம நாமத்தை உள்ளுணர்வில் அனுபவித்தால்தானே உண்மையான பலன்.

போன் மணி அடித்தது. "வந்ததற்கு மிக்க நன்றி... எங்கே வர மாட்டாயோ என்று நினைத்தேன்," என்று மது சிரித்துக்கொண்டே கூறினாள்.

"நீ இவ்வளவு தீவிரமாக உழைத்திருக்கிறாய்... அது நன்றாகத் தெரிந்தது..."

"என்ன தெரிந்து என்ன? அடுத்த வேளை எங்கிருந்து சோறு வரும் என்றுதான் தெரிவதில்லை. வாழ்க்கையே சூனியமாய் இருக்கிறது," என்று அலுத்துக் கொண்டாள்  மது.

பாவமாக இருந்தது ருக்மிணிக்கு. கடவுள் பெயரை ஜெபி, மன நிம்மதி கிடைக்கும் என்று கூட அவளிடம் சொல்லிப் பயனில்லை. "நான் வேண்டிக்கொள்கிறேன், எல்லாம் சரியாகி விடும்," என்று ஆசுவாசப்படுத்தப் பார்த்தாள் .

"ஐயோ வேண்டாம்ப்பா, உன் ராமரிடம் எனக்கு எதுவும் வேண்டாம்," என்று மது சிரித்துக்கொண்டே தொடர்பை துண்டித்தாள்.

ருக்மிணிக்கும் சிரிப்புதான் வந்தது. 'அவன்' இல்லை என்ற போதிலும் அவனால் கொடுக்க முடியும் என்று தானே மதுவும் நம்புகிறாள்!
எதுவாக இருந்தால் என்ன? இப்பொழுது ருக்மிணி இருக்கும் நிலையில், இதுவும் அவளை பாதிக்கவில்லை...



No comments:

Post a Comment