Thursday, March 1, 2018

இங்கும் ஒரு ஜான்சி ராணி

"என்ன பொன்னுத்தாயி? பள்ளிக்கு கிளம்பி விட்டாயா?" என்று பக்கத்து வீட்டு காஞ்சனா கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள்.

"அதுக்குத்தான் கிளம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஆபிஸிலிருந்து போன் வந்தது..." முழு உண்மையை கூறுவதா வேண்டாமா என்று தயங்கியவள், சந்தோஷம் தாங்காமல் மேலும் கூறினாள், "என்னை நிரந்தரமாக்கப் போகிறார்களாம்!"

பொன்னுத்தாயி அவள் குடியிருக்கும் குப்பத்தின் அருகிலிருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உதவி சமையல்காரியாக பணியாற்றினாள்.  அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும். மகனும் மருமகளும் மரம் வெட்டி, கழனியில் வேலைச் செய்து சம்பாதிப்பது அவர்களுக்கே சரியாக இருந்தது. இந்த வேலையே அவளுக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் கிடைத்தது பெரிய வரம் போல்.

நிரந்தரமாகாதா என்று அவளும் இத்தனை வருடங்களாக காத்துக்கொண்டிருந்தாள். இன்று தொகுதி வளர்ச்சி ஆபிஸிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்ததில் அவளுக்கு தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் மகிழ்ச்சியில் பறந்தாள். ஆனால் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

தொகுதி வளர்ச்சி ஆபிஸுக்குச் சென்று அழைத்தனுப்பிய அதிகாரியை சந்திப்பதற்காக காத்திருந்தாள். அவர் பத்து நிமிடம் கழித்து ஒரு வெத்து காகிதம் கொடுத்து, "இதில் கையெழுத்துப் போட்டுக் கொடு," என்றார்.

அவருக்குப் பின்னால் நின்ற சிப்பந்தி ஏதோ சைகை செய்தான். தன்னை உற்சாகப் படுத்துகிறானென்று அவளும் வணக்கம் போட்டு காகிதத்தை வாங்கிக்கொண்டாள்.

அதிகாரி தன் அறைக்குத் திரும்பினார். "யோசித்துப் போடு," என்று சிப்பந்தி கூறி முடிப்பதற்குள் அவனுக்கு அழைப்பு வரவே அவன் உள்ளே ஓடினான்.

"பொறாமை," என்று நினைத்துக் கொண்ட அவள், பெருமையாக தன் பெயரை எழுதினாள். அவளுக்கு அதுவும் ஒரு சிறு சாதனைதான். காஞ்சனாவின் பேத்தியிடம் கற்றுக்கொண்டாள். அதை இப்பொழுது உபயோகிப்பதில் என்ன ஒரு பெருமை!

காகிதத்தை வாங்கிக்கொண்ட அதிகாரி, "கடுதாசி வந்து சேரும்," என்று ஆசுவாசப்படுத்தி அனுப்பினார்.

கடிதமும் வந்தது. அவள் ஊரிலேயே படித்த குழந்தைகளில் ஒருத்தியிடம் காண்பித்து வாசிக்கச் சொன்னாள்.

"தொகுதி வளர்ச்சி அய்யா அவர்களுக்கு பொன்னுத்தாயி எழுதிக்கொள்பது.
என் வயதை குறித்து எனக்கு நிரந்தரமாவதில் விருப்பமில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு...

... பொன்னுத்தாயி"

ஆமாம் அவளே தன் கைப்பட எழுதிய அவளுடைய பெயர் இந்த வாக்கியத்திற்கு அத்தாத்ச்சியாக இருந்தது. பொன்னுத்தாயிக்கு தலைச் சுற்றியது.

"என்ன தாயி? என்ன கடுதாசி? நிரந்தரமாக்கி விட்டார்களா?" என்று காஞ்சனா கேட்டுக்கொண்டே அவள் குடிசையுள் நுழைந்தாள். அந்தப் பெண் விஷயத்தைச் சொன்னாள். "யாருக்காவது விற்றுவிடுவார்கள் உனக்கு கிடைக்க வேண்டிய பதவியை," என்று காஞ்சனா அனுபவத்தில் கூறினாள்.

பொன்னுத்தாயி சீறி எழுந்தாள். கையில் மண்ணெண்ணெய் டப்பாவை எடுத்துக்கொண்டாள். 

"அயோ ஆயா, தற்கொலை செய்துகொள்ளாதே!" என்று அந்தப்பெண் கதறினாள்.

"நான் ஏன் செய்துகொள்ளப் போகிறேன்! என் உரிமை, நான் போராடுவேன்!"

அவள் ஊர் மக்கள் அவளை பின் தொடர அவள் அந்த அதிகாரி அரை வாசலில் நின்றாள். "என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி எனக்கு கிடைக்க வேண்டியதை வேறு யாருக்கோ கொடுக்கிறாயா! நான் இங்கேயே உயிர் விட்டு விடுவேன், எல்லோர் முன்னேயும்," என்று கொதித்தெழுந்தாள்.

முதலில் இது வெறும் பயமுறுத்தல் என்று நினைத்த அதிகாரி அவள் தன்  மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்ளும்பொழுது சற்று பயந்தான். ஒரு பெண் நடப்பதை போனில் வீடியோ எடுப்பதைப் பார்த்து நடுங்கினான். சமாதானப் படுத்தி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பினான்.

அவளை நிரந்தரம் ஆக்கவில்லைதான். தள்ளி இருந்த கிராமத்தில் வேலையில் அமர்த்தினான். "ஆனால் என் இடத்தில் யாரையும் அமர்த்தவில்லை, பார்த்தாயா?" என்று காஞ்சனாவிடம் பெருமையாகக் கூறிக் கொண்டாள் .

"அமர்த்திதான் பார்க்கட்டுமே! நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்," என்று காஞ்சனாவும் தான் முதன்முறையாக போராடி ஜெயித்த சந்தோஷத்தில் பூரித்தாள். 

1 comment: