Saturday, May 26, 2018

துடுப்பில் அடங்கிய துடிக்கும் நினைவுகள்

"ஐயோ, தோசை ரொம்ப ஒட்டிக்கறது," மருமகள் சாரதா அலுத்துக் கொண்டாள். "ஏன் தான் இந்த வெல்ல தோசையை பண்ண ஆரம்பிச்சேனோ!"

மெதுவாக அங்கு நடந்து வந்த மாமியார் விமலா, "நான் பார்க்கட்டுமா?" என்று கேட்டாள்.


சாரதா முறைத்த முறையில் வேறு யாராவதாக இருந்தால் அங்கிருந்து ஓடியிருப்பார்கள். வயதாகிய பின் ஓட முடியாதது மட்டுமில்லாமல், மருமகளுக்கு தோசை மேலே தான் கோபம், தன் மீதில்லை என்று அறிந்த விமலா மெதுவாக சமயறைக்குள் வந்தாள்.

"முட்டி வலி, முதுகு வலின்னு  இருக்கற உங்களுக்கு எதுக்கு இந்த சிரமம்?" வெடுக்கென்று கேட்டாள் சாரதா.

"பாவம் நீ கஷ்ட படறயே! என்னால முடியறதான்னு பாக்கறேன், இரு," என்று விடாமல் விமலா தோசை கல்லுடன் போராடும் சாரதா வை நகர்த்தி துட்டுப்பை எடுத்துக்கொண்டாள். தோள் பட்டை வலித்தது.

"உங்களுக்கு எதுக்குமா சிரமம்?" என்று மறுபடியும் சாரதா சம்பிரதாயமாக கேட்டாள். அவளுக்கும் கை  வலித்தது. தட்டு மேல் வைத்திருந்த இரண்டு மூன்று தோசைகளில்  எதுவுமே முழுதாக இல்லை.

"வெல்லம் அதிகம். கொஞ்சம் மாவை கலந்துக்கோ," என்று சொல்லி விமலா துடுப்பைப் பார்த்தாள். "இத விட கொஞ்சம் கூர்மையா இருந்தா எடுக்கறது சுலபமா இருக்கும்."

"அதுக்கு இப்ப எங்க போறது?" சாரதா விரக்தியுடன் கேட்டாள்.

"இரு," என்று விமலா அறைக்கு வெளியே வந்து தன் மகன் கோகுலை அழைத்தாள். "கொஞ்சம் பரண்மேல பார்," என்று அவனுக்குக் கட்டளை இட்டாள். ஏறியவனுக்கு, "ஒரு அட்டைபெட்டில ஒரு துடுப்பு இருக்கு, அதை எடு," என்றாள்.

"அம்மா,இங்க பின்னால ஒரு கைத்தடி கூட இருக்கே?" என்றான்.

விமலா சற்று அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் இருந்தாள். "பாரு, உனக்கு உபயோகமா இருக்கும்," என்று அதையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான்.

கலங்கிய கண்களுடன்  நிற்கும் தாயைக் கண்டு அவன் பதற்றத்துடன் கேட்டான், "என்னம்மா, என்ன ஆச்சு?"

"ஒண்ணும் இல்லடா! மாவு கலந்தையா சாரதா? இதால எடுத்துப்பார்," என்று துடுப்பை தன் மருமகளிடம்  நீட்டினாள்.

சாரதா முயற்சி செய்துகொண்டிருக்கும் போது  விமலா பழைய ஞாபகங்களில் மூழ்கினாள்.

"உங்கள கடைக்கு அனுப்பிச்சாலே இது தான் பிரச்சனை. இப்படி கூர்மையான துடுப்பை வெச்சி நான் எப்படி தோசைய எடுக்கறது? கிழிஞ்சி கிழிஞ்சி வர்ரது," என்று தன் கணவன் விஸ்வநாதனை திட்டிக்கொண்டே முயற்சி செய்தாள். துடுப்பின் கூர்மையான அடிபாகம், இப்படி அப்படி திருப்பும் பொழுது மாட்டிக்கொண்டு அதை கிழிக்கவே தோசை அலங்கோலமாக நின்றது. விஸ்வநாதனும் அதை பார்த்துக்கொண்டு பரிதாபமாக நின்றான்.

"அதுக்கு மேல அந்த கைத்தடி வேற. வீண் செலவு," என்று அவள் முணுமுணுத்தாள்.

"அது எங்கம்மாக்காக," என்று அவன் சற்று உறுதியுடன் கூறினான்.

விமலா இளக்காரமாக அவனைப் பார்த்தாள். "அதனால தான் வீண் னு சொல்றேன்."

"என்ன புதுசா இப்படி பேசற?" விஸ்வநாதன் கடிந்து கொண்டான்.

"உங்கம்மா அத தொட மாட்டா, நான் எழுதிக் கொடுக்கறேன். நீங்களே பாருங்கோ," என்று விமலா சவால் விட்டாள்.

"அம்மாவால உக்காந்தா எழுந்துக்க முடியல, ரொம்ப நடக்க முடியல. ஏன் வேண்டாம்னு சொல்லப்போறா?" என்று விஸுவும் அவள் சொன்னதை அங்கீகரிக்கவில்லை.

ஆனால் விமலாதான் ஜெயித்தாள். "எனக்கு எதுக்குடா கொம்பு இப்ப? அத பிடிச்சிண்டேன்னா அப்புறம் நான் எப்பவுமே சொந்த கால்ல நிக்க முடியாது!"

"ஏம்மா, இவ்வளவு கஷ்ட படறன்னு தானே வாங்கினேன்!"

"என்ன கேக்காம எதுக்கு வாங்கின? வீண் செலவு," என்று தன் பங்குக்கு அவளும் திட்டிவிட்டுச் சென்றாள்.

இன்று, இத்தனை வருடங்களுக்குப் பிறகு, விஸு இல்லாத நேரத்திலும், அந்த துடுப்பு உதவியது. அந்த கைத்தடியை தொடும் பொழுது அன்றே அவன் தனக்காகத் தான் அறியாமலேயே அதை வாங்கினானோ என்னவோ என்ற எண்ணம் விமலா மனதில் எழ  அதை உபயோகிக்க ஆரம்பித்தாள். ஏதோ அவன் கையைப் பிடித்து நடப்பது போல் ஒரு திருப்தியுடன்.
  

2 comments:

  1. பழைய பொருளை தூக்கி போடும் காலங்களில். பழசு பழசு தான் . எல்லாம் ஒரு கதை சொல்லும். மனதில் நின்ற நினைவுகள் கதையாகி வருவதில் ஒரு ஆனந்தம் தான்.

    ReplyDelete