"டேபிளை ஒழிச்சிடு," என்று நாகலட்சுமி தன் மகள் ராதாவிடம் கூறும்பொழுது, மகன் கிட்டாவும் தொடர்ந்தான். நாகலட்சுமியின் தங்கை வனஜா தன் மகள் காமினிக்கு சைகை செய்தாள், "நீயும் ஒத்தாசை செய்," என்று.
வனஜாவின் மகன் பிரபு எழுந்து, தன் போனை நோண்டிக்கொண்டே வாச உள் பக்கம் நடந்தான். "வாயேன் பிரபு, நீயும் உதவலாமே," என்று நாகு அவனை அழைத்தாள். காதில் விழவில்லையோ இல்லை விழாத மாதிரி நடித்தானோ, தெரியவில்லை; சோஃபாவில் அமர்ந்து காதில் இயர் போன்ஸ் மாட்டிக்கொண்டு வெளி உலகுடன் தொடர்பை துண்டித்தான்.
வனஜா அவனுக்கு பரிந்து, "நானே வந்துட்டேன்," என்று சுறுசுறுப்பாக எழுந்து, கைகழுவி, மற்றவர்களுக்கு உதவினாள்.
யார் இவர்கள்? நாகுவும் வனஜாவும் சகோதரிகள். நாகுவின் மகள் ராதா இப்பொழுதுதான் படிப்பு முடித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறாள். மகன் கிட்டா என்னும் கிருஷ்ணஸ்வாமி பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கிறான்.
வனஜா இரண்டு வாரம் லீவுக்கு தன் குழந்தைகள் பிரபு மற்றும் காமினியுடன் நாகு வீட்டிற்கு வந்திருந்தாள். பிரபு கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படித்து கொண்டிருந்தான். காமினி இந்த வருடம் பன்னிரெண்டாவது வகுப்பு.
நாகுவும் வனஜாவும் சமையலறையில் வேலையை முடித்து, சற்று படுத்துவாறு ஊர் வம்பு பேசிக்கொண்டிருக்கும் பொழுது வாச உள்ளில் சத்தம் கேட்டு வனஜா எழுந்து ஓடினாள். "என்ன கண்ணா? என்ன ஆச்சு?"
காமினி அண்ணன் பிரபு மீது புகார் செய்தாள். "என்ன புக் படிக்க விட மாட்டேங்கறான்."
"நான் கால் நீட்டற எடத்துலலாம் அவ வந்து உக்கார்றரா!" என்று அவன் பதிலுக்கு முறையீடு செய்தான்.
"நான் உக்காறர இடத்துலலாம் அவன் கால நீட்டறான், உதைக்கறான்!"
"சரி சரி, நீ என் கூட வா, அவன் இருக்கற எடத்துல நீ ஏன் இருக்க?' என்று வனஜா காமினியை அழைத்துக் கொண்டாள். "உனக்குத்தான் தெரியும் இல்ல, அவன் உன்ன சீண்டுவான்னு, எதுக்கு அவன்கிட்ட போற?"
"நான் ஒண்ணும் அவன்கிட்ட போல. நான் ராதா அக்காவோட இருந்தேன். அவனாத்தான் நான் இருக்கற எடத்துல வந்து தொந்தரவு செஞ்சான். அக்காக்கு டிஸ்டர்ப் ஆகும்ன்னு நான் வாச உள்ளுக்கு வந்தேன்," என்று காமினி குரல் எழுப்பினாள்.
"ஷ்ஷ்... சரி... விடு."
"நீ அவன எப்பவுமே ஒண்ணுமே சொல்றதில்ல!" காமினி சீறினாள்.
வனஜா அவளை வாயை மூடிக்கொள்ள சைகை செய்தாள். அதற்குள் பிரபு வந்தான், "எனக்கு போர் அடிக்கறது. பைசா கொடு. நான் சினிமாக்கு போறேன்."
"நானும் வருவேன்," என்று தன் சண்டையை மறந்த காமினி துள்ளி குதித்தாள்.
"ஏய் போ!" என்று பிரபு அவளை தள்ளிவிட்டான். ராதா இங்கு நடக்கும் கூச்சலைக் கேட்டு எட்டிப் பார்த்தாள். சினிமா போகப்போகிறான் பிரபு என்று அறிந்ததும், அவளும் போக ஆசைப்பட்டாள். "கிட்டா வரானான்னு கேட்டுக்க. நீங்க நாலு பேரும் போயிட்டு வாங்க," என்றாள் நாகு.
பிரபு தன் அம்மாவை பார்த்து முறைத்தான். "எனக்கு மூடே போயிடுத்து! ஏதோ ஜாலியா போகலாம்னா இப்போ காமினிக்கு காவல் மாதிரி நடந்துக்கணும்."
ராதா அதிசயமாக அவனைப் பார்த்தாள். "நாங்களும் இருக்கோம், பிரபு."
"உன்னையும்தான்," என்றான் வெடுக்கென்று.
"என்ன நானே பார்த்துப்பேன். உனக்கு வரணும்னா வா இல்லனா இங்கேயே இரு," என்று ராதா காமினியையும் கிட்டாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.
நாகு பிரபுவைப் பார்த்து ஆதரவாக கேட்டாள், "கூட போயேன், கண்ணா... உனக்கு கிட்டா இருக்கானே பேச்சு துணைக்கு. ராதா காமினிய பார்த்துப்பா, கவலைப் படாதே." ஏனோதானோ என்று பிரபு கிளம்பினான்.
வனஜா இருந்த இரண்டு வாரங்களில் நாகுவுக்கு கோபமும் வருத்தமும் அதிகரித்தது. வனஜா கிளம்பும் அன்று, அவள் பிரபுவின் நடத்தையைப் பற்றியும், வனஜா பிரபுக்கு கொடுக்கும் இடத்தைப் பற்றியும் பேச நினைக்கும் பொழுது வனஜாவே ஆரம்பித்தாள், "அக்கா, ராதா வயதுக்கு வந்த பெண், கல்யாணத்திற்கு நிற்கிறாள். ஆபிசிலிருந்து இவ்வளவு லேட்டா வரது, பிரெண்ட்ஸோட சுத்தறது, இதெல்லாம் நல்லா இல்லை. நாளைக்கு ஏதாவது ஒன்று என்றால் நாமதான் வருத்தப் படுவோம்."
"நீ சொல்வது சரிதான், வனஜா. எனக்கு நீ பிரபுக்கு கொடுக்கும் இடத்தைப் பார்த்தால் ராதா, காமினி போன்ற பெண்களை பற்றி நினைத்தாலே பயமாக இருக்கு. பொறுப்பு இல்லை. பெண்களை துச்சமாக எண்கிறான். ஏன், உன்னையே தூக்கி எரிந்து பேசுகிறான். இவன் யாருக்கு பாதுகாப்பு? இவனே பெண்களுக்கு ஆபத்து என்று நினைக்கிறேன்."
வனஜா முகம் சுளித்தாள். "அவன் ஆண். எப்படி இருந்தாலும் பிழைத்துக்கொள்வான். நீ உன் மகளைப் பற்றி கவலைப்படு. என் குழந்தைகளை நான் வளர்க்க வேண்டிய விதத்தில் வளர்க்கிறேன்."
"ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒன்று என்று நீ செய்வது நல்லதிற்கில்லை," என்று நாகு எச்சரித்தாள்.
"உலகம் அப்படித்தான், நாகு. நீ ராதாக்கு என்ன உரிமை கொடுத்தாலும் ஒரு நாள் அது பறிபோகத்தான் போகிறது. நல்ல விதமாக போனால் பரவாயில்லை," என்று சொல்லும் விதத்தில், சொல்லாமல் பல விஷயங்களை சொல்லி விட்டாள்.
நாகு நகைத்தாள். "நல்லதோ கெட்டதோ, ஏத்துக்க மனோபலம் வேணும். அதைத்தான் அவளுக்கு நான் கத்துக்கொடுக்கறேன். அவளையும் பயந்து வீட்டுல பூட்டி வெக்க மாட்டேன். கிட்டாவையும், ஆண், அதனால் எப்படி வேணும்னாலும் நடந்துக்கலாம்னு இருக்க விட மாட்டேன்."
வனஜா சிரித்தாள். "பயித்தியக்காரி. ஆணும் பெண்ணும் சமமா?"
நாகு வனஜா தோள் மீது கை போட்டு பொறுமையாக கூறினாள். "அங்குதான் நீ தவறு செய்கிறாய். நாம் வளர்க்கற விதத்துலதான் சமம் ஏற்படும். பெண்களுக்கு கட்டுப்பாடு அவசியம்தான். ஆனால் ஆண்களுக்கு இல்லை என்று நினைக்கிறாய் பாரு, அங்குதான் வினையே. பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கத் தெரியாமல் வளர்க்கிறாய். அவனுக்கும் பண்பும், குடும்பத்தில் ஒருவனாக இருக்கக் கற்றுக்கொடு. அப்பொழுதுதான் வெளி இடத்திலும் தக்க மரியாதை கிடைக்கும்."
வனஜா கோபத்தில் கிளம்பினாள். "என் மகனின் திறமைக்கே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படும். நீ பார்க்கத்தான் போகிறாய்."
"இருந்தால், சந்தோஷம்."
பெண் அதிகாரிகளுடன் வேலை செய்ய முடியாமல், பெண் சக ஊழியர்களிடம் சரியாகப் பழகத்தெரியாமல், கல்யாணம் ஆன உடன் மனைவியிடம் தன் விரக்தியைக் காட்டி, அவளும் விட்டுச் சென்றதால் இன்று வனஜா நாகுவிடம் சவாலைத் தோற்றுவிட்டாள். ஆனால் அதில் நாகுவுக்கு எந்த சந்தோஷமும் இல்லை. இதை சரியான நேரத்தில் தடுக்க முடியவில்லையே என்று வருந்தினாள்.
No comments:
Post a Comment