Saturday, March 30, 2019

கதையில் ஒரு கதை

"ஆர்யா, சிலிண்டர் தூக்க ஹெல்ப் பண்ணு, வா," சந்த்ரிகா தன்னுடைய பதினைந்து வயது மகனை அழைத்தாள். முதலில் மறுத்தவன், அவள் கோபத்திக்கொள்ளவே, வேண்டா வெறுப்பாக வந்தான். சொன்ன இடத்தில் வைத்த உடன், ஏதோ தோன்றியவனாக சந்த்ரிகாவை போட்டோ எடுக்கச் சொல்லி, மீண்டும் சிலிண்டரைத் தூக்கினான்.


"இன்னிக்கு என்னம்மா சமையல்?" என்று கேட்டான்.

"பாஸ்தா பண்ணலாம்னு நெனைச்சேன், ஆனா இப்ப சாதம் தான். ரொம்ப லேட்டாயிடுச்சு."

"நீ ஒண்ணும் சமைக்கவே வேண்டாம்! எனக்கு சாதம் எல்லாம் வேண்டாம். நான் ஆர்டர் செஞ்சிக்கறேன்," அவன் முகம் சுளித்தான்.

"தினம் வெளில வாங்கி சாப்பிட்டா உடலுக்கு கெடுதி. நல்ல ரசம் சாதம் சாப்பிடு," என்று சந்த்ரிகா அரிசி களைந்தாள்.

"போம்மா," என்று கூறி தன் அறைக்குச் சென்றவன், உணவு ஆர்டர் செய்ய, சிறிது நேரத்தில் பாஸ்தா, பர்கர், மற்றும் கோக் வந்து சேர்ந்தன. அதை வாங்கிக்கொண்டு, அம்மா திட்டுவதை கண்டு கொள்ளாமல் தன் அறையை அடைத்துக்கொண்டான்.

"இந்த போன் வந்தாலும்  வந்தது, இவனோட அடாவடி தாங்கல," சந்த்ரிகா அலுத்துக்கொண்டாள். தன் உணவை முடித்துக்கொண்டு, சமையலறையை ஒழித்து, ஆர்யா என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவன் அறைக்குள் எட்டி பார்த்தாள். சாப்பிட்ட பின் பாக்கெட் எல்லாம் அப்படியே கிடந்தன. அவன் காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு கம்ப்யூட்டரில் தட்டிக்கொண்டிருந்தான். வைதும் ஒரு பயனும் இல்லை என்று அவனுடைய அறையை சுத்தம் செய்துவிட்டு சற்று நேரம் தன் அறையில் படுத்துக்கொண்டாள்.

திடீரென்று ஆர்யா எழுப்பினான். "பீச் கிளீனிங்காம். என் பிரெண்ட்ஸ் எல்லாரும் போறாங்க. நானும் போறேன்," என்று கூறி, அவளுக்கு புரிவதற்குள் கிளம்பி விட்டான்.

தூக்கம் கலைந்ததனால் எழுந்து, முகம் கழுவி காபி குடித்துக்கொண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராமைத் திறந்தாள். வந்த சிரிப்பில் புரைக்கேறி கொண்டது. மகனுடைய இன்றைய வீடியோ, அவனுடைய அன்றைய தினத்தின் சில நொடிகளை பின்னிசையுடன் காட்டியது, விளக்கங்களுடன். முதலில் தான் சிலிண்டரை தூக்கிய படம், 'தாய்க்குச் செய்யாமல் வேறு யாருக்கு?', அடுத்து உணவு பரப்பி இருந்தது - 'உழைப்பின் பலன் இனியதே'. அடுத்து, பீச்சில் நண்பர்களுடன் அள்ளிய குப்பையுடன் 'நம் நாட்டிற்கும் சேவை செய்'. கடைசியாக, 'இன்று ஒரு நிறைவான தினம்.... இப்படியே தொடரட்டும் ...'

ஒரு மணி நேரத்தில் அதற்கு 60 லைக்ஸ். 'தொடரும்டா கண்ணா, வீட்டுக்கு வா,' என்று சந்த்ரிகா மனதில் நினைத்துக்கொண்டாள்.


No comments:

Post a Comment