எங்கும் ஒரே சத்தம்
அமைதியைத் தேடும்
இந்த சித்தம்
வாய் பேசுவது மட்டுமில்லை
எழுத்துக்களாலும்
ஏற்படும் சஞ்சலம்
ஒருவர் ஒன்று சொல்ல
மற்றவர் பதிலளிக்க
இழுக்கப்படுகிறது உலகம் இருபக்கம்
எதற்கு தான் கருத்தில்லை
எல்லாவற்றிற்கும்
ஏதோ ஒரு தர்க்கம்
பதிலளிக்காமல் இருந்தால்
அதுவும் அல்லவோ
ஒரு பெரிய குற்றம்?
யார் பக்கமும் சாயாமல்
இருக்க முடியுமா?
அது பெரிய துரோகம்!
அட, யாரும் கேட்கவில்லை
என்றாலும் மனதில் ஓடுகிறதே
ஒரு பெரிய விவாதம்!
ஓயாத சப்தத்தினால்
மனதில் எழும்
பெரும் வருத்தம்
ஓசையில் என்றும்
மூழ்கிக்கிடக்கும் நான்
ஏங்குகிறேன் மௌனம்
சப்ததத்தின் வேகம்
இழுத்துச் சென்று
என்னை முழ்கடிக்கும்
எதிர் நீச்சல் அடித்து,
வலிமையற்று
சோர்ந்து கிடக்கும்
தளர்ந்து, தோற்று
போராட்டத்தை நிறுத்த
கெஞ்சும் இந்த மனம்
சூழும் மௌனம்
அலை ஓய்ந்து, அயர்ந்து
நிலவும் நிசப்தம்
அக் கடலில்
அமைதியாய் மிதக்க
நிம்மதியே கிட்டும்
சொற்கள் கல்லுமல்ல
வாளும் அல்ல வெறும்
ஓசை என்றரியும்
இந்த மனம்
விரும்பி நீந்தும் இடம்
தான் மௌனமென்னும் கடல்.
No comments:
Post a Comment