"சுஜாதாவின் கதைகள் ஏதாவது இருக்கிறதா?" என்று கவினின் போனில் மெசேஜ் வந்தது. எதிர் வீட்டு மாயா அனுப்பியிருந்தாள்.
"இருந்தது, ஆனால் இப்ப இல்லை. யாரிடமோ கொடுத்தேன். இப்ப கோவிட் லாக்டவுனில் அதுவும் மாட்டிக்கொண்டது," என்று பதில் போட்டாள்.
சிரிப்பு ஸ்மைலி பதிலாக வந்தது. "என்னிடம் ஜெயகாந்தனுடைய ஒரு புத்தகம் இருக்கு, வேணுமா?"
"ஓ, யெஸ்! லைப்ரரி போக முடியாமல் தவிக்கிறேன்," என்று கவின் பதில் போட்டாள்.
"சரி, அனுப்புகிறேன். என் தோட்டத்தில் மனத்தக்காளி கீரை நிறைய இருக்கு. வேணுமா?'
"வாவ்! தேங்க்ஸ்! நிச்சயமா!"
மாயாவை பரிச்சயமே தவிர கவினும் அவளும் அதிகம் சந்தித்தது இல்லை. ஒரே காலனியில் இருப்பதால் அவ்வப்பொழுது பொதுவாக சந்தித்ததுண்டு, ஒருவரைப்பற்றி ஒருவர் ஓரளவுக்கு அறிந்திருந்தார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பது தெரியும். "வேறு என்னவெல்லாம் இருக்கு? என்கிட்டே சில ஆங்கில புத்தகங்கள் இருக்கு. ஹென்றி ஜேம்ஸ், கார்சியா, ஓ, இப்போ புதுசா வந்த சில எழுத்தாளர்கள்..."
"தாங்கப்பா! இந்த லாக்டவுன்லே இருக்கற புக் எல்லாம் படிச்சாச்சு."
"டன்."
சற்று நேரத்தில், "பாக்கில் புக்கும் கீரையும் இருக்கு."
கவின் கதவருகே போய் பார்த்தாள். அங்கு ஒரு அழகான கைப்பை இருந்தது. குதூகலத்துடன் அதை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். அதிலிருந்ததை வெளியே எடுத்து வைத்து, அதில் தான் கொடுக்க நினைத்த புத்தகங்களை வைத்து மாயாவின் வீட்டு வாசலில் வைத்தாள். "வைத்துவிட்டேன்," என்று பதில் அனுப்பினாள்.
எத்தனை பொருள்கள் கை, இல்லை பை, மாறின. சில சமயம் ஒன்றும் சொல்லாமல் தோட்டத்தில் காய்த்த காய் கனிகள் வரும். அதற்கு பதிலாக பலகாரங்கள் போகும்.
வாட்ஸாப்பில் காய் வளர்க்கும் குறிப்புகள் வரும். கவின் தன்னிடம் இருந்த சில தொட்டிகளில் தக்காளி, மிளகாய், வெங்காயம் என்று வளர்க்க ஆரம்பித்தாள். பதிலுக்கு பலகார குறிப்புகளை பகிர்ந்துகொண்டாள். அதை செய்து மாயா படங்களை அனுப்புவாள். "நீ செய்த அளவுக்கு சுவையா இல்லை, ஆனால் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது."
"கொரோனா காலத்துல இந்த பரிமாற்றம் தேவையா?" என்று கணவன் செந்தில் முகம் சுளித்தான்.
"பையோட வைரஸ் அனுப்பப்போறாளா?' என்று இவள் பதிலுக்குக் கேட்டு, அடுத்ததென்ன வரும் என்று காத்திருந்தாள்.
திடீரென்று மெசேஜ் காணாமல் போயின.
"மாயா கொரோனா பாசிட்டிவ்," என்ற செய்தி வாட்சாப் குரூப்பில் பரவியது. உயிருக்குப் போராடுகிறாள் என்ற செய்தியும் கூடவே வந்தது.
கவின் அதிர்ச்சியடைந்தாள். தினம் ஒரு முறையாவ து சாட் செய்வார்கள், வாரத்துக்கு இருமுறையாவது அந்தப் பை இங்கைக்கும் அங்கைக்கும் அலையும். இப்பொழுது அந்தப் பை கவினிடம் தான் இருந்தது. "நான் அவர்கள் குடும்பத்துக்கு உணவு அனுப்புகிறேன்," என்று அவள் முன் வந்தாள்.
இப்போதெல்லாம் வெறும் பைதான் திரும்பி வந்தது. மாயாவுடைய கணவன் அருளிடமிருந்து தான் செய்திகளை சேகரிக்க முடிந்தது, ஆனால் அவனுக்கே அதிகம் தெரியவில்லை.
தனியாகவும், காலனியிலிருக்கும் மற்றவர்களுடனும் சேர்ந்து பிரார்த்தனை செய்தாள். அதிகம் பழக்கமே இல்லாத ஒருவருடன் இவ்வளவு அன்பு பிறந்தது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்தப் பை வெறிச்சென்று அவள் முகத்தைப் பார்க்கும் போது அவளுக்கு கண்களில் நீர் ததும்பியது. "கெட் வெல் சூன், மாயா," என்று அடிக்கடி முணுமுணுத்தாள்.
"மாயா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறாள்," என்று அருள் சொன்னான். அந்தப்பையில் மாயாவுக்காக என்ன அனுப்புவது என்று தவித்தாள் கவின். வீட்டில் காய்த்த தக்காளி மற்றும் வெங்காயம் வைத்து, "நன்றி," என்று ஒரு காகிதத்தில் எழுதி அத்துடன் வைத்து அவர்கள் வீட்டு வாசலில் வைத்தாள்.
ஆனால் மாயா வீட்டுக்கு வரவில்லை. இந்த பூமியில் அவளுடைய பயணம் முடிந்துவிட்டது போல. அந்தப் பை திரும்பி வந்தது, இவள் வைத்திருந்த தக்காளி வெங்காயத்துடன்.
Wow! Superb! Love your writing!
ReplyDeleteThank you so much!!!!
DeleteMeera Ji: You started working in tamil...
ReplyDeleteNice hearing from you. I have been writing for a long time in Tamil also.
Delete