Saturday, October 9, 2021

புடை சூழ

"வேலைய விட போறயா?" சாந்தி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

ஆம் என்று கவிதா தலையாட்டினாள்.

"ஏண்டி, இந்த மாதிரி வேலையும் சம்பளமும் மறுபடியும் கிடைக்குமா?"

கவிதா தெரியாது என்பதைக் குறிக்க தோள்களைக் குலுக்கினாள்.

நெஞ்சு  நிறைந்திருந்தது. வயிற்றில் குழந்தை வளரும் சந்தோஷம். அதே நேரத்தில் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றியக் கவலை. தான் நல்ல தாயாக இருப்போமா என்ற கேள்வி.

"வாய் திறந்து பேசேன்! ஏன், மௌன விரதமா?"

கவிதா இல்லை என்று தலை அசைத்துச் சிரித்தாள். "இல்ல சாந்தி. குழப்பம் தான். ஆனால் குழந்தையோட முதல் வருஷத்துலயாவது நான் கூட இருக்கணும்னு நினைக்கிறேன்."

"அப்படியெல்லாம் ஒரு வருஷம் இருந்துட்டு வேலைக்கு திரும்பறது சுலபமில்லை. அதுவுமில்லாம, அப்ப  குழந்தையை யார் பார்த்துக்க போறாங்க?"

கவிதா முகம் சிந்தனை குறியாக மாறியது. "ஸ்கூல் போக ஆரம்பிச்சப்புறம்?"

"எப்பவுமே நாம தேவை படுவோம். கொண்டு போய் அவர் விட்டாலும், நாமதான் அழைச்சுண்டு வர வேண்டியிருக்கும். உடம்பெல்லாம் சரியா இல்லைன்னா,அவ்வளவுதான்," என்று சாந்தி அடுக்கிக்கொண்டே போனாள்.

கவிதாவுடைய கண்களும் பெரிதாகிக்கொண்டே போனது. அவளைச் சுற்றியுள்ளவர்களின் இன்பமும் சேர்த்தல்லவா தான் கர்பமாக இருப்பதின் இன்பத்தை அதிகரித்து வந்தது? சாந்தி சொன்னதை யாருமே சொல்லவில்லையே!

"இதையெல்லாம் யாரும் சொல்லவும் மாட்டார்கள்," என்று சாந்தியே மேலும் சொல்லிக்கொண்டே போனாள். "ஒருவள் தாயாகிறாள் என்றாள் அதில்தான் சுகம் என்று எல்லோரும் கொண்டாடுவார்கள் ஆனால் அதில் இருக்கும் அசௌகரியங்களையும் இன்னல்களையும் பற்றி யாரும் சொல்லமாட்டார்கள். அப்படிச் சொல்லிவிட்டால் எந்தப் பெண்ணும் தாயாக மாட்டாளே!"

"நன்னா மாட்டிக்கொண்டேன் போல இருக்கே!" என்று கவிதா அரைச் சிரிப்புடன்  சொன்னாள்.

சாந்திக்குச் சட்டென்று தான் அதிகம் பேசி விட்டோமோ என்ற எண்ணம் வந்தது. "குழந்தை நம்மை பார்த்து சிரிக்கும் பாரு. அப்ப இப்படி நான் புலம்பினேனே, அதெல்லாம் மறந்தே போயிடும். அது செய்யற ஒவ்வொரு குறும்பும் மனச குளிர வைக்கும். பேச ஆரம்பிக்கும் போது மழலை, அப்புறம் சொல்ற விதம்... அத வருஷ கணக்கா இன்னிக்கும் சொல்லி சிரிக்கிறோம். அதுக்கு ஈடு எதுவுமே இல்ல," என்று உடனே சுருதியை மாற்றினாள். 

நிஜம்தான், குழந்தையைப் பெற்றுக்கொள்வதினால் தாய்மார்களுக்கு இரண்டு விதமான அனுபவமும் இருக்கத்தான் செய்கிறது. 

"நாங்கலாம் வளர்க்கலயா? நீங்க மூணு பேர்! நானும்தான் வேலைக்கு போயிண்டிருந்தேன். எனக்கு ஒத்தாசைக்கு யார் இருந்தா?" சாயங்காலம் கவிதா தன் தாயிடம் சாந்தி சொன்னதைச் சொன்னதும் அவள் கேட்டாள். "வாழ்க்கைல ரெண்டு விதமும் இருக்கத்தான் செய்யும். நமக்கு எல்லாம் வேணும்னு நினைச்சா? எங்கேயாவது இடிக்காதா?"

"சித்தார்த்துக்கு அந்த கவலை இல்லையே?" கவிதா முகத்தைச் சுளித்தாள். "அவனுக்கு குழந்தையும் இருக்கும், வேலையும் இருக்கும். அவனுக்கு எந்த மாற்றமும் இருக்காதே," என்று கவிதா சுட்டிக் காட்டினாள்.

"ஆமாம். ஆனால் குழந்தையின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் நீதான் முதலில் பார்ப்பாய்."

கவிதாக்கு இது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. அவனுக்கு அந்த ஆசை இருந்தால் அவன் வீட்டை சமாளிக்கட்டுமே! இவள் சம்பாதிக்க அலுவலகம் செல்லலாமே!

குழந்தை பிறந்த சில நாட்களில் அவள் தன் கணவனிடம் சொன்னாள். "சித்தார்த், இப்போல்லாம் தாய் பாலை சுரக்க ஒரு மெஷின் வந்திருக்காம். நான் அத உபயோகிச்சு பால பிரிட்ஜ்ல எடுத்து வெச்சிடறேன். நான் ஆஃபீஸ் போகலாம். நீயோ உங்க அம்மவோகூட குழந்தையை பார்த்துக்கலாம்."

அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. "நிஜமாவா? அதோட ஈர துணி மாத்தரத்துக்கும் ஏதாவது மெஷின் வந்திருக்கா?"

அவள் சிரித்தாள். "அப்பான்னு பெயர் அந்த மெஷினுக்கு."

"கள்ளி," என்று ஆசையாகக் கிள்ளினான் ஆனால் அவள் சொன்ன யோசனைக்கு பதில் சொல்லவில்லை.

அவள் மனதை அது குடைய ஆரம்பித்தது. குழந்தையின் வளர்ச்சியில் இன்பம் இல்லை என்று இல்லை. முதல் வார்த்தை, முதல் அடி, முதல் இது, முதல் அது என்று பல விஷயங்கள் மகிழ்ச்சியைத் தந்தாலும், அந்த இன்பத்தைப் பகிர அருகில் யாரும் இல்லாததே தான் தனித்து இருப்பதை உணர்த்தியது. அதில், குழந்தை உறங்காமலோ உண்ணாமலோ அழுதுகொண்டே இருந்தால் கேட்க வேண்டுமா? அவனுக்கு உடல் சரியாக இல்லை என்றால் இன்னுமே தனிமை எண்ணம் அதிகரித்தது.

சாந்தி இதைப் பற்றி பேசாமல் இருந்திருந்தால் இப்படி தோன்றியிருக்காதோ என்று கூட அவள் நினைத்துக்கொள்வாள். ஆனால், சரியான உறக்கம் இல்லாமல், எந்த வித பொழுதுபோக்கில் ஈடு பட முடியாமல் இருந்தது அவளுக்கு அலுப்பை உண்டாக்கியது. என்னதான் அம்மாவிடம் அவ்வப்பொழுது சென்று வந்தாலும் ஒரு சில விஷயங்கள் தாயாக அவள்தான் செய்ய வேண்டும் என்பது அவளுக்குச் சற்று எரிச்சலையும் ஏற்படுத்தியது. அம்மாவிடம் சொன்னால் அதைவிட பெரிய தவறு ஒன்று இருக்கவே முடியாது. அம்மா அறிவுரை கூற ஆரம்பிப்பாள், முடிக்கவே மாட்டாள். அதற்கு பத்து முறை குழந்தையின் ஈரத் துணியை மாற்றிவிடலாம்!

அவளுடைய முகத்தைப் பார்த்தே அவளுடைய மனத்தின் போக்கைப் புரிந்து கொண்ட தாய் சொன்னாள், "என்னடி நினைக்கற? குழந்தை பெறுவதே ஒரு பெரிய வரப்பிரசாதம். அது கசக்கிறதா?"

இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் பட்டென்ற அவள் தாயால் மட்டும்தான் பேச முடியும்!

"அப்படியா சொன்னேன்!" என்று குற்ற உணர்வு கோபமாக மாறியது.

"வார்த்தையா முக்கியம்?" தாய் மடக்கினாள். "அந்த சாந்தி உன் கிட்ட பேசினதுலேர்ந்து இந்த மனசுல அசாந்தி தான்."

"அவ சரியா தானே சொன்னா? என்னுடைய அவஸ்தை எனக்குதானே தெரியும். அதுவுமில்லாம குழந்தையோட இருக்கத்தான் என்ன படிக்க வெச்சியா?"

"படிச்சா? இது முக்கியமில்லையா? நீ செய்யற வேலைக்கு நுறு பேர் கிடைப்பாங்க. ஆனா உன் குழந்தையை வளர்க்க நீ மட்டும்தான்."

ஒரு நொடி ஸ்தம்பித்து போனாள் கவிதா.

"அந்த பொறுப்பு சித்தார்த்துக்கு இல்லையா?"

"அவன் ஒண்ணும் செய்யலையா?"

"அம்மா!  ரெண்டு பெரும் என்ஜினீயர். நான் என்ன செஞ்சிட்டிருக்கேன், அவன் என்ன செய்யறான்?" கவிதாவின் கண்கள் நிரம்பி வழிந்தன.

அவளுடைய தாய்  அவளை நிதானமாக நோக்கினாள். பிறகு, அருகில் வந்து அமர்ந்தாள். ஆதரவாக அவள் தோள் மீது கையைப் போட்டு, "சரி. உனக்கு என்ன வேணும்?"

கவிதா அழுகையை அடக்கும் முயற்சியுடன் தனக்கு என்ன வேண்டும் என்பதை பற்றி யோசித்தாள். "எனக்கு மீண்டும் வேலைக்கும் போக வேண்டும்."

"நான் கூட வந்து இருக்கட்டுமா?"

"கொஞ்ச நாளைக்கு. ஒரு நல்ல க்ரஷ்  பார்த்து அங்க குழந்தையை சேர்த்துடறேன். இல்ல, ஆயா யாராவது...?"

தாய் சரி என்பதுபோல் தலையாட்டினாள்.

சித்தார்த்துக்கு முதலில் ஈடுபாடு இல்லை. ஆனால், "என்னுடைய உத்தியோகம் முக்கியம் இல்லையா?" என்று கவிதா கேட்கும்போது அவள் கேள்வியில் நியாயம் தெரிந்தது.

மாறி மாறி அவளுக்கு பக்க பலமாக இருக்க வரும் தன்னுடைய மற்றும் சித்தார்த்துடைய பெற்றோர்களுக்கும் உதவு சமையலுக்கு, வீடு கூட்டி பெருக்க, குழந்தையை பார்த்துக்கொள்ள என்று மூன்று பெண்கள் நியமிக்கப் பட்டன. குழந்தை வளர வளர, பெற்றோர்களுக்கும் வயதாகிக்கொண்டிருக்கவே அவனுக்கு சுயமாக தன்னைப் பார்த்துக்கொள்ளக் கற்றுக்கொடுத்தும் வந்தாள். அவனைப் பார்த்துக்கொள்ளும் ஆயாவுக்கு வேலை குறைய ஆரம்பிக்கவே அவளை நிறுத்தினாள். அவனுடைய படிப்பு விஷயங்களை கவனிக்க சித்தார்த்தும் அவளும் போறாதென்று பள்ளிக்குப் பிறகு டியூஷனுக்கு அனுப்பினாள்.

அவனுடைய வளர்ச்சியுடன் அவளும் தன்னுடைய தொழிலில் வளர்ந்தாள். பொறுப்புகள் அதிகரித்தன ஆனால் சில சலுகைகளும் கிடைத்தன. 

ஏற்றமும் தாழ்வும் யார் வாழ்க்கையில்தான் இல்லை? வீடு வேலை என்று இரட்டிப்பான பொறுப்புகளைச் சுமக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் அது நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது. அதிலும் அவள் தன்னுடைய வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டதால் அவளை குற்றவாளியாக பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த காலத்திலும் அதிகமாகத்தான் இருக்கிறது. அவளே அதனால் தன்னை தினம் தினம் குற்றவாளி கூண்டில் நிற்கவைத்துக்கொண்டு கேள்வி கேட்டுக்கொள்வது சகஜமே. 

சாந்தியை கவிதா நினைவு படுத்திக்கொள்ளாத நாளே இருக்காது என்றுகூட சொல்லலாம். தன்னுடன் வேலை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாகும் போது அவள் ஒரு அறிவுரையைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை, 

"உன் வேலைக்கு நூறு பேர்கள் கிடைப்பார்கள். ஆனால் நீ தாயாக இருந்து வேலைக்கு வரவேண்டும் என்றால் உனக்குப்பின்னால் நூறு பேர்கள் நின்றால்தான் முடியும். அப்படிப்பட்ட ஒரு படையைத் தயார் செயதுக்கொள்."     

ஆம், இதுவும் ஒரு போராட்டம், வாழ்க்கை போராட்டம். தேவையா இல்லையா என்பதை அவரவரே நிர்ணயிக்க வேண்டிய போராட்டம்.


   

  

  

No comments:

Post a Comment