என்னடா இன்னும் ஒரு முறைக்கூட நான் வேலைக்காரியைப்பற்றி எழுதவில்லை என்று நினைத்தீர்கள் என்றால், கவலை வேண்டாம். இதோ, எழுதப்போகிறேன். ஆனால் அவள் லீவுப்போடுவதைப்பற்றியோ, வேலை சரியாக செய்யாததைப்பற்றியோ இல்லை.
மற்ற வேலை செய்பவர்களைப்போல், இவளும் படிக்காதவள். மூன்று பெண்கள், இரு பிள்ளைகள். பெண்களை படிக்க வைக்க வில்லை, பிள்ளைகளில் ஒருவன் படித்திருக்கிறான். ஒரு மகள் வெகுளி, இருமுறை மணம் செய்தும் தாயுடன் இருக்கிறாள். அவளுக்கு ஒரு மகள். இரண்டாவது மகளுக்கும் ஒரு மகள் சமீபத்தில் பிறந்தது.
அட, என்னடா இவள், அந்த குடும்பத்தைப்பற்றி ஏன் எழுதுகிறாள் என்று யோசிக்கிறீர்களா?
நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை, ஆனால் அவள் குடும்பத்தில் பெண்கள் எண்ணிக்கையே அதிகம். அவள் ஒரு விதவை. ஆனால் ஒரு நாளும் அவள் எப்படி இவர்களை கரை சேர்க்கப்போகிறேன் என்று யோசித்ததில்லை. மகன் மகள் இருவரைப்பற்றியும் ஒரே கவலைத்தான் - சரியான வழியில் செல்கிறார்களா என்று.
குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. குறையே இல்லாத வேலை ஆட்களும் இல்லை. ஆனால் பெண்கள் ஜனத்தொகை குறையும் இந்த காலத்தில் அவளை பார்க்கும் பொழுது நான் யோசிப்பது ஒன்றே - பெண் வேண்டாம் என்று சொல்பவர்கள் யார்? படிக்காதவர்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது. வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்னவென்றுதான் புரியவில்லை.