Monday, September 5, 2011

Agatthin Azhagu

அவன் நடந்து வரும்பொழுதே ஒரு தனி கம்பீரம் தெரிந்தது. தன்னையும் அறியாமல் அவள் மனம் அவனிடம் ஈர்ந்தது. காட்டிக்கொள்ள கூடாதென்று அவள் தன் குரலை கடுமையாக்கிக்கொண்டு, "யார் வேண்டும் உங்களுக்கு?" என்று கேட்டாள்.

"நீங்கள்தான்," என்றான் அவன் மென்மையாக. 

முகம் சிவந்து, வெட்கத்தில் தலை குனிந்தாள். "என்ன!" என்று தயங்கினாள்.

"நீங்கள் தாமரை தானே? உங்களைத்தான் பார்க்க வந்தேன்," என்றதும் சட்டென நிமிர்ந்தாள்.

"ஓ! என்ன வேலை?" என்றாள், தன்னை சுதாரித்துக்கொண்டு.

அவன் வந்தவேலையைச்சொன்னான். அவள் விரைவாக அதை முடித்துக்கொடுத்தாள். அவன் பெயர் ஆதித்யா என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அவள் வேலையை கவனித்தவாறே பேசிக்கொண்டிருந்தான். அவளை சிரிக்க வைத்தான். அவளுக்கு அவன்மேல் இருந்த ஈர்ப்பு அதிகரித்தது. அவன் கிளம்பும்பொழுது தன்னுடைய செல் நம்பரை கொடுத்தாள். ஒரு வாரத்தில் இருவரும் கல்யாண பேச்சிற்கே வந்து விட்டனர். அவளுடைய குடும்பம் அவனை பார்த்து அகமகிழ்ந்தனர். "இப்படி ஒரு பையனை நாங்களே தேடியிருந்தாலும் அமைந்திருக்காது," என்று பூரித்தனர்.

கல்யாணமான ஒரு மாதத்திலேயே அவளுக்கு புரிந்து விட்டது, தான் ஏமாந்து போனது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இவனுடைய அழகு அவனுடைய அழகிய அகத்தை காட்டுகிறது என்றுஅவள் நினைத்தது தவறு. அவன் ஒரு மிருகம் என்று போகபோகதான் தெரிய வந்தது. ஆனால் அதை தன் வீட்டினரிடம் இருந்து அவள் மறைத்தாள். அவனிடம் பயம் ஒரு பக்கம், மற்றவர்கள் தன்னை நம்பமாட்டர்களோ என்ற தயக்கம் மறுபுறம். சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை ஒரு புறம். ஆனால் அவளுடைய அழகிய முகம் வாட வாட, அவனுடைய வெறியும் அதிகரித்தது.

ஒரு நாள், அவன் அந்த பாட்டில் கொண்டு வந்த பொழுது, அவள் கவனிக்கவில்லை. அவன் ஏற்கனவே எதோ சதி நோக்கத்துடன் தான் வந்திருக்கிறான் என்று மற்றும் புரிந்தது. அது என்னவென்று அவள் முகம் எரியும் பொழுது யோசிக்க கூட முடியவில்லை. அவன் ஆசிட்டை அவள் முகத்தில் எறிந்தப்போழுது, "போய் ஒழி" என்று சொன்ன வார்த்தைகள் மட்டும் ரீங்காரமாக ஓலித்தது.

இப்படி வாழ்வதற்கு பதில் போய் ஒழிந்திருக்கலாம். அவள் நேரம், உயிர் பிழைத்தது. முகம் பொசுங்கியது.

இன்று அவன் மறுமணமாம். பார்க்க லக்ஷணமாக இருக்கிறான் என்றுப்பேசிக் கொள்வார்களோ? சிரிப்புதான் வருகிறது. முகம் அழகாக இருந்ததால் மனதில் இருக்கும் மிருகம் யார் கண்ணிலும் தெரியவில்லை. அவனுடைய அசிங்கமெல்லாம் என் முகத்தில் வீசிஎறிந்து விட்டு, இதை மிருகமுகமாக்கி அவன் தன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொண்டுவிட்டான்! 

ஆனால் மற்றவர்கள் அவனால் பாதிக்கப்பட்ட என்னைப்பார்த்துத்தானே  பயன்தோடுகிரார்கள்!

No comments:

Post a Comment