Thursday, September 1, 2011

சுயகௌரவம்

"என்னால் இன்னிக்கு உன்ன ஆபீஸ்ல விட முடியாது," ரவி சொன்னான்.

"ஏன்?" மாலதி கேட்டாள்.

"மீட்டிங் இருக்கிறது, நுங்கம்பாக்கத்தில்," என்றான். "உங்க அண்ணாவைப்  பிக் அப் பண்ணிக்கச்சொல்லு."

"அதைப் பற்றி  உங்களுக்கென்ன?" என்று நக்கலாகக் கேட்டாள். அடுத்து என்ன வரப்போகிறது என்று நன்றாகத் தெரியும் அவளுக்கு.

"ஏன்? கொஞ்சம் தங்கைக்காக சிரமப்படக்கூடாதோ?" வார்த்தைகளால் இடித்தான். 

"ஏன் நான் ஒரு நாள் ஆடோல போகக்கூடாதோ?" என்று பதிலளித்தாள்.

"இல்லை, கார் தான் வாங்கிகொடுக்கல..."

"என் புருஷன் நன்கு சம்பாதிக்கும் போது, அவன் எதுக்கு வாங்கித் தரணம்?" என்று அவளும் விடவில்லை.

"தங்கைக்குச் சௌகரியமாக இருக்கும்னு ஒரு அண்ணனுக்கு தோணாதா?" என்றான் அவன்.

"நீங்களும் உங்க தங்கையும் தான் இருக்கீங்களே, பாச மலர்கள்! அதே கஷ்டம் எங்கண்ணனுக்கு என்னால் வர நான் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள மாட்டேன்."

"நம்ப பாடுதான்பா பெரும்பாடு," என்று முணுமுணுத்தான். அவளும் ஒரு புன்முருவலோடு அங்கிருந்து நகர்ந்தாள்.

**

"வினயாக்கு கிப்ட்  வாங்கணும்," என்று ரவி சொல்லும்பொழுதே வயிற்றைக் கலக்கியது. போன வருடம் அவர்களுடைய பத்தாவது கல்யாண நாளிற்கு வினயா மறைமுகமாக கார் கேட்டிருந்தாள். "நீங்கள் இருவரும் சம்பாதிக்கறீங்க. எங்க மாமியார் வீட்ல எனக்கு எவ்வளவு கௌரவத்தைச் சேர்க்கும்," என்று அவள் பூரிக்கும் பொழுது, அவளுடைய தாயும், "என்னடி, ஒரே தங்கை... ரவி சும்மா விடுவானா! பார் நீ, அவன் நீ ஜம்முன்னு போய் வர கார் வாங்கறானா இல்லையான்னு பார்," என்று வேறு பெருமைப் பட்டாள்.

மாலதி தனக்கு கார் வாங்கலாம் என்ற எண்ணத்தை வேரோடு அழித்தாள்.

வாங்கிக் கொடுத்த கார் கடனும் தீர்ந்த பாடில்லை, வினயாவின்  குறையும் இன்னும் தளர வில்லை. "என்ன அண்ணா, மாருதி சுசுகியா! i10 வாங்கித் தருவேன்னு நெனச்சேன்," என்று அவள் சொல்லும்பொழுது என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்று ஆகி விட்டது மாலதிக்கு.

அது வரைக்கும்  அவளும் அண்ணனிடம் எதையாவது எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். பட்டுப் புடவை, நகை, குழந்தைகளுக்கு என்று.

ஆனால், வினயாவைப் பார்த்தபிறகு, அவளுக்கு தன் மேலேயே சீ என்றாகிவிட்டது. ரவியும் அவளும் நன்றாக சம்பாதித்தும் பிறந்த வீட்டிலிருந்து எதையாவது எதிர்பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கேவலம் என்று புரிந்தது. தன்னால் முடிந்தால் சரி, இல்லையென்றால் எந்த பொருளுமே வேண்டாம், என்று அன்று தீர்மானித்ததுதான். ரவியும் அவன் தாயும் எவ்வளவு இடித்துப் பேசினாலும் சரி, அவள் சுயகௌரவத்தினால் தலை நிமிர்ந்தே நடந்தாள். 

எதிர்பாராததால் அண்ணன் சந்தோஷமாகத் தரும் நூறு ரூபாய் கூட உயர்ந்ததாகத் தோன்றியது.







No comments:

Post a Comment