Monday, October 10, 2011

Nyabagangal

சிறிய துளிகள்
பொட்டுப்போல் மேலே
சொட்டுச்சொட்டாய்
விழுந்து எழுப்ப
சிறிய சிறிய நினைவுகள்

அந்த அரக்கு நிற பேனா
தோட்டத்தில் காய்க்கும்
கொய்யா, மாதுளை
பட்டுப்போன ரோஜா செடி
மண்புழு, அதை மூடிய கல் தரை

அண்ணாவுடன் மோதல்
அம்மாவிடம் சண்டை
அப்பாவிடம் ஒரு துளி பயம்
இடியிநோசை கேட்டு
சுருண்டு படுத்தல்

தெருக்களில் திரிந்து
வீட்டை மறந்து
நண்பர்களுடன் விளையாடி
பேசி, நடந்து
மெதுவாக வீடு திரும்பி

பள்ளியில் கழித்து
பேருந்தில் கதை பரிமாரித்து
தூங்கி வழிந்து
பிடித்துக்கொள்ளாமல்
நின்று, பாடி, விளையாடி

கரும்புத்துண்டுகளை
தனியாக ரசித்து
டிவி முன் வாயை பிளந்து
பட்டாசு வெடித்து
வேடிக்கை பார்த்து

ஒரு சின்ன சொல்
ஒரு பறக்கும் கார்
பெண்ணின் குரல்
மகனின் சிரிப்பு
போக்கில் விழுந்த வார்த்தை

எது எதை தீண்டும்
எதை நினைவூட்டும்
எந்த ஞாபகத்தில்
மிதக்க வைக்கும்
அது அறியாததே ஒரு ருசி

அன்று துன்பம்
இன்று அதே நினைவு
ஒரு இன்பம்
அதை பிடித்துக்கொண்டு
பறக்கும் நான் 

இன்றிலிருந்து விடுத்து
நேற்றில் மிதந்து
லேசான நெஞ்சில்
நினைவுகளை பொருத்து
பறக்க வைக்கும் ஞாபகங்கள்.






No comments:

Post a Comment