Saturday, February 25, 2012

ஏமாற்றம் - சிறுகதை

ராகவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு வருத்தம், இதற்க்கா என்று! ஏனோ நண்பன் சோமுவை பார்க்கும் பொழுது எல்லாம் ஆத்திரம் பொங்கி வந்தது. எப்படி அவன் மேல் இவ்வளவு நம்பிக்கை ஏற்பட்டது? ஏன் அது பொய்யானதும் இவ்வளவு மனத்தாக்கல்? ச்சே! தான் என்ன சிறு பிள்ளையா? "நீ எமாத்தினாய், அதனால் நான் உன் பேச்சுக்கா" என்று நினைக்க தூண்டும் இந்த எண்ணம் அவனுக்கே அறுவறுப்பாக இருந்தது.


ஆனாலும், இவ்வளவு பழகியும், சேர்ந்து ஓட்டப்பந்தயத்திர்க்கு பயிற்ச்சிப் பெற்றது மட்டும் அல்லாமல், இவன் மனம் நொந்தபோது கூட இருந்தது சோமுதானே? தன்னால் முடியுமா என்று இவன் பயந்த பொழுது, "வா, இன்னும் ஒரு முறை ஓடலாம்" என்று தேற்றியவனைத்தானே நண்பன் என்று எண்ணினான்?


அவன் அந்த பந்தயத்தை பார்க்க வருவானா என்ற சந்தேகம் கூட ராகவன் மனதில் எழவில்லை. தன் மனதின் சஞ்சலங்களை புரிந்துக்கொண்டவன், அந்த உழைப்பிற்கு பலன் தரும் நாளன்று பார்வையாளர்கள் இருக்குமிடத்திலிருந்து கை தட்டி உற்சாகப்படுத்துவான் என்ற எதிர்பார்ப்பு எப்படி இவன் மனதில் உருவாயிற்று? 


"சாரி மச்சான், பிரெண்ட்ஸ் எல்லாம் சாப்பட போலாம்னு கூப்பிட்டாங்க... அதான்," என்று எவ்வளவு சுலபமாக கூறி விட்டான்! நிறைய பேர் வந்து கை குலுக்கியும், அந்த சோமு இல்லாத ஏமாற்றம் தான் இன்று பெரும் மலையாக அவன் மனதில் நின்றது.


இதற்க்கு சோமு காரணமா, இல்லை அவன் வருவான் என்ற எதிர்பார்ப்பா?

Saturday, February 18, 2012

ஒரு கலக்கம்

பல மாதங்களாக இன்றைய தினத்திற்காக உழைத்தது இன்று என்ன பலனை கொடுக்குமோ...

உனது தருமத்தை செய் பலனை எதிர்பார்க்காதே என்று பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் அந்த நேரம் நெருங்கும் பொழுது எங்கிருந்தோ மனதில் ஒரு கலக்கம் ஆரம்பிக்கிறதே! உடலில் லேசாக ஒரு நடுக்கம்! 

மற்றவர்களுக்காக ஆடும் பொழுதுதான் அந்த பயம். உனக்காகவும், உன்னை படைத்து இந்த கலையை கொடுத்தவனுக்காக செய்தால் அதில் என்ன பயம்? கொடுத்தவன் கை விடமாட்டான் என்ற நம்பிக்கையுடன் லயத்தில் ஒன்றினால்...

பலனுக்கு என்ன வேலை அங்கே? 

Saturday, February 11, 2012

வழிகாட்டி

ஒருவன், சிறுவன். பதினைந்து வயது என்கிறார்கள். ஆனால், குழந்தையை போல, தன்னை சொல்லிவிட்டார் பார்த்தாயா என்ற ஆதங்கம். வழி காட்ட யாருமா இல்லை?

ஒரே செயலில் இரு குடும்பங்களில் துன்பம். தன் ஆசிரியையை கொன்று அவன் தப்பிக்கலாம் என்று நினைத்தானா? எப்படி தப்பிப்போம் என்ற நம்பிக்கை வந்தது? இல்லை, மாட்டிக்கொள்வோம் என்ற பயம் கூட இல்லையா! எதற்க்காக இந்த காரியத்தை செய்கிறோம் என்று யோசித்தானா? இதை செய்ததில் அவனுக்கு நிம்மதியா? அவன் பெற்றோர்கள்? என்ன செய்வார்கள்? "உன்னால் தான்" என்று ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவார்களா?

அந்த ஆசிரியைக்கு இரு மகள்கள். தந்தை கூட இல்லை. என்ன செய்வார்கள்? தாயையும் இழந்து, வாழவும் வழி இல்லாமல் திணறும் அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்லமுடியும்?

இனி எந்த ஆசிரியராவது தவறாக செல்லும் மாணவரை கண்டிப்பாரா? ஏன், பெற்றோர்கள் கூட யோசிக்க மாட்டார்கள்? பின்னே அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி யார்?

அந்த சட்டசபையில் ஆபாச படத்தை பார்க்கும் தலைவர்களா?

Sunday, February 5, 2012

இளமையில் முதுமை

ஏதோ ஒரு பள்ளியில் படித்து எப்படியோ முன்னுக்கு வந்த தலைமுறை நம்முடையது. ஆனால் இன்று தன குழந்தைகளுக்கு ஒசத்தியான படிப்புத்தான் கொடுக்க வேண்டும் இன்று திண்டாடும் தலைமுரையாகி விட்டது. அதில் மாட்டி முழிப்பவர்கள் - 
  • காசு கொடுத்து, அல்ல சிபாரிசு மூலம் பள்ளியில் சேர்க்க மாட்டேன்; 
  • வெறும் வருட கடைசியில் பரீட்சையில் நல்ல எண் வாங்கினால் போதாது, என்ன படிக்கிறோம் என்று தெரிந்திருக்க வேண்டும்; 
  • படிப்பு மட்டும் இல்லாமல் மற்ற விஷயங்களிலும் என் குழந்தைக்கு வளர்ச்சி வேண்டும்

இப்படி நினைக்கும் பெற்றோர்களுக்கு இன்று பள்ளி தேடுவதே நரகம் என்று கண்டு கொண்டேன்.
காசு மட்டும் இருந்தால் போதாது, சிபாரிசும் வேண்டும்.
அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் வேறு எதாவது பிறப்பிலேயே குறைகள் இருந்தால், ஐயோ! பிறப்பதே தவறு! கல்வியை பற்றி நினைக்கவே கூடாது.
மற்ற விஷயங்களுக்குத்தான் வெளியில் அவ்வளவு வகுப்புகள் இருக்கே! அதில் ஏதாவது ஒன்றில் சேர்த்தால் போதாது. எல்லாவற்றிலும் சேர்த்து குழந்தையின் குழந்தைத்தனத்தையே அழித்துவிடவேண்டும்.
அந்த குழந்தையின் சிந்தனையும் எப்படியாவது சிறிய வயதிலேயே பழுத்து விடவேண்டும். அப்பொழுதுதான் வாழ முடியும்.
மொத்தத்தில் இயற்கையை அழிப்பதுதான் நம் பெரியோர்களின் வேலை போல!