Sunday, March 25, 2012

பன்னி பிடிக்கும் கலாட்டா

சரியாகத்தான் படித்தீர்கள். இன்று காலை, ஒரே சத்தம், என் பக்கத்து காம்பௌண்டில். மெட்ரோ ரயில் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் ஒரு கர்பமான பன்னி தன் குட்டிகளை எதிர்பார்த்து அந்த இடத்திலேயே தனக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறது.


நல்ல எண்ணத்தில் தான், மெட்ரோ ரயில் அதிகாரிகள் அதை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போல. நாலு ஆட்கள்  பத்து ஆட்களுக்கு சமமான சத்தத்தை போட்டுக்கொண்டு பன்னி பிடிக்க வந்திருக்கிறார்கள்.

அவர்கள் சத்தத்தை கேட்டு பன்னி இங்கும் அங்கும் ஓட இவர்கள் அதை விலகி ஓடுகிறார்களா பிடிக்க ஓடுகிறார்களா என்று புரியவில்லை. கடைசியாக எப்படியோ அந்த பன்னி பிடிபட்டாயிற்று. பாவம் - இந்த கர்பமாக இருக்கும் தருணத்தில் இவ்வளவு ஓட்டம் அதற்க்கு நல்லதோ இல்லையோ! அதைப்பற்றி யாருக்கு கவலை?

Monday, March 19, 2012

சும்மா ஒரு தமாஷ்

மதுசூதனன் என்ற பெயரை செல்லமாக "மது" என்று கூப்பிடுவது வழக்கம்.

இதில், மது என்பது அரக்கனின் பெயர். கடவுள் பெயரை வைத்து கூப்பிடவேண்டும் என்ற பண்பாட்டிற்கு மாறாக, நாம் அப்பெயர் உள்ளவர்களை அரக்கனின் பெயரை வைத்து கூப்பிடும் கட்டாயம்.


சரி, அப்போ சூதனன் என்று கூப்பிடலாம் என்று பார்த்தல் அதற்க்கு அர்த்தம் "கொன்றவன்" என்றாகி விடுகிறதே! பேசாமல் பேரை மாற்றி விடலாம் என்று நினைக்கிறேன்!

Sunday, March 11, 2012

புதுமை

 ஆர்வத்துடன் நீட்டினான் அவன் தான் எழுதிய கட்டுரையை. "படித்துப்பார்த்து சொல் எப்படி இருக்கிறது என்று?" என்று ஆவலாக கேட்டான் அவன்.

இவன் அதை வாங்கி கொண்டு, "ம்ம்ம், நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்," என்றான் உர்ச்சாகமின்றி. வேலை 
செய்யும் இடத்தில் இதற்க்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கும்!

 சிறிது முகம் சுருங்கினாலும், நேரத்தின் பதிப்பை அறிந்த அவன், "நான் வெயிட் செய்வேன். உன் வ்யுஸ் கேட்டப்பரம் தான் பத்திரிகைக்கு அனுப்புவேன்," என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

இவன் ஒரு வாரம், இரு முறை ஞாபகம் படுத்திய பிறகு தான் அந்த கட்டுரையை படித்தான். ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக சொன்னான், "தாட் ப்ளோ இருக்கு... ஆனா புதுமையா ஒண்ணுமே சொல்லலையே?"

அவன் முகம் வாடியது. "நீ சொல்வது சரி தான்," என்று அவன் தன் கட்டுரையை வாங்கிக்கொண்டான். அவன் தலைமரைந்ததும், இவன் தலையில் அடித்துக்கொண்டான் "எல்லாரும் எழுத வந்திடறாங்க" என்று.

ஆறு மாதம் கழித்து அவன் மலர்ந்த முகத்துட்டன் எதிர்பட்டான். கையில் ஒரு காகிதம். "அண்ணே, என்னோட ஒரு புத்தகம் வெளி வரது. அதுல இந்த முன்னுறை எழுதறேன்... கொஞ்சம் படிங்க."

ஆச்சர்யமாக பார்த்தான் இவன். கையில் வாங்கிக்கொண்டான் அந்த காகிதத்தை. நெஞ்சில் குத்தியது போல இருந்தது.

"இந்த புத்தகத்தின் மூலாதாரமே என் அண்ணன் தான்" என்று இவன் பெயர் இருந்தது. மேலும் படித்தான். "எல்லாரும் எழுதுவதையே நீயும் எழுதாதே என்று அவர் வழி காட்டினார். அதிலிருந்து பிறந்த தேடல் தான் இந்த புத்தகம். அவர் அன்று என் கட்டுரையை போலியாக புகழ்ந்திருந்தால் நான் புதுமையாக எதையும் செய்திருக்க முடியாது..."

தான் வஞ்சனையுடன் சொன்ன வார்த்தையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அவன் காலில் விழ வேண்டும் போலிருந்தது இவனுக்கு.

Monday, March 5, 2012

சச்சரவு - சிறுகதை

தன் கணவனை முறைத்துப் பார்த்தாள் அவள். "எப்பொழுதுமே நான்தான் விட்டுக்கொடுக்க வேண்டுமா?  ஒரு முறையாவது என் ஆசைப்படி நடந்துகொண்டிருக்கயா?"

"ஏன் அப்படி சொல்ற!" அவன் பதிலுக்கு கோவம் கொண்டான். "ஒனக்கு எப்பவுமே திருப்தி கடயாது! நீ உன் பிரெண்ட்ஸ பார்க்க போகணம்ங்கரச்சே நான் ஒன்ன கொண்டு போய் விடலையா?  எனக்கு அன்னிக்கி எவ்வளவு வேல இருந்துது தெரியுமா? டிரைவர் மாதிரி என்ன ட்ரீட் பண்ணிட்டு இப்ப இப்படி ஒரு கேள்வியா?"

"என்னையும் தான் ஒரு குக் இல்ல மெய்ட் மாதிரி நெனைக்கற. நீ வீட்ல நோழயரச்சே காபி கைல கொடுக்கணம். இங்க அங்க போட்டுப்போற சாமான் எல்லாம் பொருக்கி வெக்கணம். உங்க வீட்லேர்ந்து உறவுக்காரங்க வந்தா சமைச்சுப் போடணம்!  இதுக்கா நான் இன்ஜினியரிங் படிச்சேன்?"


"ஏய், நானா ஒன்ன வேலைய விட்டுட்டு வீட்ல ஒக்கார சொன்னேன்? நீதான் வேலைக்கும் போய் வீட்டையும் பாத்துக்க முடியலன்னு சொன்னே!"


"ஏன்னா நீ எனக்கு ஒரு ஒத்தாசையும் செய்யல வீட்ல! எப்படி எல்லாத்தையும் என்னாலையே பார்த்துக்க முடியும்? ஆள வெச்சுக்கலாம்னா அதுக்கும் ஒதுக்க மாட்டேங்கற!"


"ஆள் இருக்கறதெல்லாம் அள்ளிண்டு போய்ட்டா? அப்பறம் யார் திண்டாடறது?"

"கூழுக்கும் ஆச, மீசைக்கும் ஆச" என்று அவள் தன் தாடையை தோளில் இடித்தாள்.

"எத்தன பொம்பளைங்க வீட்டையும் பாத்துண்டு வேலைக்கும் போறாங்க?"

"அவங்க புருஷன் எல்லாம் எப்படி தாங்கறாங்க!"

"ஏதோ நான் தாங்காத மாதிரி!"

"எப்பவும் நீ நெனைக்கறதுதான் சரி! எனக்கு என்ன ஒத்தாச செஞ்சிருக்க?"


ஓ - இந்த பாய்ண்டில் தான் நாம் நுழைந்தோமோ!  இப்படியே சுற்றி சுற்றி எத்தனை நேரம்தான் இந்த சண்டை தொடரும்? விட்டுக்கொடுங்கப்பா! அப்பத்தான் வாழ்க்கை சக்கரம் சுற்றும்!