Saturday, May 13, 2017

சுதந்திர பறவை

"ஏண்டி, தனியாகவா வெளியூருக்கு போகப்போகிற?" தாய் மஞ்சு சற்று கவலையுடன் கேட்டாள். "அப்பா ஒத்துக்க மாட்டாரே!"

"அப்பாவை சமாளிப்பது உன் பொறுப்பு! நான் படிச்சவ. படிக்க வைச்சதே நீங்கதான். இப்ப இப்படி பேசினால்? எனக்கு அசிங்கம்!" மகள் விஜி பதில் கூறினாள்.


"நம்ப குடும்பத்துல இப்படி எந்தப் பெண்ணும் தனியாக எங்கேயும் போனதில்லை. நீ கூடத்தான்."

கண்களைத் தாழ்த்தி, "என்னை எந்த சுற்றுலாவிற்கும் அனுப்பியதில்லை... எனக்கு அதெல்லாம் மிக வருத்தம் தான். இனியாவது எனக்கு சுதந்திரம் வேண்டும்... நான் படித்தவள், வயதுக்கு வந்தவள்."

"ஆனால் மணமாகாதவள்," என்று அவள் தாய் குறுக்கிட்டாள்.

"மணந்தால் மட்டும் கணவனை மடியில் கட்டிக்கொண்டு ஆபீஸ் விஷயமா வெளியூருக்கு போக முடியுமாம்மா?"

"அது அவனுக்கும் உனக்கும் நடுவில்..."

"அப்படி போக விடாமல் தடுத்தால்?" கண்களில் நீர் ததும்ப விஜி தன் தாயைக் கேட்டாள். "உன்னையும் அப்படித்தானே அப்பா அடக்கி விட்டார்? உனக்கு ஒன்றும் தெரியாது என்று?"

ஐம்பது வயது  மஞ்சு முகம் சுளித்தாள். "எனக்கே பயம்தான் டி...! ஒரு நாளும் வீட்டை விட்டு வெளியே தனியா தங்கினது இல்லை. அப்பாவை மட்டும் குத்தம் சொல்லாதே."

"என்னையும் அப்படியே இருக்க சொல்கிறாயா?" துடுக்காகக்  கேட்டாள்.

"எல்லாம் ஒரு பயம் தான். நாடு கெட்டு கிடக்கிறதே!"

"அதற்கு பயந்தால் எப்படி மா? அப்ப வீட்டை வீட்டுக் கூட வெளியே போக முடியாது," என்று வாதம் செய்து அம்மாவை மற்றுமல்லாமல் அப்பாவையும் ஒப்புக்கொள்ள வைத்து வெளியூருக்குச் சென்று வந்தாள் விஜி.

கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொண்ட சலுகைகள் - சக ஊழியர்களுடன் உல்லாசமாகச் ஊர் சுற்றுவது; ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் பழகுவது; உழைத்து உயர்வு பெறுவது...

"எப்படி ஊதாரியா இருக்கா பார்த்தியா? தனியா எப்படித்தான் அவள் பெற்றோர்கள் அவளை நம்பி விடுகிறார்களோ?" என்று ஆரம்பித்தது வம்பு. "சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்காமல், வெட்கம் கெட்டவர்கள், பெண் சம்பாதித்து தின்கிறார்களே!"

"எப்படி பேசறாங்க பாருமா," என்று வருத்தப்பட்டுக்கொண்டாள் மஞ்சு. வரன் தேடாமல் இல்லை. ஆனால், பெண் எதிர்பார்ப்பது வரும் வரனில் இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பதை ஏற்க விஜி தயாராக இல்லை.

பதவி உயர உயர, வம்பு பேசியவர்கள் தன் மகன் மற்றும் மகளை விஜியிடம் அவர்களுடைய வருங்கால கனவுகளை அடைவதற்கான ஆலோசனை கேட்க அனுப்பினார்கள். "அக்கா, கம்ப்யூட்டர் படிக்கலாம்ன்னு இருக்கேன், எந்த கல்லூரி நல்லது?" "சித்தி, இரண்டு கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. எதை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை."

விஜியுடைய தொழிலில் அவள் அடைந்த வெற்றி அவளுக்கு வீட்டிலும், உறவினர்கள் மத்தியிலும் மதிப்பை உண்டாக்கியது. அவளுடைய தன்னம்பிக்கை அவர்களுக்கு வியப்பூட்டியது. தந்தையுடைய கடன்களை அடைக்க உதவினாள். தாய் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் பொழுது, மகன் இல்லாத குறையை தீர்த்தாள். பெற்றோர்களுக்கு வேண்டியதை அவர்கள் மீது பொழிந்தாள். தனக்கு வேண்டியதையும் தானே பார்த்துக்கொண்டாள்.

பெற்றோர்களுக்கு அடங்கி ஒடுங்கி இருந்தப் பெண் இந்தக் காலத்துப் புயலாக மாறுவதை கண்ணுக்கெதிரே அனைவரும் பார்க்கும் பொழுது, அவர்கள் ஆச்சர்யம் அடையவே செய்தார்கள்.

இளக்காரம் மறைய வில்லை, ஆனால் அவளால் எதையும் சாதிக்க முடியும், எந்த கஷ்டத்தையும் சமாளிக்க முடியும், எந்த இடியையும் தாங்கிக் கொள்ள முடியும்... நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் தெளிவான சிந்தனையுடன் தன் கருத்துகளை வெளிப்படுத்தினாள்.

இப்படிப்பட்டவள் துன்பத்தில் ஆடிவிடுவாளா என்ன? ஒரு விபத்தில் திடீரென்று தன் பெற்றோர்களை இழந்து நின்றாள் விஜி. உலகமே இருண்டது. "ஐயோ, என்னைத் தனியாக விட்டுச் சென்று விட்டார்களே," என்று நீர் வழிய கதறும்பொழுது...

"சீ பைத்தியக்காரி. உலகத்தையே வென்றவள் நீ... உனக்கு என்ன," என்று சொல்லாமல் சொல்லும் பாணியில், ஸம்ப்ரதாயத்திற்காக வந்த உறவினர்கள், "அவள் கெட்டிக்காரி," என்று சடங்குகள் முடிந்ததும் கிளம்பிவிட்டார்கள்.

சக ஊழியர்கள் சில நாட்கள் அவள் மனநிலைக்கு மரியாதை கொடுத்து வேலையைச் சற்று குறைத்தாலும் தொழிலில் எத்தனை நாள் இந்த சலுகை?

இன்றும் சுதந்திரம் தான். கேட்கக்கூட ஆளில்லை. ஆனால் கேட்பார் யாருமில்லையே என்று ஏங்கியது அவள் மனம்.


 

1 comment:

  1. தனியாக விருப்பம்போல் இருப்பதல்ல சுதந்திரம். தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் மகிழ்ந்து வாழ்வதுதான் சுதந்திரம்.

    ReplyDelete