Monday, May 29, 2017

எனக்குள் எழுந்தது ஒரு கேள்வி

வானத்தையே பார்த்து நின்றேன்
அதன் நீலம் தூண்டியது ஒரு கேள்வி
பூமியையே பார்த்திருக்கும் நீ
கண்டது பல பல விந்தை
கேள்விப்பட்ட வதந்திகளில்
எது பொய், எது உண்மை?


கண் கொட்டாமல் பார்த்தது என்னை
முத்துக்கள் பொழிந்தது என் மேல்
"மேகங்கள்  மூடும் என் கண்களை
ஏற்படுத்தும் குழப்பம் என் நெஞ்சில்
எது இறந்த காலம், எது நிகழ், எது எதிர்
எது உண்மை, எது பொய்."

கண்ணைத் தாழ்த்தித் தரையைப் பார்த்தேன்
பூமி சிரித்தது, நான் பிரமித்தேன்
"ஆக்கமும் அழிவும் என் வாழ்க்கை
கல்லும் மண்ணும் கூட ஒன்றே இல்லை
அப்படி இருக்க என்னிடம் கேட்கிறாய்
எது உண்மை, எது பொய்?"

காற்று வீச கண்களை மூடி ரசித்தேன்
எழுந்த கேள்வி அடங்க, இனிமையில் லயித்தேன்
"ஆம், மறுமலர்ச்சியே என் கொள்கை
பழையதை மறந்து புதியதை வளர்த்தேன்
என்னிடம் கேட்டாலும் நான் அறியேன்
எது உண்மை எது பொய்.'

ஓடும் ஓடை நீரில் எழுந்ததோ எதிரொலி
என் கேள்விக்கு இது பதில் சொல்லுமோடி?
"நீரில் எழுதும் வார்த்தையும் மெய்யோ
இன்று ஒன்று நாளை மற்றொன்று அன்றோ?
நாடோடியான என் நிலையே நிலை அல்ல,
எது உண்மை, எது பொய் - நான் யார் சொல்ல?'

தீயில் சுட்டாற் போல் நின்றேன்
வாதம் விவாதங்களில் விழுந்தேன்
தெளிவு பெறாத மனதை ஆராய்ந்தேன்
கேள்வியிலேயே இருக்கும் பதிலை உணர்ந்தேன்
கேள்வி அழிய பதிலே இல்லை என்று அறிந்தேன்
இன்றே உண்மை, நேற்றும் நாளையும் பொய்யே - தெளிந்தேன்.

No comments:

Post a Comment