Wednesday, May 24, 2017

வெயில் காயும் நேரம்

"தோட்டக் காரனை வரச்சொன்னாயா?" ஸ்ரீதர் தன் மனைவி மனோஹரியைக் கேட்டான்.

"ஆமாம்," என்று வாச உள்ளுக்கு வந்தாள் மனோஹரி. "என்னப்பா, காலைல ஒன்பது மணிக்கு வான்னு சொன்னேன், இப்படி எட்டு மணிக்கே வந்துட்ட?"


"அப்புறம் வெயில் அதிகம் ஆகிவிடறது மா, அதான்..." என்று இழுத்தான் அன்பு.

கணவனை கெஞ்சும் கண்களுடன் பார்த்து அன்பை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள். ஸ்ரீதர் கைகளை உயர்த்தி, 'இவள் இப்டித்தான் என்று முறையில் விரக்தியுடன் தலையை அசைத்து உள்ளேச் சென்றான்.

மனோஹரி காலைச்  சிற்றுண்டியை முடித்து, அன்புக்கும் டீ கொடுத்து, ஒரு பாட்டிலில் தண்ணீர் வைத்து, மத்திய உணவிற்கு சமையல் அறையில் புகுந்தாள்.

தோட்டக்காரன், இருக்கும் இடம் தெரியாமல் மெளனமாக வேலைச் செய்தான். மண்ணைக் கொத்தி, உரம் போட்டு, புது மண் கலந்து, நீர் பாய்ச்சி... கிளைகளை அறுத்து... சில தொட்டிகள் இருந்தன. அதில் மண்ணை மாற்றி... தோட்டத்தை சுத்தம் செய்து...

வெயில் ஏறிக்கொண்டேச்  சென்றது. கத்திரி வெயில், கேட்க வேண்டுமா?

இங்கும் அங்கும் போனை வைத்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்த ஸ்ரீதர் மெதுவாக படுக்கை அறையில் ஏ சி போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.

அன்பு பன்னிரெண்டு மணி அளவில் குரல் கொடுத்தான். "அம்மா, முடிஞ்சிடுத்து..."

"எவ்வளவுப்பா ஆச்சு?" என்று தோட்டத்தை நோட்டம் விட்டுக்கொண்டே கேட்டாள் மனோஹரி.

மண், உரம், கூலி - சேர்த்து நாலாயிரம் என்றான். "புதுச் செடி வேண்டுமா?"

என்ன இருக்கிறது என்று பார்த்து, ஒரு ரோஜாவையும் மல்லியையும் வாங்கிக்கொண்டாள். கிரோடோன் இலைகளின் நிறம் அழகாக இருக்கவே, அதையும் வைக்கச்சொன்னாள். அதற்கும் சேர்த்து ஐநூறு கூடியது. பேரம் பேசி எப்படியோ நூறு குறைத்தாள்.

"எவ்வளவு ஆச்சு?" ஸ்ரீதர் கடோரமான குரலில் கேட்டான்.

தயங்கித் தயங்கி சொன்னாள். "இது தேவையா?" என்று அலுத்துக்கொண்டான்.

"உங்களால முடிஞ்சா தோட்டத்தைப் பார்த்துக்க உதவி செய்யுங்க, இல்லைனா புலம்பாதீங்க," என்று நறுக்கென்று கூறி அன்புக்கு பணம் மட்டும் இல்லாமல் ஸ்ரீதருடைய பழையச் சட்டை ஒன்றையும், தன் மகளின் ஆடை ஒன்றையும் கொடுத்தாள். வேர்வையை துடைத்துக்கொண்டே நன்றி கூறி அவன் கிளம்பினான்.

"ஒரு நாளைக்கு நாலாயிரமா?" என்று அவன் ஏளனமாகக் கேட்டான்.

"ஒரு நாள் இல்லை. ஆறு மாதத்திற்கு," என்று அவள் முகம் சுளித்தாள். "மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். செக் எழுதறீங்களா இல்லை ஆன்லைன் போய் கட்டிடறீங்களா?" என்று நினைவுப்படுத்தினாள்.

அவன் சட்டென்று தன் போனிலேயே கட்டணம் செலுத்த ஆயத்தமானான்.

"எவ்வளவு?"

"பதினைந்தாயிரம்," என்றான்.

"ஒரு நாளிலேயேவா?" என்று மனோஹரி ஆச்சர்யத்தில் வாய் பிளப்பது போல் நடித்தாள்.

"இரண்டு மாதத்திற்கு," என்று கூறியவன் அவள் சொல்ல வருவதை புரிந்துகொண்டு, தோட்டக்காரனைப் பற்றி புலம்புவதை அன்றைக்கு நிறுத்திக்கொண்டான். அடுத்த முறையும் இப்படித்தான் என்று மனோஹரிக்கு தெரியும். அன்றைக்கு வேறு கட்டணம் எதையாவது செலுத்த நினைவூட்டினால் சரியாகி விடும் என்று சமையல் அறைக்குத் திரும்பினாள்.

   

No comments:

Post a Comment