Saturday, June 10, 2017

குருவே நமஹ

அவர் வகுப்பில் நுழைந்தாலே எனக்கு குலை நடுக்கம் தான். அதுவரைக்கும் ஆடிக்கொண்டிருந்த வால் தானே சுருண்டு காணாமல் போய் விடும். அவர் என் பக்கம் பார்க்க மாட்டாரா என்ற ஏக்கம் ஒரு பக்கம், பார்க்கும் பொழுது கண்களில் தீ பொறி தட்டினால் - ஐயோ சாமி. இதற்கு பார்க்காமலேயே இருக்கலாம், என்று தோன்றும்!

தெரிந்த பாடங்கள் கூட மறந்து போகும். "ஏண்டா, ஒன்பதாம் வகுப்புல நான் உனக்கு பெருக்கக் கற்றுக்கொடுக்கணுமா?"  என்று எல்லோர் முன்னேயும் அவர் கேட்கும் பொழுது அவமானமாக இருக்கும். என்னுடைய ஒரு வடிகால், தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, கணக்கை சிரத்தையுடன் போடுவதுபோல நடித்து நான் வரையும் கேலிச்சித்திரங்கள்தான்.


அவருடைய தீர்க்க மூக்கும், பெரிய விழிகளும் வரைவதற்கு மிகவும் சுலபம் மற்றுமில்லாமல், அதை வரைவதில் பெரிய ஆனந்தம் கூட கிடைக்கும். வரும் கோபத்தையெல்லாம் அவருடைய செய்கைகளையும் வார்த்தைகளையும் வரையும் விதத்தில் காட்டுவேன். அவர் சென்ற பின், என் அருகிலிருக்கும் குமாருக்கு காட்டுவேன். அவனும் அவர் மீது இருக்கும் கடுப்பில் விழுந்து விழுந்து சிரிப்பான்.

இப்படி ஒரு நாள் அவர் சென்று விட்டார் என்று எண்ணி அவனுக்கு காட்டும் பொழுது தமிழ் வாத்தியார்  உள்ளே நுழைந்ததைக்கூட கவனிக்காமல் சிரித்துக்கொண்டிருந்தோம். என் கணக்கு வாத்தியாருக்காகவே ஒதுக்கி வைத்திருந்த ஏட்டை அவர் என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டார். அதில் இருந்த சித்திரங்களைப் பார்த்து அவருக்கு ஏனோ சிரிப்பு வரவில்லை, கோபம் தான் வந்தது. எங்கள் இருவரையும் வெளியே அனுப்பி, என் ஏட்டையும் அபகரித்துக்கொண்டார்.

என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்று பயந்த நாங்கள், அவர் வெளியே வரும் பொழுது, காலில் கையில் விழுந்து மன்னிப்புக்  கேட்டோம். அவர் அலட்சியமாக ஆசிரியர்கள் அறையை நோக்கிச் செல்ல, நாங்களும் பின் தொடர்ந்தோம்.  "சார், சார், ப்ளீஸ் சார்..." என்று கதறினோம்.

மற்ற ஆசிரியர்கள் என்ன என்பது போல் பார்க்க, அவர் நேரே கணக்கு வாத்தியாரிடம் சென்று நான் வரைந்ததைக் காண்பித்தார். கையில் வாங்கி, பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். அவர் மெளனமாக இருந்தது என்னை கதி  கலங்க வைத்தது. கண்களில் நீர் வழிய, "மன்னித்து விடுங்கள், ப்ளீஸ், சார்..." என்று கெஞ்சினேன்.

"நீயா வரைந்தாய்?" என்று அவர் தன் தீர்க்கப்பார்வையுடன் பார்க்க என்னால் பொய் கூட சொல்ல முடியவில்லை. மெளனமாக தலையைக் கவிழ்த்துக்கொண்டேன்.

"நீ உருப்பட மாட்டாய் என்று நினைத்தேன்..." என்று அவர் சொல்ல நானே என் மனதில் அந்த வாக்கியத்தை முடித்துக்கொண்டேன், "இப்போது நிச்சயமாகி விட்டது."

"இதெல்லாம் வகுப்பு நடக்கும் போது வரைந்ததா?"

சிலைபோல நின்றேன்.

"உன் கணக்கு நோட் எடுத்துக்கொண்டு வா."

குமார் ஓட்டம் பிடித்தான். நான் இன்னும் தாமதமாகச் சென்றேன். என் கணக்கு நோட்டை எடுத்துத் திரும்பிப் பார்த்தால் அவர் நின்றுகொண்டிருந்தார். கை நீட்டினார். நோட்டைக் கொடுத்தேன். புரட்டிப்பார்த்தார்.

"ஹ்ம்ம்ம்," என்று மட்டும் சொல்லிவிட்டு வகுப்பிலிருந்து வெளியேறினார்.

கிழிந்தது என்று நினைத்தேன். அன்று முழுவதும் மனதே சரியில்லை. வீட்டிற்கு நேரே புகார் போகுமோ என்று கூட நினைத்தேன். அங்கேயும் எந்த எரிமலையும் வெடிக்கவில்லை. முதலில் சில நாட்கள் அவர் வகுப்பில் கண்களைத் தாழ்த்தி, கணக்கிலே கவனத்துடன் இருந்தேன். ஏளனமாக பேசுவாரா என்று கூட எதிர்பார்த்தேன். அப்படி ஒரு விஷயம் நடந்தது போலவே காட்டிக்கொள்ள வில்லை அவர்.

கணக்கில் சூரப் புலி ஆக வில்லை. ஆனால் எந்தச் சிறியத் தவறு செய்தாலும் அமுக்கி வைத்த விஷயம் பெரிதாக வெடிக்குமோ என்றுச் சற்று அக்கறை காட்ட ஆரம்பித்தேன். மதிப்பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற ஆரம்பித்தன.

பதினோராம் வகுப்பில் என் தந்தை என்னை அறிவியல் பிரிவில் சேர்த்தார் - எனக்கு இஷ்டமில்லைதான், ஆனால் எதிர்க்கிற தைரியமும் இல்லை.

மறுபடியும் அதே வாத்தியார். ஆனால் இந்த முறை, நான் எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் கணக்கில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. வாத்தியாரம் ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டார். "ஏன்டா, ஒழுங்காக படிக்கவில்லையா? ஏதாவது புரியவில்லைஎன்றால் கேளு," என்று ஒரு நாளும் என்னைப் பார்த்துக் கேட்டது இல்லை. ஏதாவது சொன்னால் நான் அவரை கேலி செய்துவிடுவேனோ என்ற பயமோ என்னவோ.

எனக்கே என் மீது வெறுப்பாக இருந்தது...அவருடைய பெருந்தன்மைக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. அறிவியலிலும் கூட என் மதிப்பெண்கள் குறைய ஆரம்பித்தன.

என்மீதிருந்தே எனக்கு நம்பிக்கை போய்விட்டது.  என் தந்தையோ அடுத்தது இன்ஜினியரிங் தான் நான் படிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். எங்கள் இருவருடைய கணிப்புகளுமே இணங்கவில்லை. நான் எப்படி அவர் மானத்தையும் காப்பாற்றி, என் சுய கெளரவத்தையும்  பாதுகாக்கப் போகிறேன் என்று அறியாமல் ஆற்றங்கரை ஓரமாக நடந்துச் சென்றேன்.

சற்று நேரம் கரையில் நின்று, புரண்டு வந்த அலைகளை ஆராய்ந்தேன். இந்த ஆற்றில் நீந்தி விளையாடியவன் நான். நீந்தாமல் அப்படியே மிதந்தால்  எப்படி இருக்கும்? கரைப் பக்கம் ஆழம் அதிகமில்லை என்று தெரியும்... நடுவில்? நூறு அடி? நீந்தாமல் இருந்தால் கூட உடல் மிதக்கும்... எத்தனை தூரம் போக முடியும் அப்படியே? மூச்சே விடவில்லை என்றால்? கடல் வரைக்கும் இழுத்துச் செல்லுமா? இல்லை, கல்லில் இடித்துத் தள்ளுமா?

"ஆழம் பார்க்கிறாயா?" என்று என் கணக்கு வாத்தியார் குரல் கேட்டு திடுக்கிட்டேன்.

"நான்... ஆமாம் ...இல்லை..."

"இங்கே தனியாக என்ன செய்கிறாய்?"

"சும்மாதான்..." என்று இழுத்தேன்.

அவர் என் ஆழத்தை ஆராய்வது போல் உற்றுப் பார்த்தார். "இப்போதெல்லாம் ஏதாவது வரைகிறாயா இல்லையா?"

என் காதுகளை பிடித்தேன், "ஐயோ இல்லை, சார்..."

கண்களில் கேள்விக்குறியுடன் என்னைப் பார்த்தார். "ஏன் பா?"

"சார், தயவு செய்து என்னைக் கேலி செய்யாதீர்கள்... அன்று முதல் நான் வரைவதையே விட்டேன்."

"அதனால் உனக்கு ஏதாவது பயன்?" என்று கேட்டார். புரியாமல் முழித்தேன்.

"முன்பெல்லாம் உனக்கு கணக்கு வராது ஆனால் வரைய வரும். இப்போது?"

வெட்கமாக இருந்தது எனக்கு. தன் கையை என் தோள் மீது போட்டார். "மேலே என்ன செய்யப் போவதாக உத்தேசம்?"

"அப்பா இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்கிறார்."

பெருமூச்சு விட்டார். இந்த மக்குக்கு  எங்கே  இந்த படிப்பெல்லாம் வரப்போகிறது என்று நினைத்திருக்க வேண்டும்.

"வா," என்று திடீரென்று என்னைக் கிளப்பி என் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

என் தந்தை அவரை எதிர்பாராமல் கண்டதனால்  அதிர்ச்சியடைந்தாலும் மரியாதையுடன் வரவேற்றார். எங்கள் ஊரில் காளைகளின் ஓட்டப்பந்தயம் நடக்கும். என் தந்தைக்கு அதில் அதிக ஈடுபாடு உண்டு.

"எதேச்சையாக ஆற்றங்கரையில் பார்த்தேன் இவனை... கையோடு அழைத்து வந்தேன்," என்று அவர் சொல்வதிலேயே என் தந்தைக்கு ஏதோ பொறி தட்டியிருக்க வேண்டும். என்னைக் கவலையுடன் பார்த்தார்.

"சார், இந்த வருடம் மாடுகளின் போட்டியில் நான் இரு பருந்துகளை  ஓடிஏ விடலாம் என்று நினைக்கிறேன்," என்று என் தந்தையிடம் அவர் கூறும் பொழுது நானும்  என் தந்தையும் ஆச்சர்யத்தில் அவரைப் பார்த்தோம்.

"என்ன சார் சொல்றீங்க..."

"ஆமாங்க..."

"பருந்து பறவைகள், காளைகளோடு ஓடுமா?"

"இறக்கைகளை அறுத்து விட்டால்?"

என் தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

"ஒரு கலைஞனை இன்ஜினியர் ஆக்க முற்பட்டிருக்கீங்க, ஒரு பருந்தை காளை ஆக்க முடியாதா?"

எனக்கு .புரிந்தது. என் தந்தைக்கு இல்லை. அவருக்கு நான் வரைவேன் என்பதே தெரியாது. வரைந்தாலும், "என்னடா கிறுக்கிக் கொண்டிருக்கிறாய் படிக்காமல்?" என்று கோபித்துக்கொள்வார் .

"உங்கள் மகன் பறக்க வேண்டியவன். அவனை நீங்கள் தரையில் ஓடச் சொல்கிறீர்கள். அது நியாயம் என்றால் இதுவும் நியாயம் தானே?" என்று கூறி, சட்டென்று தன் பையிலிருந்து என் பழைய ஏட்டை எடுத்துக் காண்பித்தார். "இதோ பாருங்கள்."

என் தந்தையின் முகம் மாறியது, கண்கள் சிவந்தன. "டேய்!" என்று என் பக்கம் கோபத்துடன் திரும்பினார்.

வாத்தியார் அவசரமாக எழுந்தார். "சார்! அமைதி! தப்பாகப் புரிந்து கொண்டிருக்கீங்க! நான் இவனைப் பற்றி புகார் செய்ய வரவில்லை! அவனுடைய திறமையைக் காட்ட வந்தேன்... இந்தச் சித்திரங்களை நான் தினம் ஒரு முறையாவது ரசிப்பேன். என் மனநிலையில் எதுவாக இருந்தாலும் சிரிக்க வைக்கும் இந்தப் படங்கள். இதைப் பரிசுரப்படுத்த வேண்டும் என்று நானும் பல முறை முயற்சி செய்திருக்கிறேன். இவனிடம் கூட வேறு வரைந்து கொடு என்று கேட்க நினைத்திருக்கிறேன். ஆனால் ஆசையைக் கிளப்பி ஏமாற்றம் அடையப் போகிறானே என்ற பயம் என்னைத் தடுத்தது. தானே இந்தத் துறையில் பேர் சம்பாதிக்கும் போது நான் என் மாணவன் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கு நீங்களே தடையாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை."

"இதெல்லாம் சராசரி வாழ்க்கைக்கு உதவாது," என்று சட்டென்று என் தந்தை பதிலளித்தார்.

"இன்ஜினியரிங் படித்து பல இளைஞர்கள் இன்று சரியான வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். அதில் ஒருவனாக இருந்தால் பிழைத்துக்கொள்வானா?" என்று பதிலுக்கு என் வாத்தியார் கேட்டார். "திறமை, ஆசை, இரண்டும் இருக்கும் இடத்தில் வெற்றிக்கு பஞ்சமே இருக்காது. வாழ்க்கையும் நிறைவுபெறும். யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்," என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

நான் மேலே எதை படித்தாலும் எனக்கும்  இப்படிப் பட்ட ஒருவர் ஆதரவாக இருக்கிறார் என்பதில் நெகிழ்ந்து போனேன்.

1 comment:

  1. திறமை எங்கிருகீறதோ அங்கு வெற்றி நிச்சயம்




    ReplyDelete