Thursday, December 5, 2013

சுமைதாங்கி

ரொம்ப அழகான வீடு. சுற்றி மரங்கள். மான்கள். கிளி, மரங்கொத்தி, மைனா, பாம்பு என பல விதமான பக்ஷிகள். ஓ, பாம்புகூட சொன்னேன், இல்லை? ஆமாம, பாம்பு, கீரிப்பிள்ளை...

இவை இருப்பதைப்பற்றி அக்கரைக்கூட இல்லாமல், அங்கே தீவிரமாக கட்டட வேலை நடக்கிறது. நம் சௌகரியத்திற்கு தான்! மெட்ரோ ரயில்.

இத்தனை நாட்களாக வெறும் மேலோட்டமாகத்தான் வேலை. ஆனால் இப்பொழுது, தீவரமாக பயிலிங் வேலை நடக்கிறது.

கோவம் கோவமாக வரது. போட்டு பூமியை இப்படி யாராவது தாக்குவாங்கள? மரங்களை இப்படி வெட்டுவாங்களா? மனித ஜன்மம் உருப்படுமா?

ஆனால் அதே மனித ஜன்மத்தில் நானும் ஒன்று. வீடு வேண்டும் என்று வாங்கும் பொழுது, ஏதோ ஒரு மரத்தை வெட்டித்தான் கட்டியிருப்பார்கள். அஸ்திவாரம் போட பூமியை தோண்டியிருப்பார்கள், பயிலிங் செய்திருப்பார்கள். அப்பொழுது எழாத அக்கறை இன்று நாமும் பாதிக்க படுவோமோ என்ற நேரத்தில் தான் எழுகிறது.

ஆனால் எதையும் தாங்கி இன்னமும் கொடுக்க தயாராக இருக்கிறது உண்மையான சுமைதாங்கி பூமி.

Friday, November 15, 2013

மறக்க முடியுமோ? - சிறுகதை

"எங்க இந்த பக்கம்?" நித்யா தன் தோழி காந்தாவைக் கேட்டாள்.

"ரவிய பார்க்க வந்தேன்."

"ரவியா?" நித்யாவின் புருவம் சுருங்கியது.

"ஞாபகமில்லையா? நம்ப காலேஜ்ல படிச்சானே? எல்லாத்லையும் பர்ச்ட்... ரொம்ப சமத்துன்னே சொல்லலாம்."

"ஓ! அவனா? இங்க பக்கத்லையா இருக்கான்?"

"இல்ல, அமெரிக்காலதான் இருக்கான். இங்க எதோ வேலைன்னு வந்தான்... நீ அவனோட டச்ல இல்லையா?" காந்தா வினவினாள் .

நித்யா இல்லையென்று தலை அசைத்தாள்.

"ஒங்க ரெண்டு பேருக்கும் தானே எப்பவுமே போட்டி?" காந்தா நகைத்தாள்.

"அதெல்லாம் அந்த காலம். இப்போ அதெல்லாம் மறந்தே போச்சு."

காந்தா  அரை மணிநேரம் இருந்து விட்டு கிளம்பினாள். தன் முகத்தில் பழைய ஞாபகங்கள் நடத்தும் போரை எப்படி மறைத்தாள் தன் நீண்டநாள் தோழியிடம் என்று நித்யாவிற்கு தெரியவில்லை. இன்னும் ஒரு நிமிடம்கூட தாக்கு பிடித்திருக்க முடியாது.

போட்டியிடுபவரிடமே மனதையும் பரி கொடுத்திருந்தாள் நித்யா. ஆனால் அந்த சமுத்தோ அவள் ஜாடைமாடையாக வெளிப்படுத்திய எந்த துப்பையும் புரிந்துகொள்ளவில்லை. காலேஜ் முடிந்து எங்கு மறைந்தானோ! அந்த ஏக்கத்தை மட்டும் இவளிடம் ஒப்படைத்திருந்தான். அது இன்றும் மனதை வாட்டியது. இப்ப காந்தா அதை மறுபடியும் தூண்டி விட்டுச்சென்றாள்! அவன் நம்பரை வாங்கிக்கொண்டிருக்கலாமோ என்ற கேள்வி மனதை வாட்டியது.

வாச பெல் அடித்தது. "அம்மா" என்று அந்த சிறுவன் இறுகக்  கட்டிக்கொண்டான்.

"என்னடா ரவி, இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ணின?" என்று கேட்கும் பொழுது அன்பு பொங்கியது - தன் மகன் மேல் மட்டுமல்ல.



Friday, October 18, 2013

தேவி வந்தனம்

மனதில் நிறைந்தாய் வலிமையாக
எதையும் எதிர்க்கும் சக்தியாக

நாவிலிருந்தாய் இனிமையாக
மென்மையான வாக்தேவியாக

நாட்டில் படர்ந்தாய் செழிப்பாக
இன்பமளிக்கும் மெய்ப் பொருளாக

உன்னை வணங்கும் ஏழை எனக்கு
வாரி வழங்கம் அன்னை நீயே

கர்வமெனும் அரக்கன் எழுமுன்
சீறி எழுந்தாய் பத்ரகாளியாக

தாயே உன் திருவடியில் கிடக்க
என்றும் அருள்வாய் முத்தேவியாக. 

Sunday, September 22, 2013

பெயரில்லாத ஒரு ஜீவன் - கவிதை

என் வீட்டின் மிக அருகில்
வளரும் ஒரு பெரிய மரம்
பெயரோ குலமோ அறிவதற்கு
என்ன பெரிய சாதனை செய்தாய்?

பல மரங்களில் அதுவும் ஒன்று
பிறந்து, வளர்ந்து, மறையும் இது
இதற்குப்போய் ஒரு கவிதையும்
நம் நேரத்தையும் வீணடிப்பதா?

ஒரே நொடியில் அழித்துவிட
ஒரு தீட்டிய கோடாரி போதும்
அதன் அழிவை வருந்துவதற்கு
எந்த ஜீவனும் இங்கே அன்று

இதை நினைத்து முடிப்பதற்குள்
பறந்து வந்தது ஒரு மரங்கொத்தி
கிளி, காகம், புறா என்று
அதில் வாழும் வாழ்வு பல

அந்த மரத்தில் வாழ்பவர்க்கு
அந்த மரமே ஒரு உலகம் அன்றோ?
அதற்கு வரும் துன்ப இன்பம்
அவைகளுக்கும் அதில் பங்குண்டோ?

பறவைகளுக்கு உணவு அதில்
கூடு கட்டி வாழ இடம்
பாம்பு ஒளிய அது புகல்
மழையில் வெய்யிலில் கிடைக்கும் நிழல்

இப்படி அதற்கு பொறுப்புகள் பல
தன்னைப் பற்றிய கவலை இல்லை
கடமை என்ற ஒரே கருத்தில்
'நான் நான்' என்ற பீத்தல் இல்லை

இருப்பதும் இறப்பதும் அவன் கையில்
பேரும் புகழும் விதியன்றோ?
தன்னிடம் இருப்பது நேர்மையொ ன்றே
உண்மையாக உழைத்திடுவோம்.


Saturday, August 24, 2013

உள்ளே வெளியே: கவிதை

பார்க்க என்ன அழகு
ஒன்றை போல மற்றொன்று!
சிறிய பெரிய வேற்றுமை
சில கருப்பு, சில வெள்ளை

கவனித்தால் இன்னும் பல
நுணுக்கங்கள், கோணங்கள் சில
கண்ணைப் பறிக்கும் ஜொலிப்பு ஒன்றில்
மனதை துளைக்கும் இருட்டு மற்றொன்றில்

ஏழ்மை, செழுமை எனப் பல எதிர்ச்சொற்கள் 
மனிதன் வாழ்க்கைக்குக் குறிக்கோள்கள்
ஆண் பெண் என்ற பிரிவினையால் 
ஊசலாடுகிறது மனிதாபிமானமாம்

வெளியில் ஒரே ஆடைஎன்றாலும்
உள்ளே நடக்கும் போர்கள் வெவ்வேறு
அதில் விளங்கும் நன்மை தீமையில்
எரியும் மனித இனம் பல்வேறு

Tuesday, August 6, 2013

பாசம் - சிறுகதை

"என்ன ஜொலிக்கர?" பவானி அகிலாவைப் பார்த்துக்கேட்டாள்.
"புது வைரத்தோடு" என்று பெருமையுடன் அந்த சிறியத் தோடை காட்டினாள் அகிலா. "என்னோட சண்ட போட்டார். அதுக்கு சமாதானமா," என்று சிரித்தாள் அவள்.
"ஓ! சண்ட போட்டா இதெல்லாம் கடைக்குமா?"
அகிலா சிரித்துக்கொண்டே, "நானும் தான் வாங்கிகொடுத்தேன், ஒரு ஸ்மார்ட் போன்."
பவானி ஆச்சர்யத்தில் பார்த்தாள். "பலே! அப்ப நறைய சண்ட போடுவயா?"
மறுபடியும் ஒரு சிரிப்பு. "அப்படி இல்ல. ஆனா சண்ட போட்டா, சமாதானம் இப்படித்தான்."
அதற்குள் அங்கு நித்யாவும் வந்து விட்டாள். "எங்க வீட்டுக்காரருக்கு எவ்வளவு ஜாடமாடையா சொல்லிப் பார்த்தாலும் இதுக்கெல்லாம் மனசே வராது. வெறும் ஹொடெல்ல போய் ஒரு வேள சாப்பாடுதான் அவர் செய்யற சமாதானம்."
பவானிக்கு ஒரு மாதிரி இருந்தது. பேச்சை மாற்றி வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் சண்டை நடக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று மனதில் கணக்கிட்டுக்கொண்டாள். வேலை மும்முரத்தில் அதையும் மறந்தாள்.
ஒரு வாரமிருக்கும். பலமான சண்டை, அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையில். யார் ஆரம்பித்தார் என்று தெரியவில்லை, ஆனால் இருவரும் முடிப்பதாகவும் தெரியவில்லை.
ஒரு மாதிரி சத்தம் அடங்கியதே தவிர, ஆத்திரம் அடங்க வில்லை. நேரம் ஆக ஆக, அதுவும் சிறிது சிறிதாக தணிந்தது.
 அவள் சமையலறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவன் அருகே வந்து அவளுடைய இடையை பிடித்து தன்னுடன் அணைத்துக்கொண்டான். அவள் வேண்டுமென்றே முகத்தை சுளித்துக்கொண்டாள். "என்னடா," என்று அவன் அவள் கன்னத்தில்  முத்தமிட்டான். சிணுங்கினாள், அவன் தோளில் சாய்ந்தாள், காதலில் மெய் மறந்தாள்.
மறுபடியும் அகிலாவை இரண்டு நாள் கழித்துப்பார்த்த பின்புதான் தான் கணக்கிட்டது ஞாபகத்தில் வந்தது.
ஆனால் அந்த முத்தத்தில் கிடைத்த திருப்தி பொருளில் கிடைக்குமா?  தான் போட்டது தப்பு கணக்கு. அன்பிற்கும் பாசத்திற்கும் ஏது விலை?
  

Friday, July 19, 2013

நமக்கும் ஒரு பொறுப்பு

ஹிந்து பத்திரிகையில் ஒரு நல்ல முயற்சி - நம்மூரில் உள்ள சாலைகளில் நடைபாதை இல்லாததையும், இருக்குமிடங்களில் பயனற்றவையாக இருப்பதை படம் பிடித்து அனுப்பித்தால், அதை பரசுராம் செய்து, அரசை அதற்கு வழி செய்ய ஒரு முயற்சி.

ஆனால், சாலையில் எதுக்குமே வழி இல்லை. இதற்க்கு சாலை பற்றாகுறை ஒரு காரணம் என்றால், அதை உபயோகிக்கும் விதம் இன்னொன்று. சாலை விதிகளை மீறும் வண்டி ஓட்டுனர் இருக்கும் வரை எந்த ஒரு முயற்சியுமே வீண் போகும். வெறும் யந்திரங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்தால் போதாது. நமது நாட்டின் மனோ பக்குவத்தை புரிந்து கொள்ளும் நாம் அதையும் மனதில் வைத்து, அதற்கேற்ப விழிப்பையும் ஜனங்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும். இப்பொழுது இருக்கும் சாலைகளை சரியாக உபயோகித்தால் தான் இன்னும் புதுப்பிக்கும் முயற்சிகள் வெற்றி பெற முடியும்.

இன்று தமிழ் அரசு பல விழிப்பு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிறது. சாலை பிரயோகத்தையும் தன் முயற்சிகளில் தீவிரமாக சேர்த்துக்கொள்வது முக்கியம்.

கூடவே, நாமும் படித்த முட்டாள்களாக இல்லாமல், வண்டி நமது ராஜ்யம், மற்றவர்கள் நமக்கு வழி விட வேண்டியவர்கள் போல் நடந்து கொள்ளாமல் பொறுப்பாக நடக்கக்கடமை பட்டிருக்கோம்.

ஓ, இன்னொரு விஷயம். பெண் ஒட்டுனரைப்பார்த்தால் ஹார்ன் அடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம். அவர்களை பின் தள்ளி நாம் எவ்வளவுதான் முன்னால் சென்று விட முடியும், இந்த மூச்சு முட்டும் சாலைகளில்?