Friday, October 18, 2013

தேவி வந்தனம்

மனதில் நிறைந்தாய் வலிமையாக
எதையும் எதிர்க்கும் சக்தியாக

நாவிலிருந்தாய் இனிமையாக
மென்மையான வாக்தேவியாக

நாட்டில் படர்ந்தாய் செழிப்பாக
இன்பமளிக்கும் மெய்ப் பொருளாக

உன்னை வணங்கும் ஏழை எனக்கு
வாரி வழங்கம் அன்னை நீயே

கர்வமெனும் அரக்கன் எழுமுன்
சீறி எழுந்தாய் பத்ரகாளியாக

தாயே உன் திருவடியில் கிடக்க
என்றும் அருள்வாய் முத்தேவியாக. 

Sunday, September 22, 2013

பெயரில்லாத ஒரு ஜீவன் - கவிதை

என் வீட்டின் மிக அருகில்
வளரும் ஒரு பெரிய மரம்
பெயரோ குலமோ அறிவதற்கு
என்ன பெரிய சாதனை செய்தாய்?

பல மரங்களில் அதுவும் ஒன்று
பிறந்து, வளர்ந்து, மறையும் இது
இதற்குப்போய் ஒரு கவிதையும்
நம் நேரத்தையும் வீணடிப்பதா?

ஒரே நொடியில் அழித்துவிட
ஒரு தீட்டிய கோடாரி போதும்
அதன் அழிவை வருந்துவதற்கு
எந்த ஜீவனும் இங்கே அன்று

இதை நினைத்து முடிப்பதற்குள்
பறந்து வந்தது ஒரு மரங்கொத்தி
கிளி, காகம், புறா என்று
அதில் வாழும் வாழ்வு பல

அந்த மரத்தில் வாழ்பவர்க்கு
அந்த மரமே ஒரு உலகம் அன்றோ?
அதற்கு வரும் துன்ப இன்பம்
அவைகளுக்கும் அதில் பங்குண்டோ?

பறவைகளுக்கு உணவு அதில்
கூடு கட்டி வாழ இடம்
பாம்பு ஒளிய அது புகல்
மழையில் வெய்யிலில் கிடைக்கும் நிழல்

இப்படி அதற்கு பொறுப்புகள் பல
தன்னைப் பற்றிய கவலை இல்லை
கடமை என்ற ஒரே கருத்தில்
'நான் நான்' என்ற பீத்தல் இல்லை

இருப்பதும் இறப்பதும் அவன் கையில்
பேரும் புகழும் விதியன்றோ?
தன்னிடம் இருப்பது நேர்மையொ ன்றே
உண்மையாக உழைத்திடுவோம்.


Saturday, August 24, 2013

உள்ளே வெளியே: கவிதை

பார்க்க என்ன அழகு
ஒன்றை போல மற்றொன்று!
சிறிய பெரிய வேற்றுமை
சில கருப்பு, சில வெள்ளை

கவனித்தால் இன்னும் பல
நுணுக்கங்கள், கோணங்கள் சில
கண்ணைப் பறிக்கும் ஜொலிப்பு ஒன்றில்
மனதை துளைக்கும் இருட்டு மற்றொன்றில்

ஏழ்மை, செழுமை எனப் பல எதிர்ச்சொற்கள் 
மனிதன் வாழ்க்கைக்குக் குறிக்கோள்கள்
ஆண் பெண் என்ற பிரிவினையால் 
ஊசலாடுகிறது மனிதாபிமானமாம்

வெளியில் ஒரே ஆடைஎன்றாலும்
உள்ளே நடக்கும் போர்கள் வெவ்வேறு
அதில் விளங்கும் நன்மை தீமையில்
எரியும் மனித இனம் பல்வேறு

Tuesday, August 6, 2013

பாசம் - சிறுகதை

"என்ன ஜொலிக்கர?" பவானி அகிலாவைப் பார்த்துக்கேட்டாள்.
"புது வைரத்தோடு" என்று பெருமையுடன் அந்த சிறியத் தோடை காட்டினாள் அகிலா. "என்னோட சண்ட போட்டார். அதுக்கு சமாதானமா," என்று சிரித்தாள் அவள்.
"ஓ! சண்ட போட்டா இதெல்லாம் கடைக்குமா?"
அகிலா சிரித்துக்கொண்டே, "நானும் தான் வாங்கிகொடுத்தேன், ஒரு ஸ்மார்ட் போன்."
பவானி ஆச்சர்யத்தில் பார்த்தாள். "பலே! அப்ப நறைய சண்ட போடுவயா?"
மறுபடியும் ஒரு சிரிப்பு. "அப்படி இல்ல. ஆனா சண்ட போட்டா, சமாதானம் இப்படித்தான்."
அதற்குள் அங்கு நித்யாவும் வந்து விட்டாள். "எங்க வீட்டுக்காரருக்கு எவ்வளவு ஜாடமாடையா சொல்லிப் பார்த்தாலும் இதுக்கெல்லாம் மனசே வராது. வெறும் ஹொடெல்ல போய் ஒரு வேள சாப்பாடுதான் அவர் செய்யற சமாதானம்."
பவானிக்கு ஒரு மாதிரி இருந்தது. பேச்சை மாற்றி வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் சண்டை நடக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று மனதில் கணக்கிட்டுக்கொண்டாள். வேலை மும்முரத்தில் அதையும் மறந்தாள்.
ஒரு வாரமிருக்கும். பலமான சண்டை, அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையில். யார் ஆரம்பித்தார் என்று தெரியவில்லை, ஆனால் இருவரும் முடிப்பதாகவும் தெரியவில்லை.
ஒரு மாதிரி சத்தம் அடங்கியதே தவிர, ஆத்திரம் அடங்க வில்லை. நேரம் ஆக ஆக, அதுவும் சிறிது சிறிதாக தணிந்தது.
 அவள் சமையலறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவன் அருகே வந்து அவளுடைய இடையை பிடித்து தன்னுடன் அணைத்துக்கொண்டான். அவள் வேண்டுமென்றே முகத்தை சுளித்துக்கொண்டாள். "என்னடா," என்று அவன் அவள் கன்னத்தில்  முத்தமிட்டான். சிணுங்கினாள், அவன் தோளில் சாய்ந்தாள், காதலில் மெய் மறந்தாள்.
மறுபடியும் அகிலாவை இரண்டு நாள் கழித்துப்பார்த்த பின்புதான் தான் கணக்கிட்டது ஞாபகத்தில் வந்தது.
ஆனால் அந்த முத்தத்தில் கிடைத்த திருப்தி பொருளில் கிடைக்குமா?  தான் போட்டது தப்பு கணக்கு. அன்பிற்கும் பாசத்திற்கும் ஏது விலை?
  

Friday, July 19, 2013

நமக்கும் ஒரு பொறுப்பு

ஹிந்து பத்திரிகையில் ஒரு நல்ல முயற்சி - நம்மூரில் உள்ள சாலைகளில் நடைபாதை இல்லாததையும், இருக்குமிடங்களில் பயனற்றவையாக இருப்பதை படம் பிடித்து அனுப்பித்தால், அதை பரசுராம் செய்து, அரசை அதற்கு வழி செய்ய ஒரு முயற்சி.

ஆனால், சாலையில் எதுக்குமே வழி இல்லை. இதற்க்கு சாலை பற்றாகுறை ஒரு காரணம் என்றால், அதை உபயோகிக்கும் விதம் இன்னொன்று. சாலை விதிகளை மீறும் வண்டி ஓட்டுனர் இருக்கும் வரை எந்த ஒரு முயற்சியுமே வீண் போகும். வெறும் யந்திரங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்தால் போதாது. நமது நாட்டின் மனோ பக்குவத்தை புரிந்து கொள்ளும் நாம் அதையும் மனதில் வைத்து, அதற்கேற்ப விழிப்பையும் ஜனங்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும். இப்பொழுது இருக்கும் சாலைகளை சரியாக உபயோகித்தால் தான் இன்னும் புதுப்பிக்கும் முயற்சிகள் வெற்றி பெற முடியும்.

இன்று தமிழ் அரசு பல விழிப்பு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிறது. சாலை பிரயோகத்தையும் தன் முயற்சிகளில் தீவிரமாக சேர்த்துக்கொள்வது முக்கியம்.

கூடவே, நாமும் படித்த முட்டாள்களாக இல்லாமல், வண்டி நமது ராஜ்யம், மற்றவர்கள் நமக்கு வழி விட வேண்டியவர்கள் போல் நடந்து கொள்ளாமல் பொறுப்பாக நடக்கக்கடமை பட்டிருக்கோம்.

ஓ, இன்னொரு விஷயம். பெண் ஒட்டுனரைப்பார்த்தால் ஹார்ன் அடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம். அவர்களை பின் தள்ளி நாம் எவ்வளவுதான் முன்னால் சென்று விட முடியும், இந்த மூச்சு முட்டும் சாலைகளில்?

Saturday, June 22, 2013

வயது ஒரு தடை அல்ல

இன்று நம் நாட்டில் ஒரு பெரிய பிரச்சனை (ஊழலைத்தவிர), முதியோர்களின் வாழ்க்கைத்தான். மகன், மகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில், இங்கே அவர்கள் தனிமையில் போராடுவது தான்.

ஆனால் இதை கேட்கும் பொழுது சில நேரங்களில் ஆச்சரியமாகவும் இருக்கும். தன் பிள்ளைகள் கூட இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை ஏன் வருத்ததுக்குரியது ஆகி விடுகிறது? 

இப்படி தான் வயதானவர்கள் எல்லோரும் கஷ்டப்படுகிரார்களா?

ஆனால் இல்லை. எல்லோர் வாழ்க்கையும் அப்படி ஆவதில்லை. ஒரு சிலர் தனக்கென்று சில ஹாப்பீஸ் வளர்த்துக்கொள்கிறார்கள்; தனக்கென்று சில விதிகளை நியமித்துக் கொள்கிறார்கள். 'உனக்காக என் வாழ்க்கையை வாழ்ந்தேன், இப்போ நீ எனக்காக வாழ வேண்டும்' என்று தன மக்கள் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒரு 87 வயது பெரியவரை சந்தித்தேன், அவருடைய  சரித்திரம் எழுத. 70 வயதில் தன் மகன்களுடன் சேர்ந்து ஒரு நகை கடை ஆரம்பித்து அதை ஒரு நிலைக்கு கொண்டு வந்தார். தன் மதத்திற்காக, சைவ உணவை பரப்புவதற்காக, சமூகத்தில் நன்மை வளர்வதற்காக, ஆர்கானிக் உணவு வளர்வதற்காக  என்று பலவிதமான சமூக நல வேலைகளில் இந்த வயதிலும் அவர் மும்முரமாக ஈடு படுகிறார். மகனுடன்தான் இருக்கிறார் என்றாலும், தன்னால் எவருக்கும் தொல்லை இல்லாமல் இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்காக தன்னை அர்பணிக்கிறார்.

இது மற்றவர்களுக்கு சாத்தியமில்லையா? நல்ல படிப்பு, ஓரளவுக்கு மதிப்பு உள்ள வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வயதான காலத்திலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துகாட்டு.

இவருக்கு சமீபத்தில் சோடியம் குறைந்ததால் அவ்வப்பொழுது மயங்கி விழுவாராம். இவருடைய ஒரு நுரையீரல் தான் வேலை செய்யும். முப்பது வயது ஆவதர்ர்க்குல்லேயே ஒன்றை எடுக்க வேண்டி வந்தது. காது சரியாக கேட்காது. மனைவி இல்லை, இறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. பெரிய மகனையும் இழந்திருக்கிறார்.

தனிமை, வயது, இழப்புகள் - இவை எதுவுமே நாம் செய்ய வேண்டியவற்றிற்கு தடை இல்லை என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

Thursday, June 6, 2013

மரம் கேட்கிறேன்

இன்று ஒரு தகவல் - விறகிற்க்காக மரங்கள் வளர்க்கப்பட போகின்றனவாம். கேட்க நன்றாகத்தான் இருக்கு, ஆனால் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு.
எங்கிருந்து வந்தேன் நான்? விதை பூமியில் தானே விழுந்து, வானம் பொழிந்து நீர் பாய்ச்சி, சூரியன் வெளிச்சம் கொடுத்து, காற்று ஸ்வாஸமாக மாற...
எதையும் எதிர் பார்க்காமல் வளர்ந்ததுமற்றும் அன்றி, ஜீவன் அத்தனைக்கும் அடைக்கலம் கொடுத்து, பூமித்தாயின் கைகளாகி, அனைத்தையும் என் கரங்களால் அறவணைத்து...
காற்றை சுத்தப்படுத்தி, நீரை பூமியில் இறக்கி, கொடும் வெய்யிலை தடுத்து குடையாகி...
உண்ட உணவு, ரசிக்க மலர்கள், இப்படி பலவற்றை உலகத்திற்கு அர்பணித்து...
என் இறப்பில் கூட பல பயன்கள் - விறகு, கட்டை, பிரம்பு - ஏன், காகிதம் கூடத்தான்!
இப்படி வாழ்விலும் சாவிலும் பயனையே அளிக்கும் என்னை இறக்கம் இன்றி அழித்து இன்று தவிப்பதுகூட தெரியாமல் வாழும் மனிதனே!
காற்றிற்கு விலை பேசி, அழ்காய் பாக்கேஜ் செய்திருந்தால் எனக்கு இன்று இந்த கதி வந்திருக்காது அல்லவா?
எதையும் விலை போடும் மனிதன் இருக்கும் வறை என் மதிப்பு என்ன?