Saturday, December 31, 2011

வரவு எட்டணா

தப்பான நாள், இதைப்பற்றி எழுத. இன்று முதல் இன்னும் இரண்டு நாளைக்கு புது வருஷத்தை வரவேற்க காசு 'தண்ணியாக' ஓடும். அதனால் ஏதாவது மாறி விடுமா? இல்லை, ஆனால் இதில் தான் சந்தோசம் என்று நினைத்தால்...போகட்டுமே!

இரண்டு நாள் முன்னாடி இந்தப்பாட்டை பார்த்தப்பிறகு எனக்கு நம் வாழ்க்கையை நினைத்து சிறிப்பு தாளவில்லை. 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்று பாலய்யா பாடும் பாட்டு இன்னிக்கு யாருக்கு தான் லயிக்கும்? ஒரு காலத்தில் இருப்பதை வைத்து தான் சமாளிக்க வேண்டும். அதிலும் காசு மிச்சப்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் குறியாக இருந்தார்கள். இன்று, வீடு மட்டும் இல்லை, வீட்டுப் பொருள்களையும் கடனுக்கு வாங்கி விடலாம். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதுகிறார் - கடன் வாங்காதே, கடன் கொடுக்காதே, என்று. இன்று நம்மில் யாராவது அப்படி இருக்கிறோமா?

கிரெடிட் கார்ட் வந்ததில் இருந்து மளிகை சமான் கூட கடன் தான். அந்த காலத்தில் மளிகை கடையில் மட்டும் தான் அக்கௌன்ட் வைக்கப்படும். இன்று வங்கியிடம் கடன் வைக்கிறோம் எல்லா விஷயங்களுக்கும்.

கடைசியில் தொம்தனா தொம்தனா தொம்தனா...

Tuesday, December 27, 2011

தொழில் சுத்தம்

இன்று காலை ஒன்பது மணிக்கு நாங்கள் ஐவர் ஒரு ப்ரோக்ராமிற்காக ரெடியாக இருக்க வேண்டிய நிர்பந்தம். எங்களை ஆடும் இடத்திற்கு ஏழு மணிக்கே வர சொல்லி விட்டார் மேக் அப் போட வேண்டியவர். நாங்களும் சமர்த்தாக போய் சேர்ந்து விட்டோம். ஆனால் அவரோ, எட்டு மணியாகியும் வந்து சேரவில்லை! வேறு எதோ குழுவிற்கு மேக் அப் போட்டு விட்டு வந்தார். அதனால் நாங்கள் தயாராக பத்து மணி ஆகி விட்டது! எங்களை முதலில் ஆட அனுப்ப வேண்டிய இடத்தில் மூன்றாவதாக அனுப்பினார்கள். "இன்னும் தயார் ஆகாவில்லையா" என்ற கேள்வி வேறு!

நன்றாக தான் போடுகிறார், ஆனால் அதற்காக எல்லாருக்கும் மேக் அப் செய்வதற்கு ஒப்புக்கொள்வது தவறில்லையா! இது நேற்று இன்று இல்லை, எப்பவுமே நடப்பது தான். எந்த கச்சேரிக்கும் சரியாக வந்து சேருவதில்லை. ஆடுபவர்களுக்கு அவரை காணும் வரை பீதிதான்.


இந்த மாதிரி நிறைய பேர்களுக்கு ஒப்புக்கொண்டு நன்றாக சம்பாதிக்கலாம், ஆனால் நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்க முடியுமா? அளவோடு வேலையை ஏற்று அதை நேரத்தோடு ஒழுங்காக செய்து நல்ல பெயர் வாங்கினாலே வர வேண்டியது வந்து சேராதா! இது என்ன "வேண்டாம்" என்று சொல்லத் தெரியாததனால் வரும் வினையா இல்லை, "ஐயோ போய்விடப்போகிறதே" என்ற ஐயத்தினால் வருவதா?

தொழில் சுத்தம் என்பது நன்றாக செய்வது மட்டும் அல்ல. செய்ய வேண்டிய நேரத்தில் அதை முடிப்பதும் கூட!

Saturday, December 24, 2011

மிச்சம் மீதி

 எட்டு வயதாகும் பையன் ஒருவனுக்கு பிறந்தநாள். பிச்சா கார்நேரில் வைத்து கொண்டாட்டம். பசங்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்.

ஒரு பெரிய கேக், ஒரு பெரிய கார்லிக் ப்ரெட், இரண்டு பிச்சா துண்டுகள், ஒரு கப் ஐஸ் கிரீம் - வாய் யாருக்குத்தான் ஓராது? ஆனால், பெரியவர்களுக்கே கொஞ்சம் அதிகமாக இல்லை? என் மகன் உட்பட எல்லா பசங்களுமே திணறி மீத்தி வைத்து விட்டன. எனக்கு தான் மனசு கேட்காமல், என் மகன் பங்கையும் இன்னொரு பையன் மீத்தி வைத்த பங்கை அவனுக்காகவும் கட்டிக்கொண்டு வந்தேன். வீட்டிலாவது யாராவது சாப்பிடலாம், அல்ல என் மகனே இன்னொரு வேளை அதை சாப்பிடலாம் என்று.


ஆனால், வந்த பிறகு தான் தோணிற்று. என்னை ஒரு மாதிரியாக நினைத்திருப்பாளோ அந்த பையனின் தாய்?


ஆனால் உணவு அப்படி குப்பையில் போவதை விட என்னைப்பற்றி தப்பாக நினைப்பதினால் நான் குறைந்து போய் விட மாட்டேன் என்று என்னையே தேற்றிக்கொள்கிறேன்.

Monday, December 19, 2011

சலனம்

வானம் - ஒரே நிறம்
ஒரு முனையில் இருந்து
கண் எட்டும் தூரம் வரை
ஆனால் இதோ!
மேகங்கள் உலவ!
வானத்திலும் ஒரே சஞ்சலம்!

காற்று - எங்கே?
குப்பென்று ஒரே வெப்பம்!
மெதுவாக, வீசிய காற்று!
பேய்ப்போல் ஆடுவதேன்!
தன்னுடன் சேர்ந்து
உலகத்தையும் ஆடவைக்கிறதே!

குளம் - நீர்,
அதிலும் அசைவு
காற்று வீச
சிறிய அலைகள்
ஆறாக மாறி
கடலில் சேர்ந்து
நிலவைப் பார்த்து
அலைகள் தாவி பறக்கனவே!

நெருப்பா?
ஆடாமல் இருக்குமா?
உணவைத்தேடி
பரந்து படர
காற்றுடன் விளையாடி
தீப்பொறி இங்கும் அங்கும்
குதித்து தன்னுள் கலக்கிறதே!

பூமி - நீ ஒன்றுதான்
சலனப்படாமல்
ஸ்திரமாக நிற்ப்பாயா?
இதென்ன ஆட்டம்?
ஐயோ பூகம்பம்!
நிற்ப்பதனைத்தையும்
சாய்த்தாயா  !

இப்படி பிரபஞ்சமே சலனப்பட
மனதென்னும் குரங்கு
எப்படி ஒரு நிலை பெற!
ஒவ்வொரு புதிய அனுபவத்திலும்
அலைப்போல எழுந்து விழ
இதற்க்கு ஏது  தடை!


Friday, December 16, 2011

படகு கார்

 "உருப்படவே மாட்ட! ஒழுங்கா ஒக்காந்து படி," அம்மா கத்தினாள் மகனைப்பார்த்து.


அவனோ, தனக்கு கிடைத்த காரில் ஆழ்ந்திருந்தான். "போம்மா! நான் பார், இந்த மாதிரி ஒரு பெரிய கார் ஓட்டப்போறேன் பாரு."

"இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல! இப்படி ஊற மேஞ்சிண்டிருன்தென்ன திருடித்தான் பொழக்கணோம்!"

"ஏண்டி இப்படி பழிக்கற பையன!" தந்தை பரிந்து வந்தான். "இன்னிக்குத்தான் கிளி ஜோசியம் பார்த்தேன். பையன் பெரிய கார்ல பறப்பான்னு  சொன்னான்!"

தன தாடையை தோளில் இடித்தப்படி அவள் உள்ளே முணுமுணுத்தப்படியே உள்ளே சென்றாள்.

இருபது வருடம் கழித்து அந்த ஜோசியம் பலித்ததை பார்த்த தந்தை அவளை "எப்படி" என்ற பாவனையில் பார்த்தான். அவள் வாய்மேல் கையை வைத்து மனம் பூரித்து நின்றாள்.

பெரிய பங்களாவில் ஓட்டுனர் உத்தியோகம் கடைக்கும் பொது கூட நினைக்கவில்லை தன் மகன் இப்படி ஒரு படகு கார் ஓட்டுவான் என்று. "பென்ஸ்  மா," என்று அவன் பெருமிதப்படும் பொழுது படிக்காத அவளுக்கு அதன் அருமை தெரியவில்லைத்தான். ஆனால் அது பெரிய விஷயம் என்று அந்த கார் மினுமினுப்பதை கண்டு புரியாதா என்ன!

Monday, December 12, 2011

படகு

ஒரு குறிகோளும் இல்லை
துடுப்புகள் வெறும் தொல்லை
நங்கூரம் பற்றவில்லை
சுயேச்சையாய் மிதக்கும் படகு

திசையைப்பற்றிய கவலை
எதுவும் இதற்க்கு இல்லை
காலம் நேரம் என்றவை
இதற்குப்பொருட்டு இல்லை

எந்த சலனமும் இல்லை
ஆறு தள்ளும் திசையில்
எளிமையாக அந்த ஓடை
மிதந்து போகும் அழகை

ரசிக்க முடியவில்லை
இதற்கு வேண்டும் கொள்கை
என்று அதை தடுத்து
ஒரு கயிற்றை கட்டி

சுமையை ஏத்தி
துடுப்பை எடுத்து
படகை ஓட்டி
ஒரு திசை கொடுத்து

மேலும் கீழும் செல்ல
வாழ்க்கையே நொந்து
விட்டுவிடு என்று கெஞ்சி
முடிவை தேடும் படகு.

Sunday, December 11, 2011

தாய்மை

 சாக்கடையில் வீடு
குப்பைத்தொட்டி தட்டு
அதில் விழும் குப்பை தான்
விரும்பி உண்ணும் உணவு

நெருங்கினாலே நாத்தம்
முகம் சுளிக்க வைக்கும்
'பன்னி'! ஒரு இகழ்ச்சொல்
இப்படி ஒரு பிறவி தேவையோ!

எனிலும், தாயாகப்போகிற
அந்த கரும் பன்னி
பசுமையான மெத்தையை
கனிவுடன் உருவாக்கி

பிறக்கப்போகும் குட்டிகளுக்கு
என்ன கனவெல்லாம் காணும்?
பன்னிக்குட்டி என்றாலும்
அவை அதற்க்கு ராஜகுமாரர்களே!



Friday, December 9, 2011

காலம் மாறியதா?

இந்த காலத்துப்பசங்களுக்கு என்ன தெரிகிறது? பெரியவர்களுக்கு மதிப்புக்கொடுக்கக்கூட தெரியவில்லையே என்ற களைப்பு எனக்கும் உண்டு, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் உண்டு! எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு குறை - வளர்ந்த விதம், மணவாழ்க்கை நடத்தும் விதம், உறவுகளும் அதை பராமரிக்கும் விதமும்... வேலை செய்யும் இடத்தில்! எங்கே தான் இந்த பெரியவர்களுக்கு சிரியவர்களைப்பற்றி குறை இல்லை!

அகதா கிறிஸ்டியின் ஒரு கதை படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அறுபது எழுபது  ஆண்டுகளுக்கு முன்னே எழுத பட்டிருக்க வேண்டும். அதிலும் பெரியவர்கள் சிரியவர்களைப்பற்றி இதைத்தான் சொல்கிறார்கள்!

அப்போ நாம் அடிக்கும் டயலாக் கூடவா மாறவில்லை? நம்மைப்பற்றியும் நம் "ஜெநேரஷனைப்" பற்றியும் நாம் பீத்திக்கொள்வது வெறும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தானே? நம்மையும் பெரியவர்கள் கடுப்படித்திருக்கிரார்கள். நாமும் அதையே தான் செய்து வருகிறோம்.

என்ன முன்னேற்றமோ!


Tuesday, December 6, 2011

வேற்றுமை

கிளிகள் ஒரு கிளையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. ஏற்கனவே உலகை ஒருமுறை விடிய காலையில் சுற்றி வந்தாயிற்று. காக்கையும் புறாவும் கூட களைப்பாற உட்கார்ந்திருந்தன.


இதென்ன! திடீரென்ற பூகம்பம்போல ஒரே அதிர்வு! சத்தம்! ஐயோ! மனிதர்கள் வராத இடமாச்சே இது! அவன் ஏன் இங்கு நுழைகிறான்?

பறவைகளெல்லாம் அந்த பக்கமே நோக்கி நின்றன. உறங்கிக்கொண்டிருந்த அணிலும் எழுந்தது. கீரிப்பிள்ளை, தட்டுத்தடுமாறி மேற்கிளைகளில் ஒளிந்துக்கொண்டன.

ஒரு சிரியதலை எட்டிப்பார்த்தது. அது ஓசையின்றி மரம் ஏறியது. ஆனால் அது வருவது எப்படியோ அந்த கிளிகளுக்கு தெரிந்துவிட்டது! கீச்சுக்கீச்சென்று  ஒரே கூச்சல். அணிலும் எட்டிப்பார்த்தது. "இவன் எங்கே இங்கு வந்தான்?" என்று காக்கைகள் எம்பிப்பார்தன.

"எனக்கு பயமாக இருக்கிறது," என்று அந்த புதியவரவு கெஞ்சியது.

அவன் பாஷை இவர்களுக்கு புரியவில்லை, ஆனால் யூகிக்க முடிந்தது. எல்லாருக்கும் மனிதனைக்கண்டால் பயம்தானே! ஆனாலும், எதிரிக்கு எதிரி என்று இவனை கணக்கில் சேர்க்கமுடியாது. கூடவே இருந்து குழி தோண்டுபவன்.  "சீ போ!" என்று அணில் தையிரத்தை வரவழித்து அதை தாக்கியது. அவன் சீறினான். "பார்த்தாயா! இப்படித்தான் இவன்," என்று கிளிகள் ஒன்றை ஒன்று பார்த்தன. "விரட்டு இவனை!"

"சரி சரி, நான் போகிறேன்," என்று அவன் சுயகவுரவத்துடன் நெளிந்தான். அவர்களை தாண்டும் பொழுது, அவன் தலை சற்றே நிமிர்ந்திருந்தது. பின்னாலிருந்து ஒரு கிளி கொத்தப்பார்தது. பின் புறம் திரும்பி சீறினான் அவன். "அதான் போகிறேன் என்றேனே!"

அவனை நம்ப முடியாமல் கிளிகளும் அணிலும் அவன் கீழே இறங்கும் வரை காவல் இருந்தன.


"ச்சே! நானும் இவர்களைப்போல மனிதனிடமிருந்து ஒதுங்கத்தானே வந்தேன்!" என்று அலுத்துக்கொண்டான் அவன்.


ஏதோ ஒரே கூச்சல். "நிசப்தமாகவே இருக்கத்தேரியாதா இவர்களுக்கு!" என்று மனிதர்களையும் ஏசிக்கொண்டே அவன் வழி செல்லும் பொழுது அவன் முதுகில் ஒரு கட்டை வேகமாக விழுந்தது. "ஸ் ஸ்" என்று சீரப்பார்த்த அவன் தலையில் பலமாக ஒன்று விழுந்தது.

"பாம்பு டா!  அடிச்சிக்கொல்லு!" என்று மனிதர்கள் அந்தப்பாம்பை அடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த கிளிகள் பேசிக்கொண்டன, "இந்த மனிதனே இப்படித்தான்! நம்பவேக்கூடாது!"

"அவனுக்கும் தேவைதான்! எவ்வளவு பாடு படுத்தினான் அவன் நம்மை!" என்றது மற்றொன்று.

"பதுங்க இடம் கொடுத்திருக்கலாமோ?"

"சும்மா இரு! அவனை நம்பவே முடியாது! இடத்தைக்கொடுத்தால் மடத்தைப்பிடிப்பவன்!"

Friday, December 2, 2011

ஆசை

சிறகுகள் இல்லை
பறக்க ஆசை
நடக்கவில்லை
ஓட ஆசை

பிறப்பு ஆசை
வாழ்க்கை ஆசை
வாழ்வின் ஒவ்வொரு
தருணமும் ஒரு ஆசை

திணறியும் திண்டாடியும்
முட்டியும் மோதியும்
நீந்தமுடியாமலும்
நீரில் தத்தளித்தும்


போராடி புறண்டு
நிமிர்ந்து நிற்க ஆசை
எல்லோரும் தன் பெயர்
சொல்லவேண்டும் என்றாசை

கடைசி வரை
ஒரு முயற்சி
அதில் இறப்பு மட்டும்
வெறும் நிராசை.