Tuesday, December 6, 2011

வேற்றுமை

கிளிகள் ஒரு கிளையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. ஏற்கனவே உலகை ஒருமுறை விடிய காலையில் சுற்றி வந்தாயிற்று. காக்கையும் புறாவும் கூட களைப்பாற உட்கார்ந்திருந்தன.


இதென்ன! திடீரென்ற பூகம்பம்போல ஒரே அதிர்வு! சத்தம்! ஐயோ! மனிதர்கள் வராத இடமாச்சே இது! அவன் ஏன் இங்கு நுழைகிறான்?

பறவைகளெல்லாம் அந்த பக்கமே நோக்கி நின்றன. உறங்கிக்கொண்டிருந்த அணிலும் எழுந்தது. கீரிப்பிள்ளை, தட்டுத்தடுமாறி மேற்கிளைகளில் ஒளிந்துக்கொண்டன.

ஒரு சிரியதலை எட்டிப்பார்த்தது. அது ஓசையின்றி மரம் ஏறியது. ஆனால் அது வருவது எப்படியோ அந்த கிளிகளுக்கு தெரிந்துவிட்டது! கீச்சுக்கீச்சென்று  ஒரே கூச்சல். அணிலும் எட்டிப்பார்த்தது. "இவன் எங்கே இங்கு வந்தான்?" என்று காக்கைகள் எம்பிப்பார்தன.

"எனக்கு பயமாக இருக்கிறது," என்று அந்த புதியவரவு கெஞ்சியது.

அவன் பாஷை இவர்களுக்கு புரியவில்லை, ஆனால் யூகிக்க முடிந்தது. எல்லாருக்கும் மனிதனைக்கண்டால் பயம்தானே! ஆனாலும், எதிரிக்கு எதிரி என்று இவனை கணக்கில் சேர்க்கமுடியாது. கூடவே இருந்து குழி தோண்டுபவன்.  "சீ போ!" என்று அணில் தையிரத்தை வரவழித்து அதை தாக்கியது. அவன் சீறினான். "பார்த்தாயா! இப்படித்தான் இவன்," என்று கிளிகள் ஒன்றை ஒன்று பார்த்தன. "விரட்டு இவனை!"

"சரி சரி, நான் போகிறேன்," என்று அவன் சுயகவுரவத்துடன் நெளிந்தான். அவர்களை தாண்டும் பொழுது, அவன் தலை சற்றே நிமிர்ந்திருந்தது. பின்னாலிருந்து ஒரு கிளி கொத்தப்பார்தது. பின் புறம் திரும்பி சீறினான் அவன். "அதான் போகிறேன் என்றேனே!"

அவனை நம்ப முடியாமல் கிளிகளும் அணிலும் அவன் கீழே இறங்கும் வரை காவல் இருந்தன.


"ச்சே! நானும் இவர்களைப்போல மனிதனிடமிருந்து ஒதுங்கத்தானே வந்தேன்!" என்று அலுத்துக்கொண்டான் அவன்.


ஏதோ ஒரே கூச்சல். "நிசப்தமாகவே இருக்கத்தேரியாதா இவர்களுக்கு!" என்று மனிதர்களையும் ஏசிக்கொண்டே அவன் வழி செல்லும் பொழுது அவன் முதுகில் ஒரு கட்டை வேகமாக விழுந்தது. "ஸ் ஸ்" என்று சீரப்பார்த்த அவன் தலையில் பலமாக ஒன்று விழுந்தது.

"பாம்பு டா!  அடிச்சிக்கொல்லு!" என்று மனிதர்கள் அந்தப்பாம்பை அடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த கிளிகள் பேசிக்கொண்டன, "இந்த மனிதனே இப்படித்தான்! நம்பவேக்கூடாது!"

"அவனுக்கும் தேவைதான்! எவ்வளவு பாடு படுத்தினான் அவன் நம்மை!" என்றது மற்றொன்று.

"பதுங்க இடம் கொடுத்திருக்கலாமோ?"

"சும்மா இரு! அவனை நம்பவே முடியாது! இடத்தைக்கொடுத்தால் மடத்தைப்பிடிப்பவன்!"

No comments:

Post a Comment