Saturday, December 12, 2015

மழையில் அகப்பட்ட ஜீவன் - சிறுகதை


நரேன் ஆபீசை விட்டு கிளம்பலாம் என்று வெளியே எட்டிப்பார்த்தான். மழை பெரிதாக பெய்துக்கொண்டிருந்தது. மத்தியத்திலிருந்து பெயந்த மழையினால் வாசலில் நீர் தேங்கியும் இருந்தது. பாண்டும் ஷூவும் கெட்டுப் போய்விடும் என்று அவன் மீண்டும் உள்ளேச் சென்றான்.


ரிசெப்ஷனில் உட்கார்ந்துகொண்டிருந்த வசந்தி, "இன்னும் மழை பெஞ்சிண்டிருக்கு. நான் கெளம்பறேன்," என்று பையை மாட்டிக்கொண்டு புறப்பட்டாள். அவளுடன் இன்னும் சிலரும் கிளம்பினர். நரேன் என்ன செய்வதென்று யோசித்தான்.

படியேறி முதல் மாடியில் எட்டிப்பார்த்தான். சிலர் வேலையில் ஆழ்ந்திருந்தனர்.  அவன் அடுத்த மாடி ஏறி தன் இருப்பிடத்திற்குச் சென்றான். ஒரு சில பேர் அந்த அறையிலும் வேலை செய்து கொண்டிருந்தனர். அவன் இந்த நிறுவனத்தில் புதுசு. ஒரு சில பேருடன் தான் அறிமுகம். இங்கு இருந்தவர்களை சரியாக தெரியாது. அவர்களிடம் பேச தயங்கி தன் வேலையை கவனித்தான்.

ஆபீஸ் பாயிடம் டீ வாங்கிகொண்டான். வேலையும் தோழர்களுடன் சாட்டும் அவனை இன்னும் சில நேரம் போக்குவதில் உதவி செய்தன. மழை நீடித்து வெளியே போக முடியாத நிலை புரிந்து எல்லா அறைகளிலும் நோட்டம் விட்டான் நரேன். இருநூறுக்கும் மேல் வேலை செய்யும் அலுவலகில் எண்ணி பத்து பேர்தான் இருந்திருப்பார்கள். அவனுடைய அறையில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. பக்கத்து அறையில் ஒரு பெரியவரிடம் தான் இருப்பதை தெறிவித்து தன் இடத்திற்கு வந்தான். புயல் காற்று வரப்போவதாக செய்தி வந்தது. ஆபீசிலையே இரு என்று அம்மா அறிவுரை கூறினாள் - அவனை அவனுடைய அசட்டுத்தனத்திற்கு திட்டிய பிறகு "இப்படி மழை பெய்யரச்சே ஆபீஸ்ல உக்காருவாளா!"

கொலுசு சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான். எதிர் இருக்கையில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள். இவன் எட்டிப்பார்ப்பதை கவனித்து புன்னகைத்தாள். "ஒரே மழை," என்று தான் பின் தங்கினதற்கு காரணத்தை சொல்லாமல் சொன்னாள்.

சிறிது நேரம் மௌனமாக வேலை செய்தார்கள். "சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியலையே," என்று நரேன் சொன்னான். அவனுக்கு பசித்தது.

"ஓ!" என்று அவள் முழித்தாள்.

"பக்கத்து ரூம்ல இருக்கறவங்க கிட்ட கேக்கறேன். உங்களுக்கும் சொல்லவா?" என்று கேட்டான்.

ஆமாம் இல்லை என்று தெளிவாக  இல்லை அவள் ஆட்டிய தலை. ஆனால் இப்பொழுது இல்லையென்றாலும் பிறகு பசிக்கும் என்று அவன் அந்த பெரியவரிடம் சென்று, "நாங்க ரெண்டு பேர் இருக்கோம்க அந்த ரூம்ல. டின்னர் சொன்னா எங்களுக்கும் சேர்த்து சொல்லுங்க ப்ளீஸ்," என்றான். அவர் தலையாட்டினார்.

திரும்பி தன் அறைக்கு வந்து அந்த பெண்ணிருக்குமிடத்திற்கு சென்றான். "நீங்க புதுசா?"

"இல்ல, ஆறு மாசமாச்சு," என்றாள் அவள்.

"என்ன ப்ராஜெக்ட்?"

தயங்கினாள். "பென்ச்ல இருக்கேன்."

"ஆறு மாசமாவா?" என்று கேட்டான் ஆச்சர்யத்துடன்.

அவள் அமாம் என்று தலை அசைத்தாள்.

"அப்போ ஏன் இங்க இந்த நேரத்துல? முன்னாடியே கெளம்பிருக்கலாமே?"

"கெளம்பிட்டேன் ஆனா விட்டு போக முடியல."

"நம்பிக்கைதான், ஆனா நாளைக்கு கூட ப்ராஜெக்ட் வந்தா தெரிஞ்சிருக்குமே!" என்றான் அவன் ஆச்சர்யப்பட்டு.

கதவு தரக்கும் ஓசை கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். மணக்க மணக்க ரெண்டு பிச்சா டப்பா. ஓடி பொய் வாங்கிக்கொண்டான். "தேங்க்ஸ். யாருக்கு பே செய்யணம்?"

"கம்பெனி சார்பா இது," என்று சொல்லிவிட்டு அந்த பையன் சென்று விட்டான்.

திரும்பி வந்து பார்த்தால் அந்தப் பெண்ணை காணவில்லை. பேர் கூட தெரியாதே!

அவளிடத்தில் ஒன்றை வைத்து தன்  இடத்திற்கு ஒரு டப்பாவை எடுத்துச்சென்றான். போன இடம் தெரியாமல் அவன் பிச்சா காணாமல் போய்விட்டது. அவளும் சாப்பிட்டு விட்டாளா என்று பார்க்க அவளிடத்திற்கு சென்றான். அவள் கம்ப்யுடரை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய போட்டோ இருந்தது அதில். அவளுடைய ஐ டீ பேஜ் அது. பேரை மட்டும் பார்த்தான் - ரேகா.

"ரேகா நீங்க சாப்டீங்களா ?" என்று அக்கறையுடன் கேட்டான்.

திடுக்கிட்டுப் பார்த்தாள் அவள். "என்ன? எனக்கு வேண்டாம்," என்றாள். ஒரு துளி எரிச்சல் தெரிந்தது அவள் குரலில். அவன் தோள்களை குலுக்கி "அப்ப நான் எடுத்துக்கட்டமா?" என்று கேட்டான். எக்கேடோ துலைந்துபோ என்ற பாவனையில் அவள் தலை ஆட்டினாள்.

"சாரி, ரொம்ப பிஸியா இருக்கீங்க போல இருக்கு," என்றான் நக்கலாக. அவள் பார்த்த பார்வை அவனை பயமுற செய்தது - அவ்வளவு உகரம் அவள் கண்களில். "சாரி," என்றான் மறுபடியும். "ஜஸ்ட் ஜோகிங்," என்று சொல்லி அந்த பிச்சாவை பிரித்தான். "ஆஹ், நல்ல மணம். நிஜமாவே வேண்டாமா?" என்றான் மறுபடியும்.

"எனக்கு பசி எல்லாம் தீந்து போச்சு," என்றாள் அவள் எரிச்சலுடன்.

"அப்பறம் நான் கேக்கலன்னு சொல்லக் கூடாது," என்றான்.

"நான் கேட்டேனா!" என்று பதிலடி கொடுத்தாள்.

மௌனமாக சாப்பிட்டான். அவள் தன் ஸ்க்ரீனையே பார்த்துக்கொண்டிருந்தாள். "ஏங்க, தெரியாமதான் கேக்கறேன், இப்படி அதையே பாத்துண்டிருந்தா ப்ரோஜெக்ட கிடைக்குமா என்ன? வந்தா அலெர்ட் வருங்க."

"மிஸ் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு," என்றாள் .

 அவள் குரல் நடுங்கியது. அவனை தொட்டது. "வேற வேல தேடிக்கறதானே? போண்ட சைன் பண்ணிருக்கீங்களா?"

"வாழ்க்கையையே குடுத்திருக்கேன்," என்றாள் மர்மமாக.

"வேலைதாநேங்க! இது இல்லேன்னா வேற ஒண்ணு," என்று சொல்லி அவளை நகரச்சொன்னான். சுறுசுறுப்பாக ஒரு வேலை வாய்ப்பு சைடிற்கு சென்று அவளை பற்றின தகவல்களை பதிவு செய்தான். உடனே பல வாய்ப்புகளைப் பற்றின செய்திகள் வந்தன.

"பாருங்க இப்போ," என்றான்.

ஆனால் அவளுக்கு அதில் ஈடுபாடில்லை. "நான் இங்கேருந்து போக முடியாது," என்று அடம் பிடித்தாள்.

ஒரு சிறிய வாக்குவாதம் நடந்தது அவர்கள் இடையில். கடைசியில், "இப்படி அடிமையா இருந்தேன்னா எப்படி? திஸ் இச் ஆப்டர் ஆல் எ ஜாப்!" என்றான்.

"உனக்கு வேணும்னா 'ஆப்டர் ஆல் எ ஜாப்' ஆ இருக்கலாம். என் உயிர் மூச்சு இது. ரொம்ப கஷ்டப்பட்டு கெடைச்ச வேலை. எங்க அப்பா இங்க அங்க சிபாரிசு வாங்கி கெடைச்சது. அவர சந்தோசப்படுத்தனம்," என்றாள்.

"உன் கடமை உணர்ச்சிய வணங்கறேம்மா. அதுக்காக இப்படியா பேயாட்டம் ஸ்க்ரீன் முன்னாடியே உக்கார்றது?" என்று கேட்டான்.

"பேயேதான் போயேன்," என்றாள் அவளும் சலிக்காமல்.

அவன் எழுந்து சென்றுவிட்டான். யார் இந்த பயித்தியத்திடம் பேசுவதென்று. இருந்தாலும் அவனுக்கு இருப்பு கொள்ள வில்லை. தன் இடத்திற்குச்  சென்று இன்ட்ரானெட்டில் அவளைப் பற்றின தகவல் தேடினான்.

பொழுது விடியும் பொழுது மழை நல்ல வேளையாக நின்றது. வெள்ளமும்  மெதுவாக வடிய ஆரம்பித்தது. "அந்த பையன் எங்க, போய் பார்," என்று அந்த பெரியவர் தன ஜூனியரை அனுப்பினார். "சார்," என்று அவன் அலறிக்கொண்டே ஓடி வந்தான்.

என்ன என்று போய் பார்த்தால், நரேன் ஸ்க்ரீனை பார்த்தப்படி உறைந்திருந்தான். "நோ பல்ஸ்," என்று பெரியவர் வருத்தத்துடன் சொல்லி டாக்டருக்கு போன் செய்தார். ஸ்க்ரீனில் ரேகா என்று மூன்று மாதம் முன்னாடி ஆபீசில் தற்கொலை செய்துக்கொண்ட பெண்ணைப்பற்றின தகவல் ஓடிக்கொண்டிருந்தது .

No comments:

Post a Comment