Saturday, May 21, 2016

நாட்டிலே மழை

நிலவை மறைத்தது மேகம்
அதை கண்டு சிலிர்த்தது தேகம்
கோடையில் மழையின் வேகம்
உற்சாகத்தில் பறந்தது விவேகம்

மேகமும் திரண்டது
பூமியும் குளிர்ந்தது
உடலும் தணிந்தது
புத்துணர்ச்சி ததும்பியது

ஆஹா, கதிரவன் நகைத்தான்
என்றும் நிலைப்பவன் நான்தான்
என்று; வெப்பத்தை அழைத்தான்
மேகங்களைக் கலைத்தான்

கத்திரி வெயில் திரும்பியது
போது மே என்று மனம் கதறியது
உஷ்ணத்தில் உடல் கரைந்தது
அதை நினைந்து மனம் கரைந்தது

Monday, March 7, 2016

பெண்

தாய், தெய்வம் என்றுப் போற்றப்படுவாள்
இலக்ஷ்மி என்றும் பூசிக்கப்படுவாள்
தியாகத்தின் வடிவம் என வணங்கப்படுவாள்
அரக்கிப்போல் கூடக்காட்சி அளிப்பாள்

பூப்போல் நீ என காப்பாற்றப்படுவாள்
'அம்மா தாயே' என்று ஒடுங்கச்செய்வாள்
உலகம் தீயது என்று காக்கப்படுவாள்
'போடி வெளியே' என்றும் உதைக்கப்படுவாள்

பிறக்கும் முன்னே அழிக்கப்படுவாள்
பிறந்தபின் ராணிபோலும் வளர்க்கப்படுவாள்
உன் கடமை இதே என்று அடக்காப்படுவாள்
இதுதான் இறகு என்று பறக்கவும் செய்வாள் 

விதி என்று பெருமூச்சு விட்ட அவள்
இன்று சீரி சிங்கம் போல் எழுவாள்
தெய்வம் அரக்கி இரண்டும் இல்லை என்பாள்
 என்னை மனுஷியாக வாழ விடு என்று கெஞ்சுவாள் 

Wednesday, February 17, 2016

பழுது - கவிதை

ஒரு பழைய துணியை எடுத்தாள்
வீட்டில் படிந்த தூசியை துடைத்தாள்
வருபவர்கள் புகழ்வதை ரசித்தாள்
அவள் பெருமையில் பூரித்தாள் 

முகம் கழுவி அதற்கு அழகு சேர்த்தாள்
கண்ணில் மை, இதழ்களில் நிறம் பூசினாள்
ஆடையின் பளபளப்பால் தன்னை அலங்கரித்தாள்
 நகைகளின் ஜொலிப்பில் தன்னை மறந்தாள்

சிப்பந்தியிடம் கடிந்துக்கொண்டாள்
தோழியுடன் வம்பு பேசினாள்
இளக்காரம் செய்து நகைத்தாள்
மனதில் படிந்த பழுதை துடைக்க மறுத்தாள். 
   

Saturday, December 12, 2015

மழையில் அகப்பட்ட ஜீவன் - சிறுகதை


நரேன் ஆபீசை விட்டு கிளம்பலாம் என்று வெளியே எட்டிப்பார்த்தான். மழை பெரிதாக பெய்துக்கொண்டிருந்தது. மத்தியத்திலிருந்து பெயந்த மழையினால் வாசலில் நீர் தேங்கியும் இருந்தது. பாண்டும் ஷூவும் கெட்டுப் போய்விடும் என்று அவன் மீண்டும் உள்ளேச் சென்றான்.

குருட்டு உலகம்

 விலை மதிப்புள்ள கற்கள் 
எதை எடுக்க எதை விட!

கண்கள் கூசும் வெளிச்சம் 
அவைகள் பளிச்சிட.

சில கீழே ஒளியும் 
பல எடுப்பாக ஜொலிக்கும் 

அவைகளின் மதிப்பு குறையாது 
கண்கள் செய்த பிழைக்கு 

பகட்டை பார்க்கும் மனிதர்களுக்கு
மின்னுவதெல்லாம் வைரம்  

சூரியனின் பிரதிபலிப்பில் மயங்கி 
கண்ணாடியை விரும்பும் உலகம்.

Sunday, November 22, 2015

பூமியில் ஒரு நட்சத்திரம்

வானில் மின்மின்னுக்கும்
நட்சத்திரங்களே
நானும் உங்களில்
ஒருவளே!

இருதயம் மினுக்கும்
கண்கள் சிமிட்டும்
உதட்டில் உதிரும் வார்த்தை
பளிச் பளிசெனுமே

வானில் மிதக்கும்
விண்மீன்கள்
கண்டு வியக்கும்
இந்த உலகம்

அதில் ஒன்று உதிர்ந்து
மிதக்கும்  அவர்கள் நடுவிலே 
என்று கண்டும் காண 
தேவை ஆழ்ந்த பார்வையே.

   

Sunday, October 11, 2015

என்றும் காதல்

பதினாறே வயதுதான் தேவியிற்கு. அதற்குள் ஒரு ஏமாற்றம் - படிப்பை நிறுத்தி அவளுக்கு திருமணம் முடிக்கப்போறதாக அவளுடைய தந்தை அறிவித்தார்.

தாய்மாமனுடந்தான் என்ற அடுத்த கனவு உடைந்தது. "உன்னோட அத்தப்பையன் உன்னத்தான் பண்ணிப்பேன்னு ஒத்தக்கால்ல நிக்கறானாம்," என்று தாய் சொன்னாள். முகத்தில் ஒரு உணர்வும்  இல்லை. கணவனை எதிர்த்துப் பேசும் துணிச்சலும் இல்லை. மகளுக்கு எங்கிருந்து வரும்? வருத்தத்தில் தலையை குனிந்தாள். அது நாணம் என்று பாட்டி சிரித்துக்கொண்டே அதற்கு பெயர் சூட்டினாள்.

மாமனாவது கேட்டிருக்கிலாம்.  அவனும் இவளில்லை என்று அறிந்தவுடன் வேறொருத்தியை மணந்து கொண்டான்.

அதாவது அவள் வலியை குறைத்ததா? இல்லையே!

மணம் முடிந்த மூன்றாவது மாதம் உண்டாகினாள். சந்தோசத்தில் உதித்த கரு இல்லை அது. கடமையால் பிறந்தது. அங்கு மாமனுக்கும் ஒரு மகள் பிறந்தாள். சின்னதாக இருந்த வீடு இரண்டு மாடி கட்டிடமாக மாறியது. "உடம்புதான் எப்பவும் படுத்திண்டே இருக்கு தம்பிக்கு," என்று அவள் தாய் வருத்தத்துடன் சொன்னாள்.

"சந்தோசமா இருக்காறா?" தயக்கத்துடன் கேட்டாள் அவள்.

மௌனம் சாதித்தாள் தாய். ஏக்கம் அவள் மனதை துளைத்தது. அவளும் மௌனத்தில் அதை மறக்க முயற்ச்சித்தாள். இரண்டாவது குழந்தையும் பிறக்கப் போகும் தருணத்தில் வேற்றாரை நினைப்பது தவறல்லவோ?

அந்த வருடத்தில் மாமாவின் வீடு இன்னும் பெரிதாகி விட்டது ஆனால் குடும்பம் அதே அளவாக தான் இருந்தது. பூஜைக்கு சென்றிருந்த போது மாமாவை வீல்சேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். "என்ன மாமா?" என்று தன்னையும் மிஞ்சி கேட்டு விட்டாள் .

அவளை நிமிர்ந்து பார்த்தான் அவள் மாமன். "ஒண்ணுமில்லமா, முந்தா நேத்து வண்டிலேர்ந்து விழுந்து அடி பட்டிடிச்சு."

"அம்மா உனக்கு உடம்பு சரியா இல்லன்னு சொன்னாங்க."

"வந்து பார்க்கணம்னு தோணலையா?" அவளையே உற்றுப்பார்த்துக் கேட்டான்.

"வரேன்..." அவள் மெதுவாக பதில் அளித்தாள்.

போய் பார்க்கவேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் கடவுள் வேறு கணக்கு போட்டிருந்தார். திட்டீரென்று அவள் கணவன் இறந்து விட்டான். தன் சிறு குழந்தைகளை அழைத்து அவள் தாய் வீட்டிற்கு திரும்பினாள்.

வயது 20. விதவை என்ற பட்டம், முயற்சி எடுக்காமலேயே அவள் தலையில் விழுந்த பட்டம்! அவள் வாழ்க்கையை இருட்டறையில் பூட்டிய பட்டம். இந்த காலத்திலா என்று ஆச்சர்யப்  படுவர் சிலர். ஆனால் அது நிஜம். முடங்கி விட்டாள் அவள். தந்தை அவளை, "நான் காப்பாத்துகிறேன்," என்றும் அவளை, "குழந்தைகளை பார்த்துக்கோ போரும்," என்றும் சொல்லிவிட்டார்.

"மேல படிக்கிறேன்பா, வேலைக்கு போறேன்," என்று கேட்டுப்பார்த்தாள்.

"நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்," என்று அவளை அடக்கி விட்டார்.

ஒரு அறை, அது ஒரு சிறை. அவளை பாதுகாப்பதின் பேரில் உருவாக்கப்பட்ட ஒரு திறை. 

அதை மிஞ்சி வர தைரியம் இல்லாத, அதற்கு வழி அறியாத ஒரு பேதையாக அவளை வளர்த்த தந்தைதான் அவளுக்கு காவலர்.

குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் அவளுடைய வாழ்க்கையில் மட்டும் கடிகார முள் நின்று விட்டது போல் இருந்தது.

ஒரே பொழுதுபோக்கு, பக்கவாதம் வந்து அவளைப்போலவே முடங்கி கிடந்த அவள் மாமனுக்கு பணிவிடை செய்வதுதான். மாமி வெளியே போகும் நேரங்களில் அவருடன் மனது விட்டு பேசி இன்னும் தன் மனதில் அடங்கி இருக்கும் தன் காதலுக்காவது ஒரு புது வாழ்க்கை  கிடைத்ததே என்று பெருமிதம் அடைந்தாள் அவள்.