Friday, November 11, 2016

நினைவிருக்கிறதா?

மும்பையிலிருந்து டில்லி கிளம்பும் அதிதி மனது சிறகுபோல் படபடத்தது. வேலை விஷயமாக போகும் இந்த பயணத்தில் பழைய சில ஸஹ ஊழியர்களைச்  சந்திக்கலாம் என்று எண்ணிய அவளுக்கு ஒரு சிறிய இன்ப அதிர்ச்சி.

அதில் பரத்தும் வருவதாக சொன்னான். எங்கு சென்றான் என்று கூட தெரியாமல் காணாமல் போன அவன் இப்பொழுது, வாட்ஸ் ஆப் மூலமாக மறுபடியும் தொடர்பு கொண்டான். கொஞ்சம் ஒதுங்கி இருப்பான் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் மிகவும் கலகலவென்று பழகினான். எல்லோருக்கும் ஒரு வார்த்தை, ஒரு கேள்வி. அவளுக்கும் தான். டில்லி வரப்போகிறேன் என்று அவள் சொன்ன உடன், எங்கே, எப்போ, சந்திக்கலாமா என்று முதலில் கேட்டவனும் அவன்தான். ஐயோ டில்லி  போக வேண்டுமா என்று எண்ணிய அவள் மனதில் எப்பொழுது போகப்போகிறோம் என்கிற ஆவல் எழுந்தது.

எத்தனை நினைவுகள் அவள் மனதை வாட்டின. வேலைச் சம்மந்தமான சந்திப்புகளில்கூட பரத் பற்றிய நினைவுகள்தான். சேர்ந்து வேலை செய்த அந்த இருபத்திரண்டு தாண்டிய பருவ காலத்தில் எத்தனை சிந்தனை பரிமாற்றங்கள், எத்தனை ஜாடையில் பேச்சுகள்... காதல் என்று ஒப்புக்கொள்ளவில்லையே தவிர, சொல்லாமல் நடந்தது இருதய பரிமாற்றமும்.

அப்படித்தான் அவள் நம்பி இருந்தாள். ஆனால் அவன் திடீரென்று ஒரு நாள் "வேலையை விடப்போகிறேன்," என்று சொல்லும் பொழுது, மண்டையில் இடி விழுந்தாற்போல் இருந்தது. சரி, கிளம்பும் பொழுதாவது தன் உணர்வுகளை இவளிடம் பகிர்ந்து கொள்வான், தன்னுடன் வந்துவிடச் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவனோ தன் எதிர்காலத்தைப்பற்றியே பேசினான். அதில் இவளுக்கு இடம் இல்லை என்று உணர்ந்த அவள் மனம் வாடியது. இன்று நினைத்தால் கூட நெஞ்சை ஏதோ தைப்பது போலத்தான் இருந்தது. இப்படி பழைய நினைவுகளிலேயே வாழ்ந்தால் புதுமண வாழ்வு பாழாகி விடுமோ என்று பயந்த அவள் மணமே  செய்து கொள்ளாமல், கருமமே கண்ணாயினாள்.

டில்லியில் பரத்துடன்  தனியாக பேச சந்தர்ப்பம் கிடைக்க வேண்டிக்கொண்டாள். அப்படி கிடைக்கவும் கிடைத்தது. அவன் சற்று முன்பே வந்து விட்டான்.

"உனக்கு ஜனாவை நினைவிருக்கிறதா? சுதீர் என்ன ஆனான்? ஏய், சுரேஷ் என்று ஓருவன் இருந்தான், இல்லையா?"

மற்றவர்கள் வரத் தொடங்கினர். அன்று மாலை முழுவதும், "நினைவிருக்கிறதா?" என்ற கேள்வியிலேயே போய் விட்டது.

"நாம் இருவரும் பழகினது நினைவிருக்கிறதா? அந்தக் கோவில் வரைச் சென்று திரும்புவோம், அது நினைவிருக்கிறதா? வேர்க்கடலை தின்றுகொண்டே நடப்போம், அது நினைவிருக்கிறதா? டீ வாங்கிப்  பகிர்ந்துகொள்வோமே, அது நினைவிருக்கிறதா? லேட் ஆகி விட்டால் நீ என்னை உன் பைக்கில் கொண்டு போய் விடுவாய்... அது நினைவிருக்கிறதா?"

இப்படி எத்தனை நினைவுகள்! எல்லாவற்றையும் முழுங்கி விட்டு, அதிதியும் மற்றவர்களுடன் அவசியம் இல்லாத நினைவுகளைத் தோண்டி எடுத்தாள். நினைவில் கூட இல்லாத அந்த நாட்களைப்பற்றி அவனிடம் பேசி தன் நினைவுகளைத் துச்சப்படுத்த அவள் விரும்பவில்லை.

No comments:

Post a Comment