Sunday, September 2, 2018

உறவுகள் ஜாக்கிரதை - 1

"என்ன அதிசயம்? இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பறீங்க?" சஞ்சீவ் ராதாவைப் பார்த்து கேட்டான். "ஆஃபீஸ்ல   விளக்க யாரு அணைக்கறது!?"

ராதா சிரித்தாள். "இந்த கிண்டல் தானே வேண்டாங்கறது! என்னவோ நான் மட்டும் லேட்டா வேலை செய்யற மாதிரியும், நீங்க எல்லாம் சரியா கிளம்பற  மாதிரியும்!"

சஞ்சீவ் சிரித்தால் கன்னங்களில் குழி விழும். அதை  ரசித்தபடியே கிளம்பினாள் ராதா.

எப்பவும் போல் மறுநாள் காலை அவன் வருவதற்கு முன்னேயே அவள் வந்து விட்டாள். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருப்பது போல் இருந்தது. எதையும்  இருமுறை கேட்க வேண்டியிருந்தது.

"எல்லாம் ஓகே தானே ராதா?" என்று அக்கறையுடன் கேட்டான் சஞ்சீவ்.

"சாரி சஞ்சீவ்... சற்று குழப்பத்துல இருக்கேன். எனக்கு கல்யாணத்துக்கு பார்க்கிறாங்க ."

"கங்கிராட்ஸ்! அதுக்கு குழப்பம் என்ன? சந்தோஷம்னு சொல்லுங்க!" என்று சிரித்துக்கொண்டே அவளை வாழ்த்தினான் சஞ்சீவ்.

"ஆமாம்... ஆனால் குழப்பம்தான் அதிகமாக இருக்கு."

"ஏன்?"

அவனை சந்தேகத்துடன் பார்த்தாள். "நீங்க பெண் பார்க்கப் போயிருக்கிறீங்களா சஞ்சீவ்?"

எதிர்பாராத அவளுடைய கேள்வி அதிர்ச்சியைத் தந்தது. "ஏன், உங்களுக்கு என்ன பிடிக்குமா !" என்று விளையாட்டாக கேட்டான்.

ராதா அதை கவனிக்காமல், "நான் வேலை செய்யறேன், விட இஷ்டமில்லைன்னு முன்கூட்டியே சொல்லிட்டேன். அப்படியும், நேத்து  என்ன பார்க்க வந்தவர் கல்யாணத்துக்கு பிறகு வேலையை விட்டு விடுவேங்கற  எதிர்பார்ப்புடன் வந்தார். தான் நல்லா சம்பாதிக்கும் போது நான் ஏன் வேலைக்கு போகணம்னு கூட கேட்டார்... வீடு இருக்காம், பெரிய கார் இருக்காம்..." புருவங்கள் சுருங்கின. "வேலை அதுக்காக மட்டுமா செய்யறோம்?"

சஞ்சீவ் புருவங்கள் மேலே ஏறின. "வேற எதுக்கு?"

ஏமாற்றத்துடன் அவனைப் பார்த்தாள். "நீங்களுமா? உங்களுக்குன்னு  ஒரு திறமை இருக்கும். அதுக்கு ஒரு வடிகால் வேண்டாமா? "

"வீட்டுல இருந்தா குறைஞ்சிடுமா?" என்று அவனும் விவாதித்தான்.

"வீட்டைப் பார்த்துக்கறது எந்த விதத்திலும் குறைஞ்சது இல்லைன்னா ஏன் நன்னா சம்பாதிக்கர பெண்களோட கணவர்கள் வீட்ல இருக்கக்கூடாது? அதை ஏன் மதிப்புக்குறைவா கருதணம்? ஏன் தன் மகனை வீட்டு வேலை செய்ய விடாம அவங்களோட  அம்மாக்கள்  தடுக்கணம்? ஏன் நேரம் இருந்தால் கூட வீட்டு வேலை செய்யாம ஆண்கள் நழுவணம்?"

"அதெல்லாம் மாறி விட்டது ராதா..."

ராதா சிரித்தாள். "மாறித்தான்  வருது, இல்லைன்னு சொல்லல. ஆனா நேத்து  என்ன பார்க்க வந்தவர்  கண்ணோட்டம் அந்த நம்பிக்கையை எனக்கு கொடுக்கல..." என்று வருத்தத்துடன் கூறினாள். "என் கடமை வீட்டைப் பார்த்துக்கொள்றது தான்னு அவருடைய கருத்து. அதனால் நான் வேலைக்குப் போகக் கூடாதாம்..."

"ஹ்ம்ம்... என்ன எதிர்பார்க்கிறாங்கன்னே புரியல. நான் ஒரு பொண்ணுகிட்ட பேசினேன். என்னவிட ஒரு சில ஆயிரம்தான் குறைவா சம்பாதிக்கறதுனால 'உன்ன திருமணம் செஞ்சிகிட்டா எனக்கு என்ன லாபம்?'ன்னு கேட்டா," என்று அவனும் கனத்த குரலில் சொன்னான். "நான் வேணும்னா வேலைய விட்டுடறேன்னு  விளையாட்டுக்குதான் சொன்னேன், என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டா," என்று கூறிக்கொண்டே சிரித்தான்.

"ஓ, உங்களுக்கும் இதுல அனுபவம் இருக்கா?"

"ஒரு காவியமே எழுதலாம்," என்றான். அவன் கன்னங்களில் அவள் கண்கள் பதிந்தன...

"கன்னத்துல விழற குழியை பார்த்தது கூடவா வேண்டாம்னு சொல்லிட்டாங்க?" என்று அவனை நையாண்டி செய்தாள்.

"பேங்க் அக்கௌண்ட்ல இருக்கற பணத்தை விட இது அழகு இல்லையே!" என்று அவனும் நகைத்தான். "இப்ப கங்கிராட்ஸ் சொல்லலாமா வேண்டாமா?" அவனும் குழம்பி கேட்டான்.

"இன்னி காலைல அவங்க ஓகேன்னு  சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு யோசிக்க அவகாசம் கேட்டிருக்கேன்."

"மாப்பிள்ளை வீட்ல கூட யாராவது இருக்காங்களா?"

"ம்ம்... அவங்க அம்மா அப்பா கூட தான் இருக்காங்க. அதனாலதான் அவர் அப்படி சொல்லிருக்கார் போல..."

"உங்களுக்கு அதுதான் தயக்கமா இருக்குமே?"

"தயக்கம், புதுசுங்கறதுனால தான். அவங்க கூட இருக்க மாட்டேன்னு இல்ல.  ஆனா அவங்களே எங்களை தனி குடுத்தனம் வெக்க போறதா சொன்னாங்க. ஆஃபீஸ்லிருந்து ரொம்ப தள்ளி அவங்க வீடு."

"பின்ன என்ன... நல்லவங்களா இருப்பாங்க போல இருக்கே..."

"அவங்க கூட இருக்கறதுல எனக்கு ஆட்சேபனை இல்லை..."

"நீங்க இப்படி சொல்றீங்க... என்ன பல பெண்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் எங்க அப்பா அம்மாவோட இருக்கேன் இல்லையா...? "

"இல்ல சஞ்சீவ்... அவங்க நெஜம்மாவே நல்லவங்க மாதிரி தான் இருந்தாங்க."

"பின்ன ஏன் இவ்வளவு தயக்கம், ராதா!"

"கட்டிக்க போறவன் மேல நம்பிக்கை வரலையே!" என்று இழுத்தாள்.

"ரொம்ப யோசிக்காதீங்க ராதா. அவருக்கு என்ன அனுபவங்களோ! வாழ்க்கைல எல்லாத்தையும் எடையும் போட முடியாது முன் கூட்டியே சொல்லவும் முடியாது. உங்க குணத்துக்கு நீங்க நல்லாவே சமாளிப்பீங்கன்னு நான் நம்பறேன்... தைரியமா இருங்க!"

"தேங்க்ஸ்!" சிரித்தாள் ராதா. "எங்கம்மாவும் இதையேத்தான் சொல்றாங்க. ரொம்ப யோசிக்காதன்னு... இப்ப நீங்க சொல்றதுனால..."

"ஐயோ, அம்மா தாயே! எனக்கு இந்த பொறுப்பு வேண்டாம்..." என்று அவன் கும்புடு போட்டான். அவள் மேலும் சிரித்துக்கொண்டே, "நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா உங்களைத்தான் பிடிப்பேன்," என்றாள்.

அவளுடைய போன் மணி அடிக்கவே நகர்ந்து சென்று பேசிவிட்டு மறுபடியும் வந்தாள். "எங்க அம்மா தான். பிள்ளை வீட்டிலேர்ந்து கேட்டு போன் மேல போனாம். என்ன சொல்லன்னு கேட்டாங்க. சஞ்சீவ் சொன்ன மாதிரி சரின்னு சொல்லிட்டேன். ஓகே தானே?" என்றாள்.

"உங்களுக்காக அர்ச்சனை செய்யறேன். இல்லன்னா எனக்கு அர்ச்சனை விழும்," என்று அவனும் கேலியாகப் பேசினான்.

(தொடரும்)

No comments:

Post a Comment