Friday, April 13, 2018

ராம்

ருக்மிணியால் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மேடை மீது அவளுடைய தோழி மது அவையோர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வணங்கினாள். தன்னுடன் ஆடிய, அவள் பயிற்சி கொடுத்த மாணவ மாணவிகளும் அற்புதமாக ஆடியிருந்தார்கள். அவையில் எழுந்த கரகோஷம் அதற்கு அத்தாட்சி. இது வெறும் மகிழ்ச்சிக்காக ஆடப்படும் நடனம் அல்ல, சிந்திக்கவைக்கும் கருத்தும் கூட.

Thursday, March 1, 2018

இங்கும் ஒரு ஜான்சி ராணி

"என்ன பொன்னுத்தாயி? பள்ளிக்கு கிளம்பி விட்டாயா?" என்று பக்கத்து வீட்டு காஞ்சனா கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள்.

"அதுக்குத்தான் கிளம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஆபிஸிலிருந்து போன் வந்தது..." முழு உண்மையை கூறுவதா வேண்டாமா என்று தயங்கியவள், சந்தோஷம் தாங்காமல் மேலும் கூறினாள், "என்னை நிரந்தரமாக்கப் போகிறார்களாம்!"

Sunday, January 14, 2018

சோதனை

பொங்கி வரும் எண்ணங்களில் சிக்கிக் கொண்டு நின்றாள் பிரபா. அவளுடைய உயிர் தோழி கமலாவை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம், ஆனால் இப்பொழுது அவளை எந்த முகத்துடன் சந்திக்கப் போகிறோம் என்ற பயம் மறுபக்கம். பேசாமல் வந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் நழுவி விடலாமா என்று கூட ஒரு நொடி யோசித்து வெளியேறும் நோக்கத்துடன் சபையின் வாசற் கதவை ஏக்கத்துடன் பார்த்தாள். கமலா தன்னை பார்ப்பதற்கு முன் மெதுவாக வெளியேறிவிடலாம் என்று முற்படவும் செய்தாள்.

Monday, December 25, 2017

வெளிச்சத்தில் இருட்டு

பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்
எது ஆரம்பம் என்று
நினைவு இல்லை
இருட்டைக் கிழித்து
வெளிச்சத்தில் இருக்கும்
பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்

எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை
அதை எண்ணிப் பார்க்க
நெஞ்சில் வீரம் இல்லை
எதிரே இருக்கும் இருட்டு
அதை மறந்துப் போக 
எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை  

செல்லும் வழியும்
சீராக இல்லை
கரடுமுரடாய்
முள்ளும் மலருமாய்
வறுமையும் செழிப்புமாய்
தனிமையும் இனிமையுமாய்
செல்லும் வழியும்
சீராக இல்லை

இதில் கிடைக்கும் எதுவும் 
என்னுடையது இல்லை 
காயோ கனியோ 
இனிப்போ கசப்போ 
பொருளோ சுகமோ 
புகழோ இகழ்ச்சியோ 
இதில் கிடைக்கும் எதுவும் 
என்னுடையது இல்லை 

மறக்க முயலும் முடிவு 
முடிவா தொடக்கமா?
எதிரே தெரியும் இருட்டு 
வெறும் ஒரு திரையா?
இங்கே தெரியும் வெளிச்சம் 
மெய்யா பொய்யா?
மறக்க முயலும் முடிவு 
முடிவா தொடக்கமா?

வெளிச்சம் இருந்தும் 
இருட்டில் நிற்கிறேன் நான் 
பகட்டைக் கண்டு 
சிரிக்கிறேன் நான் 
ஒளியைக் கண்டு 
பதுங்குகிறேன் நான் 
வெளிச்சம் இருந்தும் 
இருட்டில் நிற்கிறேன் நான். 



Saturday, December 2, 2017

சிறுதுளி, பெருகும் உள்ளம்

மேகங்களின் மூட்டம் கிளப்பியது
மனதில் விளங்காத குதூகலம்

ஜில்லென்ற காற்று வீச
எதிர்பார்ப்பில் துள்ளியது மனம்

Saturday, November 18, 2017

பேசுவதும் கலை

"கொஞ்சம் நேரமாவது வாயை மூடேன்," என்று அம்மா கெஞ்சினாள் மகள் அஞ்சுவிடம்.

"இல்லைம்மா, இதை மட்டும் சொல்லிடறேன்...கேளேன்," என்று எதற்கும் மசியாத அஞ்சு தொடர்ந்தாள். தன்னையும் மிஞ்சி அம்மா சிரித்து விட்டாள். அதற்கு மேல், மகள் விளாவரியாக விளக்கி வரும் விஷயத்தை அதிகம் காது  கொடுத்துக்  கேட்கவில்லை ஆனால் புரிந்துகொண்டாள்.  "சரி, சரி, இப்பொழுதாவது உன் வேலையை கவனி," என்று அனுப்பிவைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் போனில் தன் தோழி ஒருத்தியுடன் முடிவே இல்லாமல் பேசுவதைக் கேட்டு, "போறாதா! நிறுத்து, படி," என்று இருந்த இடத்திலிருந்தே கூறினாள்.

Wednesday, November 1, 2017

ஆஹா மழை, ஐயோ மழை

அடுத்த வேளை நீருக்கு என்ன செய்வதென்று திணறினாள் ஈஸ்வரி. இன்று வந்த தண்ணீர் லாரியில் அவளால் இரண்டு நாளைக்கு வேண்டிய அளவுதான் பிடித்துக்கொள்ள முடிந்தது. மூன்றாவது நாள் வரவில்லையென்றால் என்ன செய்வது?

இதே கதைதான் ஊர் முழுக்க - தண்ணீர் பஞ்சம். எங்கெங்கேயோ வெள்ளம் வந்து பாதிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி மட்டும் வருகிறது. அந்த பாழாப்போன மழை இங்கு பெய்யக்கூடாதா?

பெருமூச்சு விட்டுக்கொண்டே, ஒவ்வொரு  நொடியும் அவள் குடும்பத்தினர் செலவழிக்கும் நீரைக் கண்காணித்து வந்தாள். இரண்டு வருடமாக மழை காலை வாரி விட்டது. அதற்கு முன்னால் பெய்த மழை நீரை சரியாகச் சேகரிக்காதலால் எல்லாம் கடலில் சேர்ந்துவிட்டதாம்!

வெயில் காயும் வானத்தைக் கண்டு எத்தனை முறை, மழை வந்து தொலையக்கூ டாதா என்று கடிந்து கொண்டதுண்டு; ஐயோ பெய்ய மாட்டாயா என்று கெஞ்சியதுண்டு; ஏன் சோதிக்கிறாய் என்று கடவுளிடம் புலம்பியது உண்டு. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைமை, இது நியாயமா !

சாலையில் செல்லும் போது நீரை இறைத்துக்கொண்டுபோகும்  லாரிகளைக்  கண்டாலே வயிறு பற்றி எரியும். தண்ணீர் பஞ்சம் இருக்கும் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்கக்கூடாதா? தண்ணியை மிச்சப்ப படுத்தக்கூடாதா என்று லாரி ஓட்டுபவனை நிறுத்தி கேட்க வேண்டும் என்று தோன்றும்.

இந்த வருடமாவது பெய்யுமா என்று தினம் வானத்தைப் பார்ப்பதும், எல்லோரிடமும் அதைப் பற்றி சர்ச்சை செய்வதுமே ஜோலியாகி விட்டது.

பெய்யாது என்று சொன்ன மழை திடீரென்று அந்த நகரை விஜயம் செய்தது. ஈஸ்வரிக்கு தலைகால் புரியவில்லை. மண்வாசனை தூக்க, வெளியே ஆவலுடன் எட்டிப்பார்த்தாள். தூறல் ஆரம்பித்தவுடன் தன் குழந்தைகளுடன் வேகமாக வெளியே சென்று முதல் மழையின் இனிமையில் நனைந்தாள். இந்த முறை தண்ணீர் பிரச்னை தீரட்டும் என்று ஊர் ஜனங்களுடன் வேண்டிக்கொண்டாள்.

வீட்டுக்குள் நுழைந்தாள். கூரையிலிருந்து நீர் சொட்டியது. அதற்கடியில் பானை ஒன்றை வைத்தாள். விடா மழையில் அந்த பானையும் தான் எத்தனை தாங்கிக்கொள்ளும்? போறாததற்கு வெள்ளம் வேறு! சாலைகள் நதியாகின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன... சில இடங்களில் பாம்புகள் கூட நெளிந்து சென்றதாக வதந்திகள்.

ஐயோ, எப்படா சூரியனைப் பார்ப்போம், மழை போதுமடா சாமி! லாரியில் கூட தண்ணீர் வாங்கிவிடலாம் ஆனால் இந்த வெள்ளமாக ஓடும்  நீரை சேமிக்கவும் முடியாமல் உபயோகிக்கவும் முடியாமல் திணறுவதை  பொறுத்துக்கொள்ள முடியவில்லை!

ஈஸ்வரி வானத்தை நோக்கி சூரிய பகவான் அருள்  புரிய வேண்டும், மறுபடியும் காட்சியளிக்க வேண்டும், மழை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் .