Sunday, August 20, 2017

ஊருக்கு உபதேசம்

"மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரர் தன் வண்டியை பொது பார்க்கிங்கில் விட்டிருக்கிறார்," என்று நளினி தன் கணவன் பார்த்திபனிடம் புகார் கொடுத்தாள்.

அவர்கள் வாழும் 100 வீடுகள் இருக்கும் குடியிருப்பில் பார்த்திபன்தான் செயலாளராக இருந்தான். விதிகளை அமல் படுத்தவேண்டும் என்பது அவனுடைய அழுத்தமான நம்பிக்கை மட்டும் இல்லாமல் அதற்காக அவன் எவ்வளவு கடுமையாக வேண்டுமென்றாலும் நடந்துகொள்ள ஆயத்தமாக இருந்தான். அவனைக் கண்டாலே பல பேர்களுக்கு ஆகாது என்று அறிந்திருந்தும் அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.


"காவலாளிடம் கூறிப் பூட்டுப் போடச் சொல்கிறேன்! எத்தனை முறை அவர்களுக்கு எச்சரிக்கை செய்தாயிற்று!" என்று பார்த்திபன், எதிர்பார்த்தது போலவே, கொந்தளித்து எழுந்தான்.

"விடக்கூடாது அவர்களை! பொது சொத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்," என்று நளினியும் கூடி குதித்தாள்.

சிறுவர்கள் விளையாடும் சப்தம் கேட்டு நளினி எட்டிப்பார்த்தாள். "ஏய், வண்டிகள் மீது பந்து படுகிறது. இங்கு விளையாடக் கூடாது," என்று அவர்களை விரட்டினாள்.

"ஆரம்பித்து விட்டாள்," என்று பக்கத்து வீட்டு நிருபமா அலுத்துக்கொண்டாள். "இவள் குழந்தைகள்  ஒன்றும் விளையாடாமலா வளர்ந்தார்கள்?"

வெளியே வந்து, அவள் பதிலுக்குக் கூச்சல் போட்டாள், "குழந்தைகள் என்றால் விளையாடத்தான் செய்வார்கள். வண்டிகள் முக்கியமா அவர்கள் விளையாட்டா?" என்று கேட்டாள்.

"முதலில் இதற்கு ஒரு விதியை போடுங்கள்," என்று உள்ளே சென்று தன் கணவனை உசுப்பேற்றினாள் நளினி .

"இந்த முறை ஏ ஜீ எம்மில் நிச்சயமாக இதைப் பற்றி எடுத்துப்  பேசப்போகிறேன்!" என்று அவனும் அதைக் குறித்துக்கொண்டான்.

ஒரு மாதம் கழித்து ஏ ஜீ எம் கூட, அவன் ஒரு பெரிய பட்டியலே வைத்திருந்தான். செயலாளர் என்பதால் அவன் முதலில் தன் பேச்சை ஆரம்பிக்கும் பொழுதே பீடிகைப் போட்டான், "இந்த ஒரு வருடத்தில், சில நேரங்களில், படித்தவர்களுடன்தான் வாழ்கிறோமா என்று கூட சந்தேகம் தோன்றுகிறது."

அங்குக் கூடி இருந்த சக வாசிகள் மெளனமாக பார்த்திபனைப் பார்த்தார்கள். அவன் தான் கண்டக் குறைகளை எடுத்துக்கூறினான் - வண்டி நிறுத்தும் விதம், ஓட்டி வரும் விதம், குழந்தைகள் விளையாடுவது, குப்பையை பிரித்து வைக்காமல்... என்று அடுக்கிக்கொண்டே சென்றான்.

வந்திருப்பவர்களுக்கு  சிறிய வயதில் ஆசிரியர் நிற்கவைத்து மானத்தை வாங்குவது போல் தோன்றியது.

அடுத்தது கணக்கு வழக்குகள்  வழங்கப்பட்டன, அதைப்பற்றிய  சர்ச்சைகள் நடந்து அந்த குடியிருப்பில் வசிப்பவர்களின் குறைகளை பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்தது. நிருபமா எழுந்தாள், "நம் குடியிருப்பில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஏதாவது விதிகள் இருக்கின்றனவா? என் பக்கத்து வீட்டில் புதிதாக நாய்  வளர்க்கிறார்கள். அது சதா குரைத்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் கதவு திறந்திருந்தால் அது வெளியே வந்துவிடுகிறது, பார்ப்பவர்கள் மீதெல்லாம் பாய்கிறது. 'கடிக்காது,' என்று வளர்ப்பவர்கள் கூறினாலும், வருபவர்கள் எல்லோருக்கும் அது தெரியும் என்று கூற முடியாது. பால்காரன் மூன்று முறை பாலை கொட்டியிருக்கிறான். ஒரு நிறை மாத கர்பிணி கீழே விழ இருந்தாள்... என் வீட்டு வாசலில் சதா அது அசுத்தம் செய்கிறது... இதற்கு என்ன விதி?"

ஒருவர் குறும்புத்தனமாகக் கேட்டார், "நாய் வளர்பவரிடம் கூறினீர்களா?"

"கூறினேன்."

"அதற்கு அவர் என்ன பதில் கூறினார்."

"அது நாய் இல்லையாம், அவர் குழந்தையாம். அப்படித்தான் இருக்குமாம், சரியாகிவிடுமாம்."

"செல்லப்பிராணிக்கு விதி என்று கூறினால் அதற்கு அது புரியுமா?" என்று நக்கலடித்தான் பார்த்திபன்.

"அதற்கு புரியும் என்று நான்  எதிர்பார்க்கவில்லை. வளர்ப்பவனுக்குத்தான் புரிய வேண்டும். அதற்குச் சரியான பயிற்சி அளிக்க வேண்டும். நாலு பேருக்கு உபத்ரவமாக இருக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்," என்று பளிச்சென்று நிருபமா கூறினாள்.

எல்லோரும் பார்த்திபனைப் பார்த்தனர். அவன்தான் நிருபமாவின் பக்கத்து வீடு என்று எல்லோருக்கும் தெரியுமே. நளினி கோபத்தில் எழுந்தாள். "மனிதத்தன்மையே இல்லாதவர்கள் நீங்கள் எல்லோரும்," என்று ஏசிவிட்டு, "வாங்க, கமிட்டியம் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்," என்று அவனை இழுத்துக்கொண்டு தன் வீட்டுப்பக்கம் சென்றாள்.

சில நேரங்களுக்கு சங்கடமான மௌனம் நிலவியது. அதைப் போக்க யாரோ சிரித்தார். "ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் சற்று தன் வீட்டையும்  கவனித்துக் கொள்ள வேண்டும்."

எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர். பார்த்திபனுக்கும் நளினிக்கும் அந்தச் சத்தம் கேட்டது. அவர்கள் வீட்டில் வளரும் ராக்கி என்கிற நாய்குட்டி அந்தச் சத்தத்தைக் கேட்டு சேர்ந்து குரைக்க ஆரம்பித்தது.

அதுவும் அவர்களைக் கேலி செய்வது போல் தோன்றியது.

"யாருடனும் ஒற்றுமையாக வாழத்தெரியாதவர்கள்," என்று நளினி கூறிக்கொண்டாள். அது தனக்குத்தான் முதலில் பொருந்தும் என்று கூட தெரியவில்லை அவளுக்கு.


No comments:

Post a Comment