Saturday, January 12, 2013

பொங்கல் தினத்தன்று சில சிந்தனைகள்

கதிரவன், மழைமேகம், செம்மண் கூடி
பூமி விளையும் அழகினை கண்டு
அறுவடை செய்யும் நாளதை குறித்து
வாழ்த்தி பணிந்திடும் திங்களன்று

விவசாயமே நிலைக்குமா என்று அஞ்சும்
நிலைமைக்கு நாம் வந்தது ஏன் என்று
நினைக்க வைக்கும் இந்த நேரத்திலாவது
முழித்துக்கொண்டு யோசிப்போம்

நெசவு, விவசாயம் போல பழன்தொழில்கள்
இன்று அதை செய்ய ஆட்கள் தேவை
பொறியியலில் போய் விழுபவர்களுக்கு
நல்ல தரமான வேலை தேவை

எல்லாவற்றிற்கும் விலை போடும்
மனிதர்களிடையே மண்ணின் மதிப்பு
அதை விற்று கிடைக்கும் பணமே என்றால்
'சோத்துக்கு என்ன வழி' என்று கேட்டு பயனுண்டோ?
 

Friday, January 4, 2013

பொருளாதாரம் தரும் சுய-நம்பிக்கை

ஒரு பெண் முதலில் தன் தந்தையின் பாதுகாப்பிலும் பிறகு கணவன் அல்ல மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவள் என்ற ஒரு நிலைமை இருக்கும் வரை அவளை ஒரு பொருளாகவும், ஆண்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாகவும் தான் கருதப்படுவாள். அவளுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவளுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களின் மரியாதையும் கிடைக்கும். இதையே சமூக சேவகர்கள் சொல்லி வருகிறார்கள். இதையே பாண்டிச்சேரியில் என் கண்ணால் பார்த்தேன்.

ஒரு சமூக சேவை நிறுவனம் பெண்களுக்கு தொழில் பயிற்சி கொடுத்து,தேவையான உதவியும் கொடுத்து வருகிறது. பல பெண்கள் தன் தொழிலில் நிபுணர்களாக இருப்பதால் அவர்களை மற்றவர்களுக்கு தேர்ச்சி கொடுப்பதற்கு அந்த ஊர் அரசாங்கம் அவர்களை அழைத்து அவர்களுக்கு சம்மானமும் கொடுக்கிறது. சிறு தொழில்கள் தான். ஆனால் அதில் வரும் வருமானத்திலிருந்து தன குடும்பத்தையும் காப்பாற்றி அந்த தொழிலை வளர்க்கவும் செய்கிறார்கள். இதனால் அந்த பெண்களின் சுய நம்பிக்கையும் அதிகரித்து அந்த பெண்கள் இன்று அவர்கள் கிராமங்களில் பல மற்ற சமூக வேலைகளில் ஈடுபட்டு மற்ற பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தன் பெண்களை படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும் கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கை இந்த தாய்மார்களில் வந்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு பாரதத்தின் எல்லா கிராமங்களிலும் வந்து விட்டால் அந்த வீட்டில் வளரும் ஆண்களிலும் பெண்களைப்பற்றின அபிப்பிராயம் மாறி பெண்களிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி இயல்பாகவே வந்து விடும் அல்லவா? இதற்க்கு நாம் வேண்டிய முயற்சி செய்வோமே.

Sunday, December 23, 2012

எங்கே மனிதன்?

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மனிதனை குறிக்கும் பண்பாடு?

கருணை என்ற அந்த குணம்...
அதுவே அல்லவோ மணம் தரும்?

ஆறாம் அறிவு சிந்தனை செய்ய
அல்ல தீய வழிகளை கைப்பட?

மனிதனே படைப்பில் உயர்ந்தவன் என
நினைத்திருக்க இது விந்தை என்ன?

மிருகத்தை விட கொடுமை இவனை
அரக்கனை போல மாற்றிவிட!

மனிதத்தன்மையை தேடும் என்னை
அடி பைத்தியம் என்று கேலி செய்ய.

Saturday, December 15, 2012

துப்பாக்கி கலாசாரம்

இந்த பயங்கரம் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிருது இந்தியாவில் இல்லை என்று நாம் பெருமை படலாம். ஆனால் மற்ற விபத்துகள் இங்கு தானே நடக்கிறது! ட்ரக் அடியில் மூன்று வயது குழந்தை, திறந்த கிணற்றில் குழந்தை பலி, பள்ளியில் தீயினால் குழந்தைகள் மரணம், வண்டி விபத்தில் குழந்தைகள் பலி... இப்படி பல பொறுப்பில்லாத மரணங்களின் கணக்கெடுத்தால், நாம் தான் பந்தயத்தில் வெல்வோம் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்னொரு விஷயம். அந்த ஊரில் இருக்கும் துயரங்களும், எதிர்பார்ப்புகளும், அக்கரையின்மயினால் வரும் மனோதத்துவ வியாதிகளும் நம் ஊரில் பரவ எத்தனை நாள் ஆகப் போகிறது? இப்பவே பெற்றோர்களுக்கு நேரம் இல்லாததால் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் கலாசாரம் மாறி, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தால் பொருப்பு தீர்ந்தது என்று நினைக்கும் இந்த காலத்தில், மகன் கேட்டான் என்று துப்பாக்கி மாதிரி வேற ஏதாவது வாங்கி கொடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நீ எது செய்தாலும் தவறில்லை, மற்றவர்கள் செய்வதுதான் தப்புய என்று நாம் சொல்லி அவர்களுடைய சுய நம்பிக்கையை வளர்க்கிரோமாம். யாராவது நீ செய்வது தப்பு என்று சொன்னாலே கொலை வெறிதான் பொங்குகிறது. அடி, உதய், குத்து, கொலை என்று செய்திகள் தினம் பதிரிகயில் படிக்கிறோம். இதை நாம் இப்பவே தடுத்து, கருத்துடன் குழந்தைகளை வளர்க்கவில்லை என்றால், அமெரிக்கர்களாகவே மாறுவோம், சந்தேகமே இல்லை!

Saturday, December 1, 2012

கிராதகி

செய்கிறாயா அடிக்கட்டுமா!
படுத்தாதே உதைப்பேன்!
சொன்ன பேச்சை கேள்
சாமி கண்ணை குத்திடும்

இத்தனை கொடூரம்!
எத்தனை நாராசம்
இதெல்லாம் சொல்லும்
தாயின் மனம்

வெந்து புண்ணாகி
கண்ணீர் வடித்து
ஐயோ நானும் தாயா
கிராதகி என்று புலம்பும்

அடியை மறந்து
கண்ணை துடைத்து
அந்தக் குழந்தை
அயர்ந்து மடிமேல் சாயும்

அச்சமயம் தன்னை
அறியாமல் அவள் கை
தன் சேயை அணைக்கும்
மனதில் இன்பம் பரவும்

எதனால் தான் தாயை
தெய்வம் என்கிறார்கள் என்று
சந்தேகம் தோன்றிய அதே மனம்
ஆதரவாய் சிசுவை கட்டிக்கொள்ளும்

Sunday, November 11, 2012

பட்டாசு வைபோகம்

வெடிக்கு பயந்து, என்னிடம் இருக்கும் சக்கரம் புஸ்வாணம் எல்லாவற்றையும் வெளிச்சம் இருக்கும் பொழுதே ஏத்தி விட்டு, மற்றவர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது அறையில் கதவை சாத்திக்கொண்டு, காதலி மூடிக்கொண்ட நாளும் நினவிலிருக்கறது.

பிறகு கையில் ஊசிப்பட்டாசை கொளுத்தி வீரமாக எறிந்த ஞாபகமும் இருக்கு.
புச்வாணம் முகத்தில் வெடித்து கண்ணாடி சிதறியதும் ஒரு அனுபவம்.
அந்த வெடியை கொளுத்தி காதை மூடி தூர ஓடிய நினைவுகளும் முகத்தை மலரச்செய்யும்.

இப்பொழுது அடுத்த தலைமுறை மிக உற்சாகத்துடன் பட்டாசு வெடிப்பதை பார்க்கும் பொழுது, வருடத்தில் ஒரு நாள் அவர்களை தடுப்பதா என்ற ஒரு சிந்தனையும் மனதை தாக்குகிறது. நாம் வருடம் முழுதும் நம் சுற்று வட்டாரத்தை நாசம் செய்வதை விடவா இந்த குழந்தைகள் ஒரு நாளில் செய்து விடுவார்கள்?

அவர்கள் சுதந்திரமாக, ஜாக்ரதையாக பட்டாசு வெடிக்க இடம் விடாமல் கட்டிடங்கள் கட்டியது யார்? எல்லா இடங்களிலும் நடக்க கூட இடம் விடாமல் வண்டிகளை நிறுத்தியது யார்?

Friday, October 26, 2012

இது ஒரு டைம் பாஸ்

"சாரி, நாங்க ஆரம்பிக்க லேட் ஆயிடுச்சு. ஆனா நீங்க சீக்கரம் முடிச்சிடறீங்களா?" என்று அந்த நடன நிகழ்ச்சி தலைவர் வந்து கூறும் பொழுது, அவனுக்கு ரொம்ப கோவம் வரத்தான் செய்தது. ஆனால் பல்லைக்கடித்துக்கொண்டு சரி என்று தலை ஆட்டினான். இதுதான் எல்லா இடங்களிலும் வழக்கமாக ஆயிற்றே!

நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்னாலிருந்து - "ஒரு மணிநேர கச்சேரி, 12 பேர்களாவது ஆட வேண்டும்... ஒரு 8 பாட்டுகள் இருக்குமா? கொஞ்சம் கிளாச்சிக்கல், கொஞ்சம் விறுவிறுப்பா சில பாட்டுகள் - இப்படி நல்ல ஒரு மிக்ஸ் இருக்கட்டும்," என்றெல்லாம் வறுத்தி எடுப்பார்கள். பிறகு, "ஆடுபவற்கள் எல்லாம் ப்ரொபெஷ்னல் தானே? ஓஹ்! இவ்வளவு கட்டுப்படியாகாதே! கொஞ்சம் கொறச்சுக்கொங்க! ஆனா 8 பாட்டாவது வேணும்... சரிதானே?" என்று பேரம் பேசுவார்கள். "அப்பொறம், உடை, ஆபரணமெல்லாம் புதுசா, பளிச்சுன்னு இருக்கணம்... சரியா?" இப்படி வேற ஒரு கவலை.

"அண்ணா! கால் சுளுக்கின்றிச்சு அண்ணா!" என்று ஆடுபவர்களில் ஒருவன் திடீரென்று ஜகா வாங்குவான். "ரொம்ப ஜுரம் அண்ணா..." என்று ஒருத்தி மூக்கை உருஞ்சுவாள். எப்படியோ ஒன்று, எல்லாரும் தயாராக நிற்கும் வேளையில், பார்பவர்கள் மெதுவாக, ஆடி அசைஞ்சு வந்து சேரும் வேளையில் நிகழ்ச்சி நடத்துபவர் மணிக்கட்டைப்பார்த்துக்கொண்டே - "சில பாட்டுகளை கட் செஞ்சிடுங்க. அடுத்தது சாப்பிட போவாங்க, பசிக்குதாம்" என்றும் பொழுது இதை ஞாபகப்படுத்தி, தானும் தன் குழுவும் கஷ்டப்பட்டதை ஒரு மாசம் ஒழைச்ச்சதை நினைத்தால் ச்சே என்றாகி விடும். முடிந்தவுடன், "அடடா, கிளாச்சிகால் பீஸ் இன்னும் ஒன்னு இருந்திருக்கலாமே," என்று வேற வேதனைப்படுவது போல ஒரு பாவனை!

அவனுடை நேரத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பு இவ்வளவுதானா என்று தோணும். கலை என்ன ஒரு வெறும் டைம் பாசா என்றுக்கூட வெறுத்துப்போகும். ஆனால் பிழைப்பதற்கு இது ஒரே வழி... இதை தெரிந்துதானே இந்த வழியை நாம் மேற்கொண்டோம் என்ற விவேகம் அவனை இதை பொறுத்துக்கொள்ள செய்கிறது!