Thursday, September 27, 2012

வாழ்க்கைக்கல்வி - கவிதை

கல்லில் தடுக்கி விழுந்து எழுந்து
அதனை நகர்த்தி நடக்கக் கற்றேன்

மழையில் நடந்தால் இன்பம் எனினும்
ஒதுங்கி நின்று ரசிக்கக் கற்றேன்

வெயிலில் நடந்து வியர்க்கும் என்று
நிழலில் மறைந்து இயங்கக்கற்றேன்

சொல்லில் பொல்லாத நஞ்சைக்கேட்டு
அந்த வஞ்சனையை அஞ்சக்கற்றேன்

சிரிப்பே உயர்ந்த நகைஎன்றறிந்து 
அதனை அணிந்து திருப்திப்பெற்றேன்

வாழ்க்கையே கற்ப்பிக்கும் பாடமென்று
அதனைப்படித்து வாழக்கற்றேன்  

Sunday, September 16, 2012

காசேதான் கடவுளடா

நான் ஒழைச்சு சம்பாதிக்கிறேன். அந்த காசுல என் குடும்பம் நடக்கறது. எனக்கு தான் முதல் மரியாதை என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஆணவத்திற்கு இன்று சவால் விடுவதுப்போல் கல்லூரி படித்து முடித்த உடனேயே நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஒரு சவால்.

இதை ஒரு பத்திரிகையில் படிக்கும்பொழுது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பல ஆண்கள் தற்கொலைசெய்துக்கொள்கிறார்களாம்! தன் மகனோ மகளோ தன்னைவிட அதிகமாக சம்பாதித்து தன்னை அவமதிக்கிறார்கள் என்ற கவலைப்போல!

ஆனால் சிறு வயதிலேயே அந்த பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு கற்றுக்கொடுப்பது யார்? அன்பும் ஆதரவும் கொடுத்திருந்தால் இன்று யார் சம்பளம் யாரைவிட பெரிது என்ற கேள்வி எழுந்திருக்குமா? தன்னுடைய அடையாளமே அந்த வாங்கும் சம்பளமும் அடையும் கவுரவமும் தான் என்று நாம் நினப்பதைத்தானே அந்த குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்? அப்போ அவர்களுக்கு சரியான வழிகாண்பிப்பது நம் கடமை அல்லவா? பணம், சம்பாத்தியம் முக்கியம் என்றாலும் அதுவே வாழ்க்கை ஆகி விடுமா?

Sunday, August 26, 2012

இயற்க்கை செய்யும் வேடிக்கை

 வளைந்து நெளிந்து ஓடும் பாதை
மலையை துளைத்த  நதிப்போல்
மரங்கள் பூக்கள் செடிக்களால்
அலங்கரித்த காவியமாய்

மேகங்களின் மூட்டம்
உருவங்களின் மாயம்
வெள்ளியின் ஓரத்துடன்
ஜொலிக்கும் பஞ்சு மெத்தை

இங்கும் அங்கும் தெளிவாய்
சிறிய அலைகள் மிதக்க
பளிச்சென்று கண்ணாடிபோல்
குட்டைகளும் ஏரிகளும்

பறவைகளும் வியக்க வைக்கும் 
எத்தனை வகையில் பறக்கும்
நிறங்களும் உருவங்களும்
படைத்தவனை போற்றும் 

குளிர்ந்த காற்று வீசும்
மிதமாய் மனது சிலிர்க்கும்
இனிய மணம் மிதக்கும்
மனதை அமைதிப்படுத்தும்

இரண்டே நாள் போதும்
இந்த அனுபவம் புதுப்பிக்கும்
தளர்ந்த மனதைக்கூட
மறுபடியும் ஊக்கவிக்கும்

Sunday, August 12, 2012

வாசம்

 என்றோ மலர்ந்த  புஷ்பம் 
அதன் வாசம் இன்றும்
எங்கோ வீசும் மெலிதாய்
மனதின் மூலையிlலே

மாயமாய் மறையும்
மறுபடியும் திரும்பும்
இன்பமான வேதனையை
இனிதாய் களறும்

நினைவுகளின் பொக்கிஷம் 
இதமாய் மிதக்கும்
அதைப் பற்ற கை எழும்
தயக்குத்தடன் பின் வாங்கும்

நினைவுகளை பஞ்சுப்போல
பறக்க விடுவதில் காணும் சுகம்
அதை மனதில் அடைத்து
நாற வைப்பதில் கிடைக்காது

Sunday, July 29, 2012

பேட்டி

"என்ன படிச்சிருக்கீங்க?" அவள் கேட்டாள்.

"பீ.ஈ" அவன் சொன்னான்.

"இந்த வேலைல எத்தன நாளா இருக்கீங்க?"

"மூணு வருஷமா..."

"இது உங்க முதல் வேலையா? என்ன சம்பளம்? அப்ரைசல்ல என்ன சொன்னாங்க?"

அவன் முழித்தான். "நல்ல வேலை பண்ணறேன்னு..."

"வெளி நாட்டுக்கு அனுப்புவாங்களா? அதுக்கு சம்பளம் எப்படி?"

"ரெண்டு சம்பளம்..."

"ம்ம்ம்..." அவள் இன்னும் மிருதுவான குரலில் பேசினாள். "நான் வேலை செய்வத பத்தி என்ன நினைக்கிறீங்க?"

"அது உங்க இஷ்டம்."

"எனக்கு வெளியூர்ல வேலை வாய்ப்பு கடச்சா நீங்க  ஒத்துப்பீங்களா? நீங்களும் கூட வருவீங்களா?"

"ம்ம்..." அவன் தயங்கினான். இந்த கேள்வி அவனை குழப்பியது. பெண் பார்க்க வந்த இடத்தில் வேலைக்கு பேட்டிக்கு வந்தவனை கேள்வி கேட்பதைப்போல கேட்டுவிட்டு இப்படி கேட்டதும் அவனுக்கே ஒரு நிமிடம் தடுமாற்றம். ஆனால் அவன் தாய் சொல்லி அனுப்பியிருந்தாள். நிறைய தேடிய பிறகு இந்த பெண் வீட்டார் அவனைப்பார்க்க ஒப்புக்கொண்டிருந்தார். "எதையாவது ஒளறி கெடுத்துடாத!" என்று எச்சரித்து அனுப்பியிருந்தார். "உங்களுக்கு அதில்தான் இஷ்டம்னா எனக்கு ஓகே" என்று அரைகுறை மனதுடன் சொன்னான். அவனுக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் ஒற்றுமை வேற்றுமைகள் தெரிந்துக்கொள்ளாமல் எப்படி இதுக்கு ஒத்துக்கொள்வது "உங்க ஹோப்பீஸ் ஒண்ணுமே சொல்லலையே."

"அதான் வாழ்க்கையே இருக்க தெரிஞ்சிக்க... அதுக்கு என்ன அவசரம்?" என்று அவன் வாயை பொத்தினாள் அவள். "ஓ, முக்கியமா, சமைக்க தெரியுமா? பிகாஸ் எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் இன் மானேஜிங் தி ஹவுஸ்."

என்ன ஒரு அழகான சிரிப்பு சிரித்தாள்! 


Sunday, July 22, 2012

குழப்பம் - சிறுகதை


சிறுப் பிள்ளைகள், பந்து விளையாடிக்கொண்டிருந்தன. பந்து வீசியப் பையன் ஸ்டும்ப்சை குறிப் பார்த்து வீசினான். அவன் குறி தப்பவில்லை. "போல்ட்!" என்று எல்லாரும் கையை தூக்கினர்.

பேட் செய்துக்கொண்டிருந்தப் பையன் "இல்லை! சீடிங்!" என்றான்.

"என்னடா சீடிங்? நேர விக்கெட்ல பட்டுது," என்று ஒரு பையன் வந்தான்.

பேட்டால் அவன் நீட்டிய கையை அடித்து அந்தப் பையன், "இல்ல! சீடிங்" என்று சாதித்தான்.

"டேய் மறுபடியும் அடிக்கறான்! வாங்கடா அவங்க அம்மாகிட்ட போய் சொல்லலாம்." எல்லாப் பிள்ளைகளும் கிளம்பின.

அந்தப் பையன் ஓடிக்கொண்டே தன் அம்மாவிடம் சென்று "அம்மா, எல்லாரும் என்ன வளையாட விடமாட்டேங்கறாங்கமா," என்று அழுதான்.

"இல்ல ஆண்டி அவன்தான்..."

"என் பையன போட்டு எப்பப்பார்த்தாலும் ஏமாத்தாதீங்க!" என்று விஷயம் தெரிந்துக்கொள்ளாமலேயே அந்தத் தாய் தன் மகனுக்காக பறிந்து வந்தாள்.

"இல்ல ஆண்டி அவன்தான் பேட்டால் அடிச்சான்." தன் சிவந்தக் கையை அடி வாங்கிய பையன் காட்டினான்.

அந்தத்  தாய் திரும்பிப் பட்டென்று தன் மகனை அடித்தாள். எல்லா பிள்ளைகளும் வாயடைத்து நின்றன. "இனிமே அடிப்பயா?"

அந்தப்பையன் அழுதுக்கொண்டே தலையசைத்தான். "எல்லாரும் சேர்ந்து விளையாடுங்கள். மறுபடியும் அவன் அடித்தால் என்னிடம் சொல்லுங்கள். ஆனால் வளையாட்டுல செர்த்துக்கணம், சரியா?" என்று சொல்லி அந்தத்தாய் தன் பொறுப்பை நிறைவேற்றின திருப்தியில் தன் வேலைகளை கவனித்தாள்.

அடித்து "அடிப்பது தவறு" என்று கற்றுக்கொடுக்கும் இந்தத்தாய் வாழ்க.

Saturday, July 14, 2012

தனிமையும் சந்தேகங்களும்

இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி - பல படித்தப்பெண்கள் இல்லத்தரசியாக மட்டும் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டு, அந்த வாழ்க்கை கசந்துப் போய் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று. மேலோட்டமாக பார்த்தால் இப்படிப்பட்ட பெண்களை பார்த்து கோவம் தான் வரும். ஆனால் யோசித்துப்பார்த்தால் பரிதாபமாகவும் இருக்கிறது.

மணமாகிய முதல் பல வருடங்களில் பொறுப்புகள் இருக்கும் - அது உண்மையே. ஆனால் முன் மாதிரி அதுவே வாழ்க்கை ஆகும் அளவிற்கு இல்லை. நவீன உபகரணங்கள், தனி குடுத்தனம் - வீட்டு பொறுப்புகளை ஒரு விதத்தில் சுலபமாகி விட்டன. தனிமையும் தான் அதிகரித்துவிட்டது. அதனால்   தானோ என்னமோ, துணிமணி வாங்குவதே சில பெண்களுக்கு பொழுதுபோக்காகி விட்டது. அப்படி செய்ய முடியாதவர்களோ அல்ல விரும்பாதவர்களோ மனதை தளரவிட்டு வாழ்க்கையையே துறந்துவிடுகிரார்கள்.

தவறுதான். ஆனால் இதை தவிர்ப்பதருக்கு வழிகள் தேவை. வெறும் "இப்படிக்கூட செய்வார்களா" என்று கேட்பதில் ஒரு பயனுமில்லை. வெளியில் போய் வேலை செய்வது ஒன்று தான் வேலை இல்லை. வீட்டு வேலை மட்டும்  செய்வதில் மனதில் நிம்மதி இல்லை. அதனால் மற்ற கலைகள், திறமைகளையும் சிறிய வயதிலேயே வளர்க்க வேண்டும். அந்த திறமைகள் மனதில் நிம்மதியையும் கொடுக்கும், தன்னம்பிக்கையையும் வளரச்செய்யும். குழந்தைகள் இறக்கை முளைத்து கூட்டை விட்டு பறந்த பிறகு இந்த திறமைகளே கை கொடுக்கும்...