Tuesday, May 14, 2013

கையளவு சிறிய மனசு - கவிதை

கையளவு சிறிய மனசு 
அதில் வானத்தையும் விட 
அதிக  ஆசை
பரந்த வெளியில் வீசும் 
அந்தக் காற்றை  ஈர்த்து 
கட்டுப்படுத்தும் தேஹம் 

உலகெங்கும் ஓடும் நீர் 
அதைப் பானைபோல 
அடக்கும் இந்த மண்ணுடல் 

சடலத்தை எரிக்கும் 
அதே தீயில் எரியும் 
இந்த பூபோன்ற நெஞ்சம் 

உலகத்தையே அடக்கும்
இந்த உடலையே ஆட்டும்  
அந்த கையளவு சிறிய மனசு 

Sunday, April 28, 2013

வாழக்கை சக்கரம் - கவிதை

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்?

காலம் மாற மாற
பழமை உதிர்ந்து விழ  
முடிந்ததோ வாழ்க்கையே 
என்ற ஐயம் மெல்ல எழ 

நாற் புறமும் வெறிச்சிட   
சூன்யமும் நிசப்தமும் 
மூச்சே நின்றுவிட்டதோ 
என்ற பயம் சூழ 

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்கள்?

இந்த பசுமை 
எங்கும் பரவ 
என்றும் நிலைக்கும் 
என்ற நம்பிக்கை  தோன்ற 

அதை ஒழிக்கும் பொருட்டு 
வாழ்க்கை தளர 
சக்கரத்தை சுழட்டும்  
கை எது என்று கேட்க 

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்கள்?

Friday, April 19, 2013

சோதனை - சிறுகதை



"அங்க என்ன செய்யற?" அம்மா மகளைக்கேட்டாள்.
ஐந்து வயது மகள், தன் பிஞ்சு போல் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளயாடிக்கொண்டிருப்பதை பார்த்து திரும்பிய அவள், ஏதோ கண்ணை உறுத்த உற்று கவனித்தாள்.
அந்த பொம்மையின் காது, மூக்கு, வாயில் எல்லாம் ஏதோ ஒரு சிறிய பொருள் சொருகி இருந்ததது. அந்தச் சின்ன்ப்பெண் அந்த பொம்மையின் கால்களுக்கு இடையே எதையோ சொறுகப்பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்ன செய்யற?" என்று மனம் படபடக்க அம்மா கேட்டாள்.
"பக்கத்து வீட்ல புதுசா வந்திருக்கர அங்கிள் இந்த வெளயாட்ட சொல்லிக்கொடுத்தாங்கமா. ஆனா இந்த பொம்ம சரியா இல்ல. இந்த சின்ன ஊசிக்கூட உள்ள போக மாட்டேங்குது பாரேன்!"
அம்மா மெதுவாக உட்கார்ந்து  "நீ ஒன் வயசு பசங்களோட மட்டும் தான் வளயாடணம், சரியா?"
"அந்த அங்கிள் தான் கூப்படறாம்மா. என்க்கும் பிடிக்கல. ஆனா புதுசா ஏதாவது கத்துக்கறச்ச அப்படித்தான் இருக்கும்னு சொன்னார். அப்படியாமா?" அந்த குழந்தை சொல்லும்பொழுது விம்மிக்கொண்டு அழுகை வந்தது.
தன் மகளை காப்பாற்றி விடுவாலள் அவள். ஆனால் மற்ற குழந்தைகளிற்கு என்ன வழி?

Saturday, April 6, 2013

முடிவின் முடிவு - சிறுகதை

"தேவையா? இப்படி படிச்சு நாளைக்கு என்ன மாதிரி, எவனோ பணக்காரன் ஆறதுக்கு இவன் மாடா கழுதையா ஒழைக்கணம்," கணவன் வருத்தததுடன் கேட்டான்.

மனைவியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. "அவன் காதுபட இத சொல்லிடாதீங்க! அப்பா இஞ்சினியர். நீயும் நல்லா படிச்சா அவர் பேர காப்பாத்தலாம்னு சொல்லி வெச்சிருக்கேன். நீங்க எப்படி சின்ன வயசுல படிச்சு உங்க ஊர்லையே பெரிய மனுஷனா கருதப்பட்டீங்கன்னு சொல்லியிருக்கேன். உங்கள மாதிரி வரணம்னு அவன் மனசுல பதிஞ்சிருக்கு."

பெருமூச்சு விட்ட கணவன், "அவனுக்கு என்ன பிடிக்கறதுன்னு கேட்டுண்டயா? எகோநோமிக்ஸ் பிடிச்சிருக்குன்னா அதுலயும் இப்போலாம் நல்ல ச்கோப்."

முகம் சுளித்தாள் மனைவி. "ஒங்களுக்கு ஒங்க மகன் மேலையே நம்பிக்க இல்லன்னு தெரியறது. பாருங்கோ எப்படி படிக்கறான்னு! நீங்களே ஆடிப்போக போறீங்க."

மனதில் ஒரு கலக்கம் எழுந்தாலும், மனைவி தெரிந்தே எல்லாம் செய்கிறாள் என்று தோணி அவன் மறு பேச்சு பேசவில்லை. நேரம் கிடைத்தால் அவனே மகனுக்கு உதவி செய்திருப்பான். ஆனால் வேலை பிழிந்து எடுத்தது அவனை.

இன்ஜினீயரிங் ரிசல்ட் வரும்  அன்று அவனுக்கு அவன் மனைவி தொலைபோசியில் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அழுவது மட்டும்தான் தெரிந்தது. உள் மனம் ஏதோ விபரீதம் நடந்ததை புரிந்துகொண்டது. தன் மேலாளரிடம் சொல்லிக்கொண்டு அவசரமாக வீட்டுக்கு திரும்பும் வழியில் தன் மகனுக்கு ஏதோ நேர்ந்ததிருக்கிறது என்று மெதுவாக அவன் மனைவியின் குழம்பிய வார்த்தைகளிலிருந்து அர்த்தம் கொண்டான். மனம் படபடத்தது.

வீட்டு வாசலில் சேர்ந்திருந்த கும்பல் அவன் பயந்ததை உறுதிப்படுத்தியது. அவனைக்கண்டு எல்லோரும் வழி விட்டார்கள். மனைவி எங்கிருந்தோ பறந்து வந்து அவனைக்கட்டிக்கொண்டு ஓலமிட்டாள். அதிர்ந்து நின்ற அவன், மெல்ல தன் மகனின் உடல் இருந்த இடத்திற்குச்சென்றான். 

மெதுவாக, தன் கையில் யாரோ திணித்த கடிதம் ஒன்று இருப்பது அவன் நினைவிற்கு எட்டியது. ஆனால் அதை படித்தால் அர்த்தம் புரியவில்லை.

'அப்பா, உங்கள் பேரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. நீங்கள் எதிர்பார்த்த மாதிரி என்னால் இஞ்சினியரிங்கில் மதிப்பு பெற முடியவில்லை. உங்களுக்கு அவமானத்தை சம்பாதித்து கொடுத்து உங்களை ஏறெடுத்து பார்க்க எனக்கு தைரியமில்லை. என்னை மன்னித்து விடுங்கள்.'

அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்தான்.

Saturday, March 23, 2013

இந்திய பண்பாடு...?


நான் நம் இலக்கியத்திலிருந்தும் நம் புராண கதைகளிருந்தும் கற்றுக்கொண்டவை - அதிதி தேவோ பவ; பெண்கள் தாய், லக்ஷ்மி; கண்ணியமும் கட்டுப்பாடும் நம் இலக்கணங்கள்.

ஆனால், இன்று ஹிந்து பேப்பரில் ஒரு வெளிநாட்டுப்பெண்மணி எழுதி இருக்கும் ஒரு கட்டுரையை படிக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. அவர் தன்  தோழிகளிடம் நம் நாட்டில் வரும் பொழுது எழும் எண்ணங்களைப்  பற்றி கேட்டார். அதற்க்கு அவர் தோழிகள் சொன்னது, இந்தியாவில் வரவேற்பு பிரமாதம். பலர் மிக பணிவுடனும் அக்கறையுடனும் அவர்களை வரவேற்கிறார்கள். ஆனால், பொது இடங்களில் அவர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது. ஆண்பிள்ளைகள் அவர்களுடன் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்னாள் நம் மத்திய அரசு ஆமிர் கானை வைத்து இந்த அதிதி தேவோ அவ என்ற நம்முடைய கலாச்சாரத்தை நினைவூட்டினார்கள். அதில் ஏதும் பயன் இருந்ததாக தெரியவில்லை. 

அது மட்டுமின்றி, நான் யோசித்துப்பார்த்தேன். அப்படியே நான்  இந்த மாதிரி சம்பவத்தின் பொழுது அங்கு இருந்து தடுத்து நிறுத்துப்பார்த்தால், எனக்கு என்ன கதியாகும்?

இப்படிப்பட்ட பயமும் தயக்கமும் ஏன்? ஏனென்றால் பல வருடங்களாக இந்திய பெண்களுக்கே  இப்படிப்பட்ட கீழ்த்தரமான நபர்களை பொது இடங்களில் எதிர்க்க வேண்டியிருக்கு. அந்த மாதிரி சமயங்களில் மற்றவர்கள் ஒரு தெருகூத்து நடக்கும் ஆர்வத்துடன் அதை கண்டு கழிக்கிறார்களே தவிர, கூட நின்று எதிர்ப்பதில்லை. 

இதுவே இந்திய கலாசாரமாகிவிட்டது  என்று கூட சொல்லலாம். தெருவில் கண்ட அநாதையான் ரூபாயை கூட நாம் எடுத்துக்கொள்ள தயங்கி கோவில் உண்டியலில் போடும் பொழுது, ஒரு பெண்ணை நாம்  அவள் உடை, நடை என்று எடை போட்டு அவளை சீண்டி, வேதனை படுத்தலாமா?

இதை எப்படி மாற்றுவது? இதற்க்கு அரசு தவிர நாம் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய வேண்டும்? இது ஒவ்வொரு இந்தியரும் யோசிக்க வேண்டிய விஷயம். 

Monday, March 11, 2013

வாழ்க்கை பந்தயம்

வண்டி மோதியதும்தான் அவன் கண் விழித்துக்கொண்டான். ஆனால் அதற்குள் அவனுடைய பிராணம் அவனை விட்டு விலகியது. திறந்தது உடலுடன் இருக்கும் விழியா அல்ல பிரியும் ஆவியின் கண்களா என்று அவனுக்கு சிறிதுநேரம் புரியவில்லை.

நினைவு பிரிந்தது.

நினைவு திரும்பும் பொழுது தலையில் கட்டு தெரிந்தது. எதிரே மனைவி. கண் அயர்ந்திருந்தாள். மெதுவாக எல்லாம் புலப்பட்டது. ஒரு கணமே கண் மூடியிருக்க வேண்டும். ஆனால் மறுகணமே எதிரே போகும் பெரிய வண்டி மீது அவன் போய் மோதியிருக்க வேண்டும். அவ்வளவு வேலை களைப்பு .

கண் மூடினான். இப்பொழுது கூடு வேலை என்ற வார்த்தை மனதில் களைப்பைதான் உண்டாக்கியது. எவ்வளவோ வேலைகள் இன்னும் முடிக்க வேண்டியது இருக்கு. இப்படி படுத்துக்கிடந்தால் என்ன லாபம்? எழுந்துக்கு முயற்சி செய்தான்.

மனைவி கண் முழித்தாள். அவனிடம் சட்டென்று வந்து, "எதாவது வேண்டுமா" என்று கேட்டாள். அவன் தலையசைத்து மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்.

மனைவி இங்கு வந்திருப்பது அவனுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது, ஆனால் ஆறுதலாகவும் இருந்தது. இந்த வேலையினால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் நடுவில் மனத்தாபம் தான் அதிகமாயிருந்தது.

ஒரு மாதம் கழித்து, மனைவியின் கனிவான பராமரிப்பில் உடல் குணமாகி அலுவலகத்திற்கு திரும்பும் பொழுது ஒரு சின்ன அதிர்ச்சி. அவன் இல்லாத பொழுதிலும் அலுவலகம் இழுத்து மூடப்படவில்லை. அவனுடைய வேலையை வேறு யாரோ மிக நன்றாகவே செய்திருந்தார்.

உன் தோளில் தான் இந்த அலுவலகமே நடக்கிருதா என்று மனைவி இடித்து கேட்ட பொழுது எவ்வளவோ கோபப்பட்டிருக்கிறான். ஆனால் இன்று தான் ஒரு வெறும் கருவி தான், காரணகர்த்தா இல்லை என்று தெரிந்ததும் இத்தனை நாள் தன் வாழ்க்கையை வீணடித்திருக்கிறோம் என்று புலப்பட்டது. ஆனால் தன்னை ஒதுக்கிவிடப்போகிரார்கள் என்ற பயத்தில் அவன் மீண்டும் தன் திறமையை நிரூபிக்க வெகு தீவிரமாக முற்பட்டான்.

Saturday, February 23, 2013

வலது காலின் மஹிமை

முதல் முறையாக ஒரு வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் போது வலது கால் வைத்து வரச்சொல்வது நமது பண்பாடு. என் ப்ளாக்கின் பெயர் வலதுகால் என்று வைத்ததற்கும் அது தான் காரணம். தமிழ் ப்ளாக் என்ற உலகிற்குள் பிரவேசிக்கும்போது வலதுகால் எடுத்து வைப்பதாக எண்ணிக்கொண்டு அப்படி என் ப்ளாகிற்கு பெயர் வைத்தேன். என்னை பல பேர் அந்த பெயருக்கு காரணம் கேட்டதுண்டு.
போன வாரம், நான் ஒரு தமிழ் வாத்தியாரிடம் என் ப்ளாகை படிக்க சொல்லி பெயர் சொல்லும்பொழுது அவர் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது. என்னையும் அறியாமல் இந்த பெயர் எனக்கு வேறு விதத்திலும் பொருந்தும் என்று அறிந்து கொண்டேன்.
அவர் மதுரைக்காரர். இதிலேயே யூகித்துக்கொண்டிருப்பீர்கள் - மதுரையில் சொக்கேஸ்வரர் வலது காலை தூக்கி ஆடுவார் இல்லையா? அவர் நான் அதை மனதில் வைத்துதான் இந்த பெயர் சூட்டினேன் என்று நினைத்துக்கொண்டு என்னை கேட்டதும் மெய் சிலிர்த்துப்போனேன். நான் நடனம் ஆடுவதால் இப்படி பெயர் வைத்தேன் என்று அவர் நினைத்துக்கொண்டு இது ரொம்ப நல்ல பொருத்தம் என்று பாராட்டினார்.
நம்மையும் அறியாமல எத்தனை விஷயங்கள் நமக்கு ஒன்று கூடிவிடுகின்றன!